ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி இல்லாத நிலையில் துரிதமாக செயற்பட்டமை குறித்து வெளிநாடுகள் கூட ஆச்சரிப்பட்டன! -ரணில்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி இல்லாத நிலையில் துரிதமாக செயற்பட்டமை குறித்து வெளிநாடுகள் கூட ஆச்சரிப்பட்டன! -ரணில்


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் நோக்கமும் காரணிகளும் தெளிவில்லை. பிரதான குற்றவாளிகள் யார் என்ற உண்மைகளை ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவிக்க தவறியுள்ளதென முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


இந்திய புலனாய்வு தகவலை எனக்கு அறிவித்திருந்தால் எந்த வழியிலேனும் தாக்குதலை தடுத்திருப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அறிக்கை குறித்து தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் விதமாகவே அவர் இவற்றை தெரிவித்துள்ளார். 


அங்கு அவர் மேலும் கூறுகையில்,


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையானதாக இல்லை. இந்தத் தாக்குதல் குறித்த முக்கியமான கேள்விகளுக்கு ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கையில் பதிலும் இல்லை, ஸஹ்ரான் தரப்பினர் ஆயுதப் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்விகள் உள்ளன.


எவ்வாறிருப்பினும் தாக்குதலை அடுத்து நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகள் நடத்தப்பட்டன; அதனையும் தாண்டி ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன, இந்த ஆணைக்குழு தெரிவுக்குழுவின் விசாரணைகளையும் தாண்டி பல உண்மைகளை வெளிப்படுத்தும் என்றே கருதப்பட்டது. ஸஹ்ரான் யார், அவருடன் நேரடியாக தொடர்புபட்ட நபர்கள் யார்; ஐ.எஸ் அமைப்புடன் எவ்வாறு இவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தினர்; இந்த தாக்குதலின் பின்னணி என்ன; இவையெல்லாம் வெளிவரும் என நினைத்தோம்.


ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் அவை எதுவும் இல்லை. ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருந்தால் ஆணைக்குழுவின் நோக்கமும் பயணமும் தெளிவாகியிருக்கும். ஆனால் ஆணைக்குழுவின் நோக்கம் என்ன என்பது தெளிவில்லை. ஆணைக்குழுவின் அறிக்கையும் தெளிவில்லை.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இந்தியா வழங்கிய புலனாய்வு தகவலை எனக்கோ அமைச்சர்களுக்கோ தெரிவிக்கவில்லை, இதனை நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலும் நான் கூறினேன், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலும் அதனையே எடுத்துக் கூறினேன். எமக்கு அறிவித்திருந்தால் தடுப்பதற்கு ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுத்திருப்பேன். இந்தியாவின் புலனாய்வு தகவல்கள் ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் வழங்கப்பட்டுள்ளன, தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும் தகவல்களை கொடுத்துள்ளனர்.


$ads={1}


அதற்கமைய எமது புலனாய்வுதுறை செயற்பட்டிருந்தால் எம்மால் தாக்குதலை தடுத்திருக்க முடியும். எனினும் தாக்குதல் நடத்தப்பட்டு ஒன்பது மணித்தியாலங்களுக்குள் தாக்குதலுடன் தொடர்புபட்ட சகலரையும் கைது செய்யவும், நிலைமைகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரவும் முடிந்தது. ஜனாதிபதி நாட்டில் இல்லாத போதிலும் நான் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்பட்டதன் விளைவே அதுவாகும். இவ்வாறு துரிதமாக செயற்பட்டமை குறித்து வெளிநாடுகள் கூட ஆச்சரியப்பட்டன.


இப்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்குகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அது குறித்து எதனையும் தெரிவித்து வழக்குகளில் சிக்கிக்கொள்ள நான் தயாரில்லை. எனது தரப்பு நிலைப்பாட்டில் நான் கூறினேன், அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.


-ஆர்.யசி


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.