வாட்ஸாப்பின் புதிய கொள்கை; மே 15க்குள் அப்டேட் செய்யவில்லை எனில் என்ன ஆகும்?

வாட்ஸாப்பின் புதிய கொள்கை; மே 15க்குள் அப்டேட் செய்யவில்லை எனில் என்ன ஆகும்?


வாட்ஸாப் செயலி புதிதாக அறிவித்திருந்த பிரைவசி கொள்கை அப்டேட்டை வரும் மே 15ஆம் திகதிக்குள் சம்மதித்து அப்டேட் செய்ய வேண்டும். அப்படி இல்லையெனில் வாட்ஸாப் கணக்கின் பல சேவைகளை வழக்கம் போலப் பயன்படுத்த முடியாது.

கடந்த 2021 ஜனவரி மாதத்தில் வாட்ஸாப் புதிய தனியுரிமைக் கொள்கை அப்டேட்டை அறிவித்தது.

நாம் கொடுக்கும் விவரங்களான நம் மொபைல் எண், ப்ரொஃபைல் பெயர், ப்ரொஃபைல் படங்கள் சேகரிக்கப்படும். டெலிவரி ஆகாத செய்திகள் 30 நாட்கள் வரை என்கிரிப்ட் செய்யப்பட்ட நிலையிலேயே வாட்ஸாப் நிறுவனத்தின் சர்வரில் வைத்திருக்கப்படும், அதன்பின் டெலிட் செய்யப்படும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

நாம் கொடுக்கும் தொடர்புகள், பணப்பரிமாற்றத் தரவுகள், பேமெண்ட் விவரங்கள், பேமெண்ட் முறை, ஷிப்பிங் விவரங்கள் போன்றவைகளும் சேகரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஐபி முகவரி, பேட்டரி அளவு, சிக்னல் வலிமை, அவர்கள் பயன்படுத்தும் செயலியின் பதிப்பு (வெர்ஷன்), மொழி, நேர மண்டலம், செல்போன் எண், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் பெயர் விவரம் போன்றவை சேகரிக்கப்படும் என்கிறது இந்தக் கொள்கை.

வாட்ஸாப் பயனர் 'In-App Delete' வசதியைப் பயன்படுத்தாமல், வெறுமனே வாட்ஸாப் கணக்கை டெலிட் செய்தால், அவருடைய தரவுகள் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடமே இருக்கும். அதாவது வாட்ஸாப்பை அவர் தன் மொபைலில் இருந்து மட்டுமே டெலிட் செய்ததாகப் பொருள்.

வாட்ஸாப் நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் டேட்டா சென்டர்கள் அமெரிக்காவில் இருப்பதால், தேவைப்பட்டால் இந்தியர்களின் தரவுகள் அமெரிக்காவுக்கு பரிமாற்றம் செய்யப்படும். தேவைப்பட்டால் வாட்ஸாப் ஃ பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகங்கள் எங்கெல்லாம் இருக்குமோ அங்கெல்லாம் கூட தரவுகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும் என பல விஷயங்கள் இதில் கூறப்பட்டிருக்கின்றன.

அதோடு வியாபாரம் சார்ந்து பலரிடம் பேச வியாபாரத்தை எளிமையாக மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சேவையை விரும்புபவர்கள் மட்டும் தேர்வு செய்யலாம், கட்டாயமில்லை.

இந்த தனியுரிமை குறித்து வாட்ஸாப் பயனர்கள் பலருக்கும் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாத காலத்தில் ஒரு விதமான அச்ச உணர்வு ஏற்பட்டதால் பலரும் வாட்ஸாப் செயலியை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க், சிக்னல் செயலியைப் பயன்படுத்தலாம் என கூறினார்.

அப்போது தான் வாட்ஸாப் நிறுவனமே முன் வந்து தங்கள் செயலியின் பாதுகாப்பைக் குறித்து அதிகமாக விளம்பரப்படுத்தி தன்னிலை விளக்கம் கொடுத்தது.

வாட்ஸாப்பில் தனி நபரின் குறுந்தகவல்கள், அழைப்புகள், கால் லாக்குகள், இருப்பிடம், தொடர்புகள் என எல்லாம் பத்திரமாக இருக்கும் என அந்நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியது.

வாட்ஸாப்பில் அனுப்பப்படும் செய்திகள் முழுக்க முழுக்க என்கிரிப்ட் செய்யப்படும். எனவே வாட்ஸ் ஆப் நிறுவனமோ அல்லது வேறு எந்த ஒரு மூன்றாம் நபரோ செய்திகளைப் பார்க்க முடியாது எனக் கூறியது.

இதெல்லம் ஒரு பக்கம் இருக்க, வாட்ஸாப்பில் தனியுரிமைக் கொள்கைகளைப் புதுப்பிப்பதற்கான திகதி தொடக்கத்தில் பிப்ரவரி 08 ஆக இருந்தது, கடுமையான எதிர்வினை காரணமாக தற்போது மே 15 ஆக மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த மே 15-க்குள் வாட்ஸாப்பின் தனியுரிமைக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளவில்லை எனில் என்ன ஆகும்?

1. மே 15- திகதிக்குள் வாட்ஸாப் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை எனில் வாட்ஸாப் கணக்கு டெலிட் ஆகாது. ஆனால் வாட்ஸாப்பின் முழு சேவையைப் பயன்படுத்த முடியாது.

2. சில காலத்துக்கு மட்டுமே கால் மற்றும் நோடிஃபிகேஷன்களைப் பெற முடியும், ஆனால் வாட்ஸாப் செய்திகளை படிக்கவோ அனுப்பவோ முடியாது.

3. மே 15-ம் திகதிக்கு முன் வாட்ஸாப் சாட் ஹிஸ்டரியை எக்ஸ்ஃபோர்ட் செய்து கொள்ளலாம். நம் வாட்ஸாப் கணக்கின் அறிக்கையைக் கூட பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

4. ஒருவேளை கணக்கை டெலிட் செய்துவிட்டால், உங்கள் மெசேஜ் ஹிஸ்டரி, வாட்ஸ் ஆப் குழு, வாட்ஸாப் `பேக் அப்` போன்றவைகள் அனைத்தும் டெலிட் ஆகிவிடும். இவைகளை திரும்பப் பெற முடியாது எனக் கூறப்பட்டுள்ளது

மூலம் - பி.பி.சி

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.