சூயஸ் கால்வாய் வரலாறு: 10 ஆண்டுகள்,15 லட்சம் ஊழியர்கள், ஆயிரக்கணக்கான மரணங்கள்- வியக்கவைக்கும் கதை!

சூயஸ் கால்வாய் வரலாறு: 10 ஆண்டுகள்,15 லட்சம் ஊழியர்கள், ஆயிரக்கணக்கான மரணங்கள்- வியக்கவைக்கும் கதை!

ஐரோப்பாவிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் செல்வதால் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் குறைகிறது. தெற்கு அட்லாண்டிக் மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடல் பாதையில் செல்வதோடு இந்தப் பாதையை ஒப்பிட்டால் சுமார் 7,000 கிலோமீட்டர் பயணம் மிச்சாமாகிறது.

சர்வதேச வர்த்தகத்தில் முக்கியமான ஒரு நீர்வழிப் பாதையாக கருதப்படும் சூயஸ் கால்வாயை அடைத்துக்கொண்டு `ராட்சத கப்பல்` ஒன்று தரைத்தட்டி நிற்கிறது. கால்வாய் மார்க்கத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதால், கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல லட்சம் மதிப்புள்ள சரக்குகள் தேங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தைவானின் `எவர் கிரீன் மரைன்` நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் 400 மீட்டர் நீளமும் இரண்டு லட்சம் டன் எடையும்கொண்ட `எவர் கிவன்` என்ற பெயர்கொண்ட கப்பல் சூயஸ் கால்வாயின் பாதையை அடைத்தபடி தரைதட்டி நிற்கிறது. எதிர்பாராத பலத்த காற்றால் கப்பல் தரைதட்டியதாகக் கூறப்படுகிறது.

சூயஸ் கால்வாய் எங்குள்ளது?

எகிப்திலுள்ள இந்தக் கால்வாய், செங்கடலிலுள்ள எகிப்தின் சூயஸ் நகரின் ஊடாக மத்திய தரைக்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது.

இந்தப் பாதையில்தான் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கு சரக்குகள் நேரடியாகச் செல்கின்றன. இந்தப் பாதையைத் தவிர்த்தால் ஆப்ரிக்காவிலுள்ள `குட் ஹோப்’ முனையை சுற்றிச் செல்ல வேண்டும் அதற்குப் பல நாள்களோ அல்லது வாரங்களோ ஆகும்.


இந்தக் கால்வாய் யாரால் கட்டப்பட்டது?


இந்தக் கால்வாய்க்கான கட்டுமானப் பணி 1859-ம் ஆண்டு தொடங்கியது. கிட்டதட்ட 10 வருடங்களாக இந்தக் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 15 லட்சம் பேர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பலர் அடிமைப் பணியாளர்களாக இருந்தனர். இதற்காக பணியாற்றும்போதே காலரா மற்றும் பிற காரணங்களால் பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் இந்தக் கால்வாய் கட்டப்படும் சமயத்தில் எகிப்து நாடு, பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது. எனவே, காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் பல எதிர்ப்புகள் இருந்தன. அது, கட்டுமானத்தை வெகுவாக பாதித்தது.

இதனால் அந்தச் சமயத்தில் இருந்த நவீன தொழில்நுட்பம் எதையும் கட்டுமானப் பணியில் பயன்படுத்த முடியவில்லை. மேலும், திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் இதன் கட்டுமானச் செலவு இரட்டிப்பானது.

சூயஸ் கால்வாய் அதிகாரபூர்வமாக 186-ம் ஆண்டு, நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. தற்போது உலகின் அதிக அளவிலான சரக்குக் கப்பல் செல்லும் ஒரு பாதையாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான சரக்குக் கப்பல்கள் இந்தப் பாதையைக் கடந்து செல்கின்றன.

2015-ம் ஆண்டு, சூயஸ் கால்வாயின் விரிவாக்கத்தை மேற்கொண்டது எகிப்து. முக்கியக் கடல்வழியை ஒட்டி 35 கி.மீ நீளத்தில் மற்றொரு பாதையையும் கட்டமைத்தது எகிப்து. இதனால் இருவழிப் போக்குவரத்து சாத்தியமானது. அதுமட்டுமல்லாமல் பெரிய சரக்குக் கப்பல்கள் செல்லவும் ஏதுவாக அமைந்தது.

தற்போது இந்தக் கால்வாயை `சூயஸ் கெனால் அத்தாரிட்டி` என்ற எகிப்து அரசுக்குச் சொந்தமான நிறுவனம் நிர்வகிக்கிறது.


சூயஸ் கால்வாய் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

தினந்தோறும் சராசரியாக 50 கப்பல்கள், 300 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சரக்குகளைச் சுமந்துகொண்டு சூயஸ் கால்வாயைக் கடந்து செல்கின்றன.

ஐரோப்பாவிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் செல்வதால் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் குறைகிறது. தெற்கு அட்லாண்டிக் மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடல் பாதையில் செல்வதோடு இந்தப் பாதையை ஒப்பிட்டால் சுமார் 7,000 கிலோமீட்டர் பயணம் மிச்சமாகிறது.

சர்வதேச வர்த்தகத்தில் 12 சதவிகித வர்த்தகம் இந்தப் பாதை வழியாகத்தான் நடக்கிறது. இந்தப் பாதை வழியாக எண்ணெயைத் தவிர உடைகள், கார் உதிரி பாகங்கள், பல உற்பத்தி பொருள்களும் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்தப் பாதை அடைப்பட்டுள்ளதால் பல சரக்குக் கப்பல்கள் காத்து நிற்கின்றன. கப்பலை மீட்கும் முயற்சிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், அதற்குச் சில தினங்களோ வாரங்களோ ஆகலாம். இதனால் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் கண்டது.

இந்தியாவின் பெரும்பாலான கச்சா எண்ணெய் இந்த வழியாகத்தான் இறக்குமதி ஆகிறது. எனவே, சூயஸ் கால்வாய் பிரச்னை தீர்க்கப்படவில்லையென்றால் அது இந்தியாவையும் பெரிய அளவில் பாதிக்கும்.

இந்தக் கால்வாய் நீண்ட நாள்களுக்கு அடைபட்டுக்கொண்டிருந்தால், அதன் வழியாகச் செல்ல காத்திருக்கும் கப்பல்களின் உரிமையாளர்களுக்குப் பெரும் இழப்பு நேரிடும். எனவே, ஏற்கெனவே சில கப்பல் உரிமையாளர்கள் தங்களது கப்பல்களை ஆப்பிரிக்காவின் ’குட் ஹோப்’ பாதை வழியாகக் கொண்டு செல்ல முடிவெடுத்துவிட்டனர்.
கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.