ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ளத் தயார் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நேற்று (18) நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய தம்முடன் நேருக்கு நேர் மோதுவதற்கு முயற்சிப்பதாகவும் அந்த சவாலை ஏற்றுக்கொள்வதாகவும் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுக்கள் முன்னிலையில் எம்மை அழைத்து விசாரணை நடாத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவ்வாறு ஆணைக்குழுவினை நிறுவி விசாரணை நடத்துமாறு தாம் சவால் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் கதவுகள் மூடப்பட்ட நிலையில் நடாத்தப்படக் கூடாது எனவும் மக்கள் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்ட சகல ஊழல் மோசடிகள் பற்றியும் அம்பலபடுத்த தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் குறுகிய காலத்தில் பெருந்தொகை பணம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எவ்வாறு பணம் சம்பாதித்தார்கள் என்பது பற்றி ஆணைக்குழுவின் எதிரில் அம்பலப்படுத்த தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ மட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது சகாக்களும் இதே வகையிலான ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.