
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு Mission Green Sri Lanka (MGSL) ஏற்பாட்டில் 50 மருத மரக்கன்றுகளை நடும் நிகழ்வு இன்று (2021.02.04) புத்தளம் நகரில் நெடுங்குளம் குளத்துக் கட்டில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு புத்தளம் நகர சபையின் கௌரவ தலைவர் கே.ஏ. பாயிஸ் உட்பட நகர சபை உறுப்பினர்கள், இலங்கை கடற்படையின் தம்பண்ணி முகாம் லெப்டினன்ட் W.W.P.C. மென்டிஸ் மற்றும் அதிகாரிகள், அனுசரணையாளர்களான City Garden, Grow Max, Zara பிரதிநிதிகள், 4 ஆம் வட்டார பிரசை குழு உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் நகர வாசிகளும் கலந்துகொண்டனர்.
வரவேற்புரையை நிகழ்த்திய Mission Green Sri Lanka (MGSL) நிறுவனத்தின் தலைவர் எம். ஸஜீத் (SLIIT),
“புத்தளம் பிரதேசம் மருத மரத்துக்கு உகந்த மண் வளத்தைக் கொண்டுள்ளது. புத்தளத்தில் ஆறுகள் குளங்களுக்கு அருகில் மதுரம் மரங்கள் நிறைந்து காணப்பட்டன. துரதிஷ்டவசமாக மருத மரங்கள் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. எனவே, மீள் வனமாக்கல் திட்டத்தின் கீழ் சுதந்திர தினத்தை முன்னிட்டு மருத மரக்கன்றுகளை நடும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
பிரதம உரையை நிகழ்த்திய புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள்,
“1997 ஆம் ஆண்டு முதல் நகர சபையின் தலைவராக இருந்த காலங்களில் பல்வேறு பிரிவினரால் நட்டப்பட்ட மரக் கன்றுகளின் எண்ணிக்கை சுமார் ஓர் இலட்சம் இருக்கும். ஆனால் அவற்றில் சொற்பமானவை தான் மரமாக வளர்ந்து நிற்கின்றன. ஏனெனில் மரக்கன்றுகளை நட்டுவதில் காட்டும் ஆர்வம் அவற்றை மரமாக வளர்ப்பதில் - நீர் வார்த்து, உரம் இட்டு, பாதுகாப்பதில் - காட்டப்படுவதில்லை. எனவே, இன்று நட்டப்படும் இம் மருத மரங்களை பராமரித்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் Mission Green Sri Lanka நிறுவனத்துக்கு உள்ளது” என அறிவுரை வழங்கினார்.
நன்றியுரையை நிகழ்த்திய ஹிஷாம் ஹுஸைன் (JVP சமூக செயற்பாட்டாளர்),
“இம் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் காடுகள் மரங்கள் அழிக்கப்படாத; சூழல் மாசுபடாத தேசத்தைத் தாம் எதிர்பார்க்கின்றனர் என்ற செய்தியை Mission Green Sri Lanka வின் வாலிபர்கள் இந்நாட்டுக்கு கூறியுள்ளார்கள்” எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து அதிதிகளும் பொது மக்களும் இணைந்து மருத மரக்கன்றுகளை நட்டினார்கள்.
தகவல் -அஹ்மத் அஸ்ஜத்


