இஸ்லாமிய அறிநெறிப் பாடசாலைகள் தொடர்பாக வெளியான முக்கிய அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஸ்லாமிய அறிநெறிப் பாடசாலைகள் தொடர்பாக வெளியான முக்கிய அறிவித்தல்!


இலங்கை முஸ்லிம்கள் ஆரம்ப காலம் தொடக்கம் மார்க்கம் சம்பந்தமான அறிவு, அல் குர்ஆன் ஓதுதல், சந்தர்ப்ப துஆக்கள், ஒழுக்கநெறி போன்ற அனைத்து விடயங்களையும் குர்ஆன் மத்ரஸா, பள்ளிக்கூடம், அஹதிய்யா, மக்தப் ஆகிய பெயர்களில் இருந்த அமைப்புக்களினூடாக பெற்று வந்தனர். 


அம்முறைகள் நடைமுறையில் இருக்கின்ற வேளையிலேயே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 1980ம் ஆண்டு காலப் பகுதியில் அமையப்பெற்றது. அதன் பின்னர் இத்திணைக்களத்தில் மேற்கூறப்பட்ட குர்ஆன் மத்ரஸாக்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், அவ்வமைச்சின் மூலம் சில பாடநெறி மற்றும் நிர்வாகம் தொடர்பான வழிகாட்டல்களும் இந்த குர்ஆன் மத்ரஸாக்களுக்கு வழங்கப்பட்டன. குர்ஆன் மத்ரஸாக்கள் அந்தந்த மஸ்ஜித்களில் பணிபுரியும் இமாம்களினூடாகவே நடாத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


காலப்போக்கில் இக்குர்ஆன் மத்ரஸாக்களில் ஏற்பட்ட சில குறைபாடுகள் மற்றும் பின்தங்கிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா இதனை ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டு வர வேண்டுமென பல முயற்சிகளை மேற்கொண்டது. 


பிள்ளைகளுக்கு தேவையான மார்க்க அறிவை வழங்க வேண்டிய தேவை, பாடசாலையில் இஸ்லாம் பாடத்தை கற்பிக்க மௌலவி ஆசிரியர்களின் பற்றாக்குறை போன்ற பல விடயங்களை கருத்திற் கொண்டு ஏலவே திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டிருந்த அல்குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பாடத்திட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டும், மார்க்கத்தின் பிரதான முக்கிய விடயங்கள் உள்வாங்கியும் “மக்தப்” பாடநெறி ஜம்இய்யாவால் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்பாடநெறியை கற்பிப்பதற்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்குதல், கற்பிப்பதற்கான கால அளவு, கற்பிப்பவர்களுக்கான ஊதியம், எவ்வாறு கற்பிக்கப்படுகின்றது என்பதை கண்காணித்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டே மேற்படி பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.


2019ல் நடந்த ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரானா வைரஸ் நோய் பரவலின் காரணமாக இத்திட்டத்தை இதே ஒழுங்கில் தொடர்வதில் பல சிக்கல்கள் காணப்பட்டதால், மஸ்ஜித் நிர்வாகத்தின் பங்குபற்றதலுடன் நடாத்தப்பட்ட இது இன்னும் சீரான முறையில் நடாத்தப்படுவதற்காக அந்தந்த ஊரிலுள்ள உலமாக்கள், மக்தப் பொறுப்புதாரிகள் உட்பட மஸ்ஜித் நிர்வாகங்களிடம் அதன் நிர்வாக அமைப்பை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.


தற்போது, குர்ஆன் மத்ரஸா, ஹிப்ழ் மத்ரஸா, அஹதிய்யா, மக்தப் என்று வெவ்வேறு பெயர்களில், நிறுவன அமைப்பில், நடந்துவரும் இஸ்லாமிய கல்விக் கூடங்களை மஸ்ஜித்களை மையப்படுத்தி வக்பு சபையின் கீழ் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மேற்பார்வையோடு இஸ்லாமிய அறநெறிப் பாடசாலைகள் என்ற பெயரில் நடாத்த முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.


எனவே, முறையான பாடநெறி, ஆசிரியர்களுக்கான ஒழுங்கான பயிற்சி, ஆசிரியர்களுக்கான ஊதியம், சிறந்த கண்காணிப்பு முறை என்பவற்றுடன் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் கொள்கைக்கு முரண்படாத அமைப்பிலும், பிள்ளைகளுக்கு பாரமில்லாத வகையிலும் இவ்விடயம் மேற்கொள்ளப்படும் போதும் அல்குர்ஆன் மத்ரஸா மற்றும் மக்தப் தனியான ஒழுங்கிலும் அஹதிய்யா வகுப்புக்கள் மற்றுமொரு ஒழுங்கிலும் நடைபெறும் போதும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இதனை வரவேற்பதோடு தனது முழுமையான பங்களிப்புக்களையும், உடன்பாட்டையும் இதற்கு எப்போதும் வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். 


அத்துடன் மேற்படி முறையில் நடைபெற இருக்கும் அறநெறிப் பாடசாலைகளுக்கு உலமாக்களும் அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.


அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்

பதில் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.