அல்லாஹ்வின் நீதிமன்றில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை; இயேசுவின் நீதிமன்றில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால்! இதனை பௌத்தர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்! -ஞானசார தேரர்

அல்லாஹ்வின் நீதிமன்றில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை; இயேசுவின் நீதிமன்றில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால்! இதனை பௌத்தர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்! -ஞானசார தேரர்


இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. அளுத்கம தாக்குதல் நடைபெற்றபோதே விசேட ஆணைக்குழுவொன்றின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். எனினும் அதனைச் செய்யவில்லை. எனவே அதன் பின்னர் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்குப் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் நோக்கில் பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புக்கள் இணைந்து இன்று (23) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


அங்கு அவர் மேலும் கூறியதாவது,


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், நாட்டில் இயங்கும் தேசிய அமைப்புக்கள் மற்றும் இயக்கங்கள் தாக்குதலுக்கான தூண்டுதல் காரணியாக அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் தடைசெய்யப்பட வேண்டும் என அதன் பரிந்துரைகளில் கூறப்பட்டிருப்பதாகவும் ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை வெளியிடுமாறும், இல்லாவிட்டால் சர்வதேசத்தை நாடுவோம் என்றும் கூறி கட்டுப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்னாள் பேராயர் மெல்கம் ரஞ்சித் போராட்டங்களை முன்னெடுக்கின்றார்.


சில வருடங்களுக்கு முன்னர் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் உருவாகிவருவது பற்றி நாம் எச்சரித்திருந்தோம். அப்போதே இது குறித்து கார்டினல் அழுத்தங்களை வழங்கியிருந்தால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஏற்படாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அப்போது கார்டினல் இன நல்லிணக்கம், ஒற்றுமை, மனித உரிமைகள் என்பன தொடர்பிலேயே பேசினார்.


$ads={1}


அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யும் விவகாரத்தில், அதற்கு அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் மன்னிப்பு இல்லை என்று ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்தது. தற்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை விவகாரத்தில் கார்டினலும் இயேசுவின் நீதிமன்றத்தில் அதற்கு மன்னிப்பில்லை என்றே கூறுகின்றார். எனவே இரு தரப்பினரும் ஒரே கருத்தையே கூறுகின்றார்கள். இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது தெளிவாகின்றது. இதனை நாட்டில் வாழும் பௌத்தர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.


இந்த விசாரணை அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆணைக்குழுவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமித்தார். ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது சுமார் 08 தடவைகள் முன்னிலையாகி, சாட்சியம் வழங்கிய பௌத்த தேரர் நானாகத்தான் இருப்பேன். எனவே முதலில் விசாரணை அறிக்கையின் பிரதியை எமக்குப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் கடந்த காலங்களில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. 


நாட்டில் இடம்பெறும் கலாசார, பாரம்பரிய ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் முதலில் மதத்தலைவர்களே ஆராய்ந்து, அவதானம் செலுத்த வேண்டும். மாறாக மல்கம் ரஞ்சித் போன்றவர்கள் சர்வதேச அமைப்புக்களை நாடுவது குறித்துப் பேசத்தேவையில்லை. கார்டினல் அவரது நிலை என்னவென்பதை நன்கு புரிந்துகொண்டு பேசவேண்டும். எனவே இவ்விடயத்தில் தேவையற்ற குழுப்பங்களை ஏற்படுத்துவதை மல்கம் ரஞ்சித் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.


-நா.தனுஜா


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.