அண்மையில் எரிக்கப்பட்ட மௌலவி ஒருவரின் ஒன்றரை வயது குழந்தை! குழந்தையின் தந்தை பகிர்ந்துகொண்ட விடயங்கள்!

அண்மையில் எரிக்கப்பட்ட மௌலவி ஒருவரின் ஒன்றரை வயது குழந்தை! குழந்தையின் தந்தை பகிர்ந்துகொண்ட விடயங்கள்!


கொழும்பைச் சேர்ந்த மௌலவி அமனுல்லா அவர்களுடைய ஒன்றரை வயது மகன், அப்துல்லாஹ் சயீத் (Saeedh) கொரோனா தொற்றுக்குள்ளாகி கடந்த 01.02.2021 அன்று மரணமடைந்தார். அவரது ஜனாஸா அன்றைய தினமே எரிக்கப்பட்டது.

 

இது குறித்து மௌலவி அமனூல்லா, ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை, அப்படியே இங்கு தருகிறோம்.


எனது மகன் 31.08.2019 அன்று பிறந்தார். அவருக்கு அப்துல்லாஹ் சயீத் என்று பெயர் வைத்தோம். இதன் அர்த்தம் பாக்கியசாலி என்பதாகும். இவருக்கு 5 வயதில் ஒரு அக்காவும் உள்ளார்.


மகனுக்கு கொஞ்சம் சளி இருந்தது. இதற்காக நாங்கள் அவருக்கு மருந்து கொடுத்து வந்தோம். தூங்குவதற்கு சிரமப்பட்டார். எனவே 20.01.2021 அன்று இரவு 11.30 மணிக்கு லேடி றிஜ்வே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். மகனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, அவருடைய நாக்கும், வாயும் நிறம் மாறியிருந்தது. பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக வைத்தியர்கள் கூறினர்.


21.01.2021 அன்று என்னையும், எனது மனைவியையும் நாங்கள் மகனுடன் வைத்தியசாலையில் இருந்த போது, அங்கிருந்து வெளியேறி வீட்டில்  தனிமையிலிருக்குமாறு கூறினர். அதன்படி நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தபட்டோம். 


22.01.2021 அன்று எங்களுக்கு பீசீஆர் பரிசோதனை நடந்தது. அதில் எனக்கும், மனைவிக்கும், மனைவியின் தந்தைக்கும் (ரமழான் மௌலவி) கொரோனா என உறுதி செய்யப்பட்டது.


எனது மனைவியை ஹம்பாந்தோட்டைக்கும், என்னையும் மனைவியின் தந்தையான மௌலவி ரமழான் அவர்களை மட்டக்களப்புக்கும் அனுப்பினார்கள்.


எமது மகன் லேடி றிஜ்வேயில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், எங்களை தூரப் பகுதிக்கு அனுப்புவது சிறந்தல்ல. கொழும்புக்கு அருகே தங்க வையுங்கள் என உருக்கமாக கோரினோம். கொழும்பு பொலிஸ் தலைமையகத்திலுள்ள சில பொலிஸாரும் எமது கோரிக்கையில் நியாயத்தை கண்டாலும், எமக்கு கொழும்புக்கு கிட்டிய பகுதி கிடைக்கவேயில்லை.


இந்நிலையில், 01.02.2021 அன்று மகன் மரணித்து விட்டதாக எமக்கு தகவல் வந்தது. மகனுடைய ஜனாஸாவை எரிப்தற்காக எங்களிடம் பெட்டி கேட்டார்கள். நாங்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. அப்படியென்றால் அரச செலவில் இதனைச் செய்வதற்காக, எங்களிடம் கையொப்பம் கேட்டார்கள். அதற்கான பத்திரத்தில் எமது சகோதரர் கையொப்பமிட்டார்.


அன்றைய தினமே பிந்நேரம் கொழும்பு லேடி றிஜ்வேயில், மகனுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. நான் மட்டக்களப்பில் தங்க வைக்கப்பட்டு இருந்தமையால், வீடியோ மூலமாக ஜனாஸாவை பார்வையிட்டு, ஜனாஸா தொழுகை நடத்தப்பட்ட போது நானும் ஜனாஸா தொழுகையை தொழுதேன்.


அன்றைய தினமே, மகனின் ஜனாஸாவை பொரளையில் எரித்து விட்டார்கள். சாம்பலை நாங்கள் கேட்வில்லை.


மகனை எரித்து அடுத்த நாளே, அதாவது 02.02.2021 அன்று எங்களை வீடு செல்ல அனுமதித்தார்கள். வீட்டுக்கு வந்தும், மகனின் நினைவாகவே இருந்தது. மகன் என்னுடன் தூங்குவதற்கு முன் விளையாடுவார். நான் தூங்கிவிட்டால் அவரும் தூங்கிவிடுவார். 


மகனின் ஜனாஸா எரிக்கப்பட்ட தகவலை, எனது மனைவியிடம் 3 நாட்களாக தெரிவிக்கவேயில்லை. எமது ஒட்டுமொத்த குடும்பமும் மிகுந்த கவலையில் உள்ளது.


எனது மகனை, எனது மகள் தேடுகிறார். தனியாக அழுகிறார். தனித்திருந்து யோசிக்கிறார். தம்பியின் ஜனாஸா எரிக்கப்பட்டது அவரை பாதித்துள்ளது.


எனது மகனை புனித அல்குர்ஆனை சுமந்த ஹாபிஸ் ஆக்க நினைத்தேன், தப்ஸீர், ஹதீஸ் கலை போன்றவற்றில் அவர் சிறந்து விளங்க வேண்டுமென ஆசைப்பட்டோம் என  மௌலவி அமனுல்லாஹ் மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.


-அன்ஸிர்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.