
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மூடிமறைப்பதற்கு முயல வேண்டாம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
73 ஆவது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஆராதனையின் போது கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
30 வருட கால யுத்தத்திலிருந்து மீண்ட இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்தி செய்து வருகின்றது என தெரிவித்துள்ள அவர், நாட்டில் மீண்டும் இன்னொரு மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ள மல்கம் ரஞ்சித் கடந்த காலத்தில் தலைவர்கள் ஆணைக்குழுக்களின் அறிக்கையை மறைத்தது போல இதனையும் மறைக்க வேண்டாம் என கோரியுள்ளார்.