
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான், இலங்கையை அல்ல, சிங்கள பௌத்த இராச்சியத்தையே கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாகத் தெளிவுபடக் கூறி விட்டார். இதற்காக அவர் கௌதம புத்தரையும் துணைக்கு அழைத்து, தன்னை நியாயப்படுத்தியுள்ளார் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
ஜனாதிபதி கோட்டாபயவின் சுதந்திர தின உரையின் பிரதான சாராம்சத்தை கேட்டுப் பார்த்தால் இது தெளிவாகப் புரிகிறது. தேடிப்பார்த்ததில் அவரது சிந்தனையில் உள்ள நான்கு முத்தான விடயங்களை தனது உரையில் அவர் உதிர்த்துள்ளார் எனத் தெரிய வருகிறது.
நாம் பல இன, மொழி, மத மக்கள் சகவாழ்வு வாழும் சுபீட்சமான இலங்கை இராச்சியத்தை கட்டியெழுப்ப முயல்கின்றோம். ஜனாதிபதி, தான் இலங்கையை அல்ல, சிங்கள பௌத்த இராச்சியத்தையே கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாகத் தெளிவுபடக் கூறிவிட்டார்.
உண்மையில் தனது இலக்கை, ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக, உள்ளதை உள்ளபடி கூறியமையையிட்டு நான் ஜனாதிபதியைப் பாராட்டுகின்றேன். அவரது இலக்கை நாம் ஏற்க மறுக்கின்றோம் என்பது வேறு விஷயம். ஆனால் அவர் ஒளிந்து விளையாடவில்லை அல்லவா?
உலகத்துக்கு ஜனாதிபதி ஏதோ சொல்ல வருகிறார், அது என்ன என குழப்பிக்கொள்ள வேண்டாம். அவர் பின்வரும் நான்கு கருத்துகளைத்தான் தெளிவாகக் கூறுகிறார்.
(01) நீங்கள் தேடிய தலைவன் நான்தான். (02) நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன். இதை சொல்ல நான் ஒருபோதும் தயங்கப் போவதில்லை. (03) பௌத்த படிப்பினைகளின் அடிப்படைகளிலேயே நான் இந்நாட்டை ஆளுவேன். (04) நாட்டின் சட்ட வரையறைக்குள் எல்லா இன, மதத்தவருக்கும், சுதந்திரமும், சமத்துவமும் பெற்று சமாதான சகவாழ்வு வாழ பௌத்த தத்துவத்துக்குள்ளே உரிமையுண்டு- என்று சுட்டிக்காட்டியுள்ளார்.