இளம் வயது திருமணங்களுக்கு யாரும் தொப்பி போட வேண்டாம்! இம்ரான்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இளம் வயது திருமணங்களுக்கு யாரும் தொப்பி போட வேண்டாம்! இம்ரான்

இளம் வயது திருமணங்களுக்கு யாரும் தொப்பி போட  வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் முகமாக நேற்று (12) பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆற்றிய உரையின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எமது இலங்கை திருநாடு ஒரு பண்சமூக அமைப்பைக் கொண்டது என்ற வகையில் 
இந்நாட்டு மக்கள் அனைவரினதும் சுதந்திரங்கள், உரிமைகள், கலாச்சாரங்கள், சம்பிரதாயங்கள், மரபுகள் போன்றவற்றை  இந்த நாட்டின் பொதுச் சட்டத்தினூடாக பாதுகாத்து மதிப்பளிப்பதன் மூலம் நாட்டின் கொள்கை குறிக்கோள்களை அடைந்து கொள்வதுவே ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கோஷத்தின் உண்மையான அர்த்தமாகும்.

இந்த புரிதலின் அடிப்படையிலேயே இந்த நாட்டில் காலனித்துவ காலம் முதலிருந்தே கண்டிய சிங்களவர்களுக்கான கண்டிய சட்டம், யாழ்ப்பாண தமிழர்களுக்கான தேசவழமைச் சட்டம், கரையோர சிங்களவர்களுக்கான பொதுச்சட்டம் உள்ளிட்ட பல தனியார் சட்டங்களைப் போலவே முஸ்லிம் தனியார் சட்டமும் இடம்பெறுகின்றது. 

இந்த எல்லா சட்டங்களும் பல குறைபாடுகளை கொண்டிருப்பது போல முஸ்லிம் தனியார் சட்டமும் பல குறைபாடுகளை கொண்டிருப்பது  மறுக்க முடியாத உண்மையாகும்.

எனவே முஸ்லிம் தனியார் சட்டமும் கால, நாகரிக  மாற்றங்களுக்கேற்ப பல  திருத்தங்களை வேண்டி நிற்கின்றது. 

எனவேதான் இதுகுறித்து கடந்த காலங்களில் பல ஆக்கப்பபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் முஸ்லிம் தனியார் சட்ட திருத்த பிரேரணைகள் இதற்கு மிக அண்மைக்கால சிறந்த உதாரணமாகும்.

இதன் தொடராக இந்த முஸ்லிம் தனியார் சட்ட குறைபாடுகளை சீராக்கும் பணியில் இன்றைய நீதி அமைச்சர் ஒரு குழுவை நியமித்துள்ளார். 

எனவே இந்த விடயத்தை புதிதாக கிளறி பெரும்பான்மை மக்களிடம் முஸ்லிம் விரோத போக்குக்கு எண்ணெய் ஊற்றி புகழ் பெற நினைக்கும் இனவாத அரசியலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். 

முஸ்லிம் தனியார் சட்டம் இஸ்லாமிய சட்டவியலையும், சமூக வழிமுறைகளையும் சார்ந்து உருவாக்கப்பட்டதே அன்றி அவை முற்றுமுழுதாக அல் குர்ஆனில் இருந்து பெறப்பட்டவை அல்ல. எனவே மணமகளின் விருப்பம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றோ பெண்களுக்கு அநீதி இடம்பெறுகிறது என்றோ குற்றச்சாட்டுகள் இருக்குமாயின் அவை குறித்து விசாரித்து ஆராய்ந்து திருத்தங்களை செய்ய வேண்டுமே தவிர அந்த தனியார் சட்டத்தை ஒழிக்க வேண்டுமென்று கூறுவது நடைமுறைக்கு சாத்தியமில்லாத, முஸ்லிம் எதிர்ப்புவாதத்துக்கு தீனிபோடுகின்ற குறுகிய இனவாத அரசியலாக மட்டுமே இருக்க முடியும்.

திருமணத்தில் கட்டாயம் பெண்ணின் அனுமதி பெறப்பட வேண்டுமென்பதே இஸ்லாத்தின் வழிகாட்டல். 

 இந்த நாட்டில் இளம் வயது திருமணம் என்ற பிரச்சினை ஒரு பொதுவான பிரச்சினையாகும். பெரும்பான்மை மக்களிடமே இந்த பிரச்சினை அதிகம் உள்ளது என்பதை புள்ளிவிபர தகவல்கள் மூலம் புரிந்து கொள்ளலாம். 

எனவே இளம் வயது திருமண பிரச்சினைக்கு தொப்பி போட்டு முஸ்லீம்களின் தனிப்பட்ட பிரச்சினையாக அடையாளப்படுத்தி குறுகிய இன்பம் காணாமல் அதை ஒரு தேசிய சமூக பிரச்சினையாக கொண்டு நாம் அனைவரும் இதற்கு தீர்வு காணவேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது ஓர் அழகான சுலோகம். ஆனால் அது இன்று பிழையாக புரியப்படுகிறது. கொச்சையாக விளக்கப்படுத்தப்படுகிறது. 

ஒரே நாடு எனும் போது, 9 மாகாணங்களும் 25 மாவட்டங்களும் இருப்பது ஒரே நாடு என்ற கோஷத்துக்கு முரணானது என்று கூற முடியுமா? அவை ஒரே நாட்டின் ஐக்கியத்தை சிதைக்கிறது என்று சொல்ல முடியுமா? 

அப்படி சொல்ல முடியாது. ஏனெனில் 9 மாகாணங்களும் 25 மாவட்டங்களும் ஒரே நாடு என்ற தன்மையை உறுதிபடுத்துகின்றன.  அவை சீரான ஆட்சிக்கு உதவுகின்றன. அதுபோல தான் ஒரே சட்டம் என்ற கோஷமும் காணப்படுகிறது. 

ஒரே சட்டம் என்பது அனைவருக்கும் நீதியை உறுதிப்படுத்துவதையே குறிக்க முடியும். இந்த நாட்டின் சட்டம் என்பது நடைமுறையிலுள்ள எல்லா சட்டங்களையும் ஒருங்கிணைத்த நீதியின் வடிவமே. அச் சட்டமானது இன, மத, பிரதேச மட்டுமின்றி கட்சி பேதமின்றி சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றே எல்லா இலங்கை மக்களும் விரும்புகின்றார்கள். 

ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தையோ மரபுகளையோ இன்னொரு சமூகத்திற்குள் தினிப்பது ஒரே நாடு ஒரே சட்டமல்ல.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒரு சட்டமும் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அரசாங்க ஆதரவாளர்களுக்கு இன்னொரு சட்டமும் இருப்பதல்ல; ஒரே நாடு ஒரே சட்டம் என்ற உயரிய சுலோகத்தின் கருத்து ஆளும்கட்சிக்கு ஆதரவானவர்கள் மினுவாங்கொட கலவரத்தில் பங்குகொள்ள அனுமதிக்கப்பட்டதும் அரசுக்கெதிரானவர்கள் பொத்துவில் முதல் பொலிகண்டி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தடுக்கப்பட்டதும் ஒரே நாடு ஒரே சட்டத்துக்கு முரணானது.

இந்த நாட்டின் முஸ்லிம் தனியார் சட்டம் எந்தவகையிலும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்துக்கு முரணானது அல்ல. அது இந்த நாட்டின் யாப்பினால் பாதுகாக்கப்படும் பல்லின மக்கள் வாழ் தேசத்தின் அழகிய முன்னுதாரணத்தின் ஒரு வடிவம்;
அதிலுள்ள குறைகள் நீக்கப்பட வேண்டும்; சீர்திருத்தப்பட வேண்டும். மாறாக அந்த சட்டம் நீக்கப்படக் கூடாது. நீக்கப்பட வேண்டும் என்று கோரப்படவும் கூடாது.

இளம் வயது திருமணம் அனைத்து சமூகங்களிலும் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான புள்ளி விபரங்களை எடுத்து நோக்கினால் உண்மை புரியும் எனவே இளம் வயது திருமணங்களுக்கு யாரும் தொப்பி போட வேண்டாம் என தெரிவித்தார்.

(நேரம் போதாமையால் முழுமையான உரை ஹென்சாட் செய்யப்பட்டது.)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.