சுமந்திரன், சாணாக்கியன் இவர்களினால் தான் கிழக்கு முஸ்லிம்கள் அணி திரண்டனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுமந்திரன், சாணாக்கியன் இவர்களினால் தான் கிழக்கு முஸ்லிம்கள் அணி திரண்டனர்!

பொத்துவிலில் பேரணி ஆரம்பித்த போது பேரணி நடக்குமா என பல அரசியல்வாதிகள் வீடுகளுக்குள் ஒளித்திருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பைச்சேர்ந்த சுமந்திரன், சாணக்கியன், அரியநேத்திரன், சிறிநேசன், யோகேஸ்வரன், சேயோன் , ஜனா கலையரசன், சயந்தன், உதயகுமார், மேயர் சரவணபவன் தமிழ் காங்கிரஷ் கட்சியை சேர்ந்த குணசேகரம், சுகாஷ், சுரேஷ் போன்றவர்களே பொலிஸாரின் தடைகளை உடைத்து முன்னேறி அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர்கள். இவர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் உட்பட சிலர் பொலிஸாரின் தாக்குதல்களுக்கும் உள்ளாகினர். இதில் மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகன் அவர்களின் பங்களிப்பையும் மதிக்க வேண்டும். நீதிமன்ற தடை உத்தரவு, நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் மோகன் அவர்களின் மகன் பொத்துவில் தொடக்கம் இன்றுவரை பேரணியின் முன்னணியில் நின்று செயற்பட்டு வருகிறார்.

சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் முஸ்லீம் தலைவர்களுடன் பேசியதின் பலனாக அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை வரை முஸ்லீம் மக்களின் ஆதரவும் கிடைத்ததன் பலனாகத்தான் இரண்டாம் நாள் மட்டக்களப்பில் பேரணி எழுச்சி பெற்றது. 


இரண்டாம் நாள் பேரணியில் தமிழ் காங்கிரஷ் கட்சி கஜேந்திரன், கஜேந்திரகுமார் தமிழரசுக்கட்சியின் சிறிதரன் ஆகியோர் பங்குபற்றினர். 


கிழக்கில் இந்த வேலன் சுவாமி பற்றியோ அல்லது வேறு ஆசாமிகள் பற்றியோ அந்த மக்களுக்கு தெரியாது. 


தமிழ் முஸ்லீம் அரசியல் தலைமைகள் அவர்களின் வழிகாட்டலில் தான் திருகோணமலை வரை தமிழ் முஸ்லீம் மக்களால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. 


திருகோணமலையை வந்தடைந்த பின்னர் திருகோணமலை சிவில் அமைப்பு என சொல்லிக்கொண்ட ஒரு பாதிரி வாசித்த அறிக்கை முற்றுமுழுதாக அந்த பேரணியின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் அமைந்தது. 


அண்மைக்காலத்தில் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்ததால் முஸ்லீம் மக்களுக்கு இவர்கள் மீது நம்பிக்கையும் மதிப்பும் ஏற்பட்டது. இதனால்தான் முஸ்லீம் மக்கள் பெருமளவாக அணிதிரண்டு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவை வழங்கினர். 


சுமந்திரனையும் சாணக்கியனையும் சந்திக்கும் மக்கள் தமது ஆதரவை அவர்களுக்கு தெரிவிப்பது இயல்பான ஒன்றுதான். 


ஓட்டமாவடியில் முஸ்லீம் மக்கள் இந்த அரசியல் தலைவர்களுக்கு மாலை அணிவித்தார்கள். மாலையுடன் வருபவர்களிடம் இருந்து அந்த மாலைகளை பறித்தெடுத்து வீச முடியுமா?


தந்தை செல்வா காலத்திற்கு பிறகு முஸ்லீம் மக்கள் தங்கள் நேசக்கரங்களை தமிழ் மக்களை நோக்கி நீட்டியிருக்கிறார்கள். அதனை உதாசீனம் செய்ய முடியுமா? முஸ்லீம் மக்கள் நீண்டிய நேசக்கரத்தை சுமந்திரனும் சாணக்கியனும் பற்றி பிடித்திருக்கிறார்கள். அந்த உறவு நிலைக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். 


இது சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களின் காலடியில் கிடக்கும் பிள்ளையான் குழு, டக்ளஸ் குழு, அங்கஜன் குழு, ஆவாக்குழுக்களுக்கும் பிடிக்கவில்லை, தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொள்ளும் சில அரசியல் கட்சிகளுக்கும் பிடிக்கவில்லை. 


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை செல்லும் பேரணி இப்பந்தி எழுதும் வரை கிளிநொச்சி வரை சென்றிருக்கிறது.


சென்ற இடம் எல்லாம் சாணக்கியனை இளைஞர்கள் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டார்கள். இதற்கான காரணம் என்ன என நாம் பார்க்க வேண்டும். 

துணிச்சலும் திறமையும் ஆற்றலும் மிக்க இளம் அரசியல் தலைமை ஒன்றை தமிழர் சமூகம் எதிர்பார்க்கிறது. அந்த இளம் தலைமையாக சாணக்கியனை வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் சமூகம் பார்க்கிறது. அது போல தமக்காக குரல் கொடுக்க கூடிய தமது உரிமைகளுக்காக பேசக்கூடிய இளம் அரசியல்வாதியாக முஸ்லீம் சமூகம் சாணக்கியனை பார்க்கிறது. 


இது பலருக்கு ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.

 

நீண்டநெடும் காலமாக அரசியல் செய்யும் எங்களை விட்டு நேற்று வந்த சாணக்கியன் பின்னால் இளைஞர் சமூகம் செல்கிறதே என்ற எரிச்சலும் கோபமும் பல அரசியல்வாதிகளிடம் இருக்கிறது. 


இதன் வெளிப்பாடாகத்தான் பேரணியின் முன்னால் வர வேண்டாம் என சில அரசியல்வாதிகளும் வேலன் போன்ற சாமிகளும் பாதிரிகளும் சொல்லியிருக்கிறார்கள். 


சிங்கள மக்களைப்பொறுத்தவரை புத்த பிக்குகளின் பின்னால் செல்வார்கள். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை ஆசாமிகளுக்கு பின்னாலேயோ பாதிரிகளுக்கு பின்னாலேயோ செல்ல மாட்டார்கள். 


வேலன் சாமி போன்றவர்கள் அழைப்பு விடுத்தால் முஸ்லீம் மக்கள் வருவார்களா என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். 


ஓட்டமாவடி மூதூர் மன்னார் போன்ற இடங்களில் முஸ்லீம் பெண்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இதற்கு காரணம் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் அந்த மக்களுக்காக குரல் கொடுத்ததுதான்.

 

ஜனாசா எரிப்பு விடயத்தில் தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் மௌனமாக இருந்த வேளையில் தமக்காக சாணக்கியன் நாடாளுமன்றத்தில் பேசியதையும் செயற்பட்டதையும் நன்றி உணர்வோடு முஸ்லீம் மக்கள் நோக்குகின்றனர். 


வடக்கு கிழக்கில் முஸ்லீம் சமூகத்தை ஒதுக்கி வைத்து பகைத்து கொண்டு தமிழ் மக்களால் வாழ முடியாது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழ முடியாது. அது போல தமிழ் மக்களை பகைத்துக்கொண்டு முஸ்லீம்களால் வாழ முடியாது. இந்த யதார்த்தத்தை முஸ்லீம் மக்கள் இன்று உணர்ந்துள்ளனர். இதனால் தான் தந்தை செல்வநாயகத்தின் காலத்தின் பின் மீண்டும் தமிழ் முஸ்லீம் சமூகங்கள் இன்று இணைந்திருக்கின்றன. 


இந்த இணைப்பை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தவர்கள் சுமந்திரன், சாணக்கியன் போன்றவர்களே.


இது பிள்ளையான் டக்ளஸ் போன்ற சிங்கள பேரினவாத அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுக்குழுக்களுக்கு மட்டுமல்ல இந்த பேரணியில் செல்லும் சில அரசியல்வாதிகளுக்கும் பொறுக்க முடியாமல் இருக்கிறது. 


மறு புறத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்கள் பேரணியில் அணி திரண்டிருப்பது தங்களின் அழைப்பை ஏற்றுத்தான் என காவி உடைதரித்த, பாவாடை தரித்த ஆசாமிகள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.