பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பசால் மொஹமட் நிசார் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பசால் மொஹமட் நிசார் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்!


இனங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணமான வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை முகப் புத்தகம் ஊடாக வெளியிட்டதாக கூறி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் தெஹிவளையைச் சேர்ந்த பசால் மொஹமட் நிசார் விவகாரத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை பகுப்பாய்வு செய்த போது, சந்தேக நபர் சட்ட விரோதமாக, மிக இரகசியமான முறையில் இணையவழி தொடர்பாடல் கட்டமைப்பொன்றினை நிறுவி அதனை முன்னெடுத்துச் சென்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் நேற்று (01) கொழும்பு பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹாலுக்கு அறிவித்தனர்.

இந்த தொடர்பாடல் கட்டமைப்பு ஊடாக, இலங்கையின் எந்தவொரு தொலைபேசி சேவைக்கும் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்பதும், அவ்வாறு ஏற்படுத்தப்படும் அழைப்புக்கள் தொலைபேசி விபரப் பட்டியலில் பதிவாகாது என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விஷேட அறிக்கை ஊடாக சி.ஐ.டி. நீதிவானுக்கு அறிவித்துள்ளது.

சுமார் 450 இற்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள இக்கட்டமைப்பில், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரும் உள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்த சி.ஐ.டி., இந்த தொலைபேசி கட்டமைப்பு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களாலும் பயன்படுத்தப்பட்டதா என விரிவான விசாரணை ஒன்று இடம்பெறுவதாக நீதிவானுக்கு கூறினர்.

பசால் மொஹமட் நிசார் எனும் சி.ஐ.டி. பொறுப்பில் உள்ள சந்தேக நபர் தொடர்பில், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பட்டு சட்டத்தின் 3 (01) ஆம் உறுப்புரைக்கு அமையவும், தண்டனை சட்டக் கோவையின் 120 ஆம் அத்தியாயத்தின் கீழும், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றங்கள் தொடர்பிலான சட்டத்தின் 6 (01) ஆம் அத்தியாயத்தின் கீழும் 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், விசாரணையின் முன்னேற்றம் குறித்து இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிவித்தார். அது சார்ந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே அவர் விஷேட அறிக்கையொன்றினையும் கையளித்து விசாரணையின் நிலைமை தொடர்பில் அறிவித்தார்.

அதன்படி, சந்தேக நபரின் பொறுப்பில் இருந்து சி.ஐ.டி. கைப்பற்றிய கையடக்கத்தொலைபேசி, மடிக் கணினி ஆகியவை சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவினரால் பகுப்பயவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது சந்தேக நபர், மிக இரகசியமான முறையில் இணையம் ஊடாக தனியான தொலைத் தொடர்புகள் கட்டமைப்பொன்றினை முன்னெடுத்துச் சென்றுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இலங்கை தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவின் அனுமதியின்றி சட்ட விரோதமாக இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொலை தொடர்புகள் கட்டமைப்பு ஊடாக, இலங்கையில் இயங்கும் எந்தவொரு தொலைபேசி கட்டமைப்புக்கும் அழைப்பிணை ஏற்படுத்த முடியுமாக இருந்துள்ளதாக கூறும் சி.ஐ.டி., அவ்வாறு ஏற்படுத்தப்படும் அழைப்புக்கள் எந்த தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத் தகவலிலும் பதிவாகாது என விசாரணையில் தெரியவந்ததாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தது.

இவ்வாறான இரகசிய தொடர்பாடல் முறைமை ஒன்றினை முன்னெடுத்து சென்றமையானது, குற்றவியல் வழக்குகளின் போது தொலைபேசி அழைப்புப் பதிவுகளை சான்றுகளாக கொள்ளும் நடை முறைக்கும் சவாலாக உள்ளதாக சி.ஐ.டி. அறிக்கை ஊடாக நீதிமன்றின் கவனத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த கட்டமைப்பில் 450 இற்கும் அதிகமான பயனாளர்கள் இருந்துள்ளதாக இதுவரையான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் சி.ஐ.டி.யினர், அப்பயனாளர்களின் உண்மை அடையாளங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அனைவரும் புனைப் பெயர்களிலேயே பயனாளர்களாக இருந்துள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கட்டமைப்பினை பயன்படுத்தியவர்களில் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எவரேனும் உள்ளனரா எனவும் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்த தொலைத்தொடர்பு கட்டமைப்பை பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டிருப்பதாகவும் அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெருவதாகவும் , மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக சி.ஐ.டி. நீதிவானுக்கு அறிவித்துள்ளது.

இந்த தொலைத் தொடர்பு கட்டமைப்பை பயன்படுத்தும் போது, முதலில் ஒரு குறுந்தகவல் வருவதாகவும், அந்த தகவலில், 'முஸ்லிம்களின் பிரதான இரகசிய தொடர்பாடல் கட்டமைப்பாக குறித்த கட்டமைப்பை குறித்து, அதனை விருத்தி செய்ய குறித்த குறுந்தகவலில் கொடுக்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு' பயனாலர்கள் கேட்கப்படுவதாகவும் சி.ஐ.டி. நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த கட்டமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என தீவிர விசாரணைகள் இடம்பெறும் நிலையில், இது குறித்த மேலதிக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.