
(03-02-2021)
கண்டி மடவளை பஸார் பங்களா கெதரையைச் சேர்ந்த சகோ. ரஸீன் முஹம்மத் அவர்களின் ஜனாஸா ஏன் இன்னும் பிரேத அறையில்...
கடந்த 23-01-2021 அன்று காலம்சென்ற சகோ. ரஸீன் முஹம்மத் அவர்கள் வயிற்று வலியினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் காய்ச்சலும் வந்திருக்கிறது. ஏற்கனவே சளி வருத்தம் அடிக்கடி வருவதுண்டு. இப்படியான நிலையில் தாங்க முடியாத வயிற்றுவலி காரணமாக 22-01-2021 அன்று எம்பியூலன்ஸ் வரவழைத்து இரவு 11:30 மணியளவில் கண்டி தேசிய வைத்தியசாலையில் எட்மிட்டாகி உள்ளார்.
இவருடன் கூட செல்வதற்கு எவரையும் அனுமதிக்கவில்லை. இரவு 11:45 க்கு தான் வைத்தியசாலைக்கு வந்துவிட்தாக வீட்டுக்கு அறிவித்துள்ளார்.
பின்னர் 23ஆம் திகதி அதிகாலை 1:00 மணியளவில் இப்போதுதான் மருந்து தந்துள்ளார்கள் மருந்து குடிக்கப் போகிறேன் என்றும் கூறியுள்ளார்.
பின்னர் காலையில் 6:30 மணியளவில் உறவினர் ஒருவர் பார்க்க சென்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காரணம் கேட்டதற்கு நோயாளியை கொரோனா பிரிவில் வைத்துள்ளோம் எனவே அவருடைய PCR பரிசோதனை செய்து ரிப்போர்ட் வந்த பிறகுதான் பார்க்க முடியுமா? முடியாதா? என்பதை அறிய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பின்னர் சுமார் 7:00 மணியளவில் அவர் மரணித்து விட்டதாக வீட்டாருக்கு தகவல் வந்துள்ளது. இதற்கிடையில் வயிற்று வலியில் சென்றவரை அதற்குரிய வார்டுக்கு போடாமல் கொரோனா வார்டுக்கு போட்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் PCR ரிப்போர்ட் பாஸிட்டிவ் என்றும் வந்துள்ளது. இதை வைத்துக்கொண்டு வத்தேகம பொலிஸார் ஜனாஸாவை எரிப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்று உறவினர்களை ஒத்துழைக்குமாறு நிர்ப்பந்தித்துள்ளனர். என்றாலும் குடும்பத்தார் மறுத்துவிட்டனர்.
மரணத்தில் தமக்கு சந்தேகம் இருப்பதாலும் தேகத்தை பிரேத பரிசோதனக்கு உட்படுத்த வேண்டும் என்பதாலும் எரிப்பதற்கு ஒத்துழைக்க முடியாததாலும் மறுத்துவிட்டனர்.
ஜனாஸாவின் தேகத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க பொலிஸார் மறுத்த நிலையில் குடும்பத்தார் உரிமையை விட்டுக்கொடுக்காது தைரியமாக வாதித்து பலகட்ட கலந்துரையாடலின் பின்னர் வத்தேகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாம் பூரண ஒத்துழைப்பை தருவதாக வாக்குறுதியளித்து புகாரை ஏற்று வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
இதன்படி கரலியத்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதும் அங்கு விசாரிக்கப்படாமல் கண்டி நீதிமன்றத்திற்கு அவரது வழக்கு மாற்றம் பெற்று அங்கு ( கண்டியில்) கடந்த திங்கட்கிழமை (01-2-2021) தினம் விவாதம் நடந்து கீழ்க்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
▪️பிரேதத்தை குடும்பத்தார் அடையாளம் காணல்.
▪️தேகத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தல்.
▪️பரிசோதனையில் நெகடிவ் என்றால் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துவிடல்.
▪️எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் தவணை போடப்பட்டுள்ளது.
மரணித்தவர் வயிற்றுவலியினால் இறந்தாரா? அல்லது கொரோனா தாக்கத்தினால் இறந்தாரா? என்பது சந்தேகமாக இருந்தபடியால் பிரேத பரிசோதனை செய்து அதன் முடிவை ஏற்றுக்கொள்வதென குடும்பத்தார் முடிவெடுத்தே களமிறங்கினார்கள்.
நீண்ட விபரங்கள் இருந்தாலும் சுருக்கமாக தந்துள்ளேன். இப்போ நாம் என்ன செய்வது?
பிரேத பரிசோதனையின் முடிவு கொரோனா மரணம் என்றால் உறவினர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எரிப்பார்கள்.
அவ்வாறில்லாமல் வேறுகாரணமாக இருந்தால் சாதாரணமாக அடக்கம் செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும்.
எனவே சகோ. ரஸீனின் மரணத்திற்கு கொரோனா காரணமாக இருக்கக்கூடாது என்பதே நம் அனைவரதும் பிரார்த்தனையாக இருக்கவேண்டும்.
யா அல்லாஹ்! இந்த ஜனாஸாவை வழமையான முறையில் அடக்கம் செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவாயாக! அவருக்கு மேலான சுவனத்தை அளிப்பாயாக! அவர் குடும்பத்தாருக்கு மன ஆறுதலையும் மன உறுதியையும் வழங்குவாயாக! அவர் குடும்பத்தாருக்கு இதற்கு பகரமான ஒன்றை வழங்குவாயாக!
யா அல்லாஹ்! இந்த ஜனாஸா விடயத்தில் உழைத்த அத்தனை பேருக்கும் நல்வருள்பாலிப்பாயாக!
(தகவல் குடும்ப உறவினர் மூலமாக என்னால் நேரடியாக பெறப்பட்டது.)
சுல்பி அ. சமீன்