இந்தோனேஷியாவில் கடந்த சனிக்கிழமை 62 பேருடன் கடலில் வீழ்ந்த விமானத்தின் ஊழியர்கள், அவசரநிலை எதையும் பிரகடனப்படுத்தவில்லை என அதிகாரிகள் இன்று (11) தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவிஜயா எயார் நிறுவனத்துக்குச் சொந்தமான SJ182 விமானம் ஜகார்த்தா நகரிலிருந்து இந்தோனேஷியாவின் பொன்டியானெக் நகரை நோக்கி புறப்பட்டு 04 நிமிடங்களில் ஜாவா கடலில் வீழ்ந்தது.
$ads={2}
போயிங் 737-500 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் கடலில் வீழ்வதற்கு முன் திடீரென ஒரு நிமிடத்தில் சுமார் 10,000 அடி கீழிறங்கியது.
இதன்போது விமானத்தின் ஊழியர்களுக்கும் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையில் விசேட உரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை என என இந்தோனேஷியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் புலனாய்வாளர் நூர்கஹ்யோ உத்தோமோ தெரிவித்துள்ளார்.
"அது சாதாரண உரையாடல், சந்தேகத்திற்கிடமாக எதுவும் இருக்கவில்லை. அவசரநிலை அல்லது அது போன்ற விடயங்கள் குறித்து பேசப்படவில்லை" என அவர் தெரிவித்துள்ளார்
‘விமானம் நீரில் மோதிய தருணத்தில், பெரும்பாலும் அது பாதிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலையில், இவ்விமானம் வீழ்ந்தமைக்கு என்ன காரணம் என்பது எமக்குத் தெரியாது‘ எனவும் ஏ.எவ்.பியிடம் அவர் கூறியுள்ளார்.
இவ்விமானத்தின் தலைமை விமானி 54 வயதான அப்வான் ஆவார். 3 பிள்ளைகளின் தந்தையான அவர் முன்னாள் விமானப்படை விமானி எனவும், பல தசாப்த காலம் விமானங்களை செலுத்திய அனுபவம் கொண்டவர் எனவும் உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
$ads={2}
இதேவேளை மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் 2600 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. படகுகள், ஹெலிகொப்டர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், விமான சிதைவுகள் மற்றும் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விமானம் வீழ்ந்த கடற்பகுதியில், மீட்கப்பட்ட கை ஒன்று, விமான ஊழியரான ஒக்கி பிஸ்மா எனும் 29 வயதான யுவதியினுடையது எனத் தெரியவந்துள்ளது. இவரே இவ்விமானத்திலிருந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட முதல் நபராவார்.