
மினுவாங்கொடை - கல்லொழுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியை அறிவுறுத்தாமல், அப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொருவரின் உடலை அடக்கம் செய்திருப்பது தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு, கல்லொழுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியினால் கடந்த 08ஆம் திகதி இரவு செய்யப்பட்டிருப்பதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
$ads={2}
"கல்லொழுவை பிரதேசத்தில் வசித்து வந்த பெண்ணொருவர் மரணித்த பின்னர் தன்னையோ, பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகரையோ அறிவுறுத்தாமலும், திடீர் மரண விசாரணையொன்றை நடத்தாமலும் மரணித்த பெண்ணின் உடலை குடும்பத்தார் அடக்கம் செய்துள்ளனர்" என அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, "மரணித்த பெண் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவராக இருந்தாரா? அல்லது கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவரா?" என்பது தொடர்பிலான அறிக்கையொன்றினை குடும்பத்தார் மூலமாகப் பெற்றுத்தருமாறும், மினுவாங்கொடை பொலிஸாரினால் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் வரவழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது இவ்வாறிருக்க இவ்விவகாரம் தொடர்பில் குடும்பத்தாரிடம் வினவியபோது, "பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியுடனேயே மரணித்த பெண்ணின் உடலை அடக்கம் செய்தோம்" எனத் தெரிவித்தனர்.
-ஐ. ஏ. காதிர் கான்