உடல்களை அடக்கலாம் என்ற விசேட வைத்தியர் குழுவின் தெளிவான அறிக்கையை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்! பேராசிரியர் திஸ்ஸ விதாரண

உடல்களை அடக்கலாம் என்ற விசேட வைத்தியர் குழுவின் தெளிவான அறிக்கையை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்! பேராசிரியர் திஸ்ஸ விதாரண

கொரொனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட பிரதான குழுவுக்கு வழங்கியதன் மூலம் எதுவும் ஏற்படப்போவதில்லை.

விசேட குழுவின் அறிக்கையை ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு பிரதான குழுவில் வைரஸ் தொடர்பான விசேட வைத்தியர்கள் இல்லை என வைரஸ் தொடர்பான விசேட வைத்தியர் நிபுணரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் கட்சி நேற்று (21) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

$ads={2}

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொரொனா தொற்றின் காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால், காலப்போக்கில் அந்த சடலங்கள் மண்ணுடன் கலந்து நீரில் கலப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

பொதுவாக வைரஸ்கள் நீரில் பரவக்கூடியதல்ல. அது மனிதனின் மூக்கு மற்றும் வாய் ஊடாக சென்று சுவாசக்குழாய் வழியில் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடியது. மாறாக வேறு எங்கும் அது நிலைத்திருப்பதில்லை.

அத்துடன் வைரஸை கட்டுப்படுத்த அனைத்து பிரஜைகளும் இதன் பாதிப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் குறிப்பிட்ட வீதத்தினருக்கு தடுப்பூசியை ஏற்றி இதனை கட்டுப்படுத்த முடியாது.

கொரொனா காரணமாக எமது நாடு உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அதனால் அதற்கு முகம்கொடுத்து எப்படியாவது இதனை கட்டுப்படுத்தவே அனைத்து நாடுகளும் முயற்சித்து வருகின்றன.

ஆனால் எமது நாட்டில் கொரொனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதா எரிப்பதா என்ற தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தி ஒரு சமூகத்தின் மத நம்பிக்கைக்கு அகெளரவமளிக்கப்படுகின்றது.

கொரொனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள்குழு மிகவும் தெளிவான அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சுக்கு கையளித்திருக்கின்றது. அதனை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது தேவையற்ற பிரச்சினையையே ஏற்படுத்தும்.

அத்துடன் சுகாதார அமைச்சுக்கு அண்மையில் கையளிக்கப்பட்ட அறிக்கை,  வைரஸ் தொடர்பான நிபுணர்கள், நுண்ணுயிர் மற்றும் பல துறைசார்ந்த நிபுணர்கள் இணைந்து தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும்.

அந்த அறிக்கையை  அரசாங்கத்தினால் ஆரம்பமாக அமைக்கப்பட்ட வைத்தியர் குழுவிக்கு சமர்ப்பித்து, அதனை ஆராய்வதால் எந்த பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை. விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் பிரதான குழுவில் இல்லை. 

அதனால் அரசாங்கம் இந்த விடயமயாக தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் கொரொனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான சுகாதார வழிகாட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தி அதற்கான அனுமதியை வழங்க வேண்டும். 

உலக நாடுகள் அனைத்திலும் இவ்வாறு மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் போது நாங்கள் மாத்திரம் அதனை ஆய்வு செய்வதுகொண்டிருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்றார்.

மூலம் - வீரகேசரி

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post