முஸ்லிகளில் ஜனாஸா நல்லடக்க விவகாரம்; பௌத்த தேரர்களிடையே மோதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிகளில் ஜனாஸா நல்லடக்க விவகாரம்; பௌத்த தேரர்களிடையே மோதல்!


கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை உயிரிழந்தவர்களில் பல முஸ்லிம்கள் உள்ளடங்குவதோடு அவர்கள் அனைவரும், இஸ்லாமிய மார்க்கத்திற்கு அமையவாக அவர்கள் புதைக்கப்படாமல் எரிக்கப்பட்டுள்ளனர்.


இலங்கையில் கெரோனா தொற்று பரவ ஆரம்பித்த இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே இந்த சர்ச்சை நீள்கின்றது.


எவ்வாறெனினும் இலங்கையில் வாழும் எந்த மதத்தை, இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் பட்சத்தில் அவரை எரிப்பது என அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொண்டு அதனை செயற்படுத்தியும் வருகின்றது.


$ads={2}


இந்த விடயம் இலங்கையின் ஏனைய இனங்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தவில்லை என்றாலும், கலாசாரம், பழக்கவழக்கங்கள் குறிப்பாக மதம் சார்ந்து சரியான மற்றும் இறுக்கமான நடைமுறைகளை கடைபிடிக்கும் முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.தமது உறவுகள் தமது மார்க்கத்திற்கு எதிராக எரிக்கப்படுவதற்கு முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பினை வெளியிட்டு வந்தாலும், இதனை அரசாங்கம் காதில் வாங்கிக்கொள்வதாக இல்லை.கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் புதைக்கப்பட்ட சடலங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ முடியுமென இதுவரையில் எந்தவொரு விஞ்ஞானபூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை.


எவ்வாறெனினும், இலங்கையின் சுகாதார நிபுணர்கள் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் புதைக்கப்பட்ட சடலங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாகவும், இலங்கையில் நிலத்தடி நீரின் மட்டம் உயர்வாக இருப்பதே அதற்குக் காரணம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக நிலத்தடியிலிருந்து நீர்மட்டம் மிகவும் ஆழமாக இருக்கும் இரண்டு இடங்களை பரிந்துரை செய்து அறிக்கையை ஒப்படைத்துள்ளதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.


இதற்கமைய மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசமும் கிழக்கு மாகாணத்தில் எரகம பிரதேசமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பிரதேசங்களில் தரைமட்டத்திலிருந்து 30 ஆடி ஆழத்தில் கூட நீரை பெற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.


இது குறித்த, அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், அமைச்சர் வாசுதேவ நானாயக்கார தெரிவித்திருந்தார்.


இந்த விடயம் இவ்வாறு இருக்கையில், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் மக்களின் இறுதிச் சடங்குகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாடு பௌத்த பிக்குகளிடையே பிளவிற்கு வழிவகுத்துள்ளது.


தகனம் செய்வதற்கு எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லாததால், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வமத குழு ஒன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து, ஒருசில நாட்களுக்குள், கொரோனா வைரஸ் தொற்று உடல்கள் அனைத்தையும் எரியூட்டுமாறு கோரி, பல தேசியவாத பௌத்த அமைப்புகள் ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தை நடத்தியுள்ளன.


சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி வைரஸ் பாதிக்கப்பட்ட உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என, இலங்கையின் அமரபுர - ராமான்ய நிக்காயக்களின் சாமக்ரி சங்க சபையை இணைந்தியங்கும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கக் குழு கடந்த டிசம்பர் 26ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில், பரிந்துரைத்தது.


கொரோனா பாதிக்கப்பட்ட உடல்களை அடக்கம் செய்வது குறித்து விரைந்து தீர்மானம் மேற்கொள்வதற்கு, புவியியலாளர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள் குழுவையும், அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்கள் மற்றும் மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றை நியமிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


$ads={2}


"கொரோனா உடல்களை தகனம் செய்வது குறித்த தேவையை மீள்பரிசீலனை செய்வதற்கான முறைப்பாடு" என்ற தலைப்பில், டிசம்ர் 26ஆம் திகதி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், ஒரு இறந்த உடலை அடக்கம் செய்வது ஒரு கெளரவமான நடைமுறையாகும், இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட சில மதங்களைச் சேர்ந்தவர்கள் இதனை பின்பற்றுகிறார்கள். மதக் கொள்கை, மற்றும் மத நடைமுறைகள் அரசியலமைப்பில் ஒரு அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்படுகின்றன” என மதங்களுக்கிடையிலான நல்லிணக்கக் குழு குறிப்பிட்டுள்ளது.


"எனினும், இந்த அடிப்படை உரிமைகள் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கலாம் என்பதையும் நாங்கள் அறிவோம்" என அமரபுர மகா சங்க சபாவின் பதிவாளர் பல்லேகந்தே ரதன அனுநாயக்க தேரர் மற்றும் ராமான்ய நிக்காயவின் பதிவாளர் அத்தங்கனே சாசனரதன தேரர் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மீளாய்வு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எவ்வாறெனினும் கடந்த 28ஆம் திகதி காலி முகத்திடலில் இருந்து, ஜனாதிபதி செயலகம் வரை பாத யாாத்திரையாக வருகைத்தந்த, புதிய சிங்கள ராவ அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளை உள்ளடக்கி தேசிய அமைப்புகளின் ஒன்றியம் அனைத்து கொரோனா உடல்களையும் தகனம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது.


"மக்களின் கட்டளையிலிருந்து விலகி பிரிவினைவாதத்தை அனுமதிக்காதீர்கள், அனைத்து கொரோனா உடல்களையும் புதையுங்கள்” என்பதே இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கியமான கோரிக்கையாக அமைந்தது.


போராட்டத்தின் போது, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியிடம் ஒப்படைத்தனர்.


உள்ளூர் சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய கொரோனா சடலங்களை தகனம் செய்ய வேண்டுமென, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் வலியுறுத்தினார்.


”ஒரு நாடு, ஒரே சட்டம்' என்ற கருப்பொருளின் கீழ் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த நாட்டில் முஸ்லிம்களுக்காக சட்டங்களை உருவாக்க முடியாது. கொரோனா உடல்களை தகனம் செய்யுமாறு நாட்டின் சுகாதாரத் துறை பரிந்துரைத்துள்ளது. அந்த சட்டம் வர்த்தமானியில் வெளியாகியுள்ளது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை விடுத்து, முஸ்லிம்களின் விருப்பத்திற்கு அமைய புதைக்கவும், அதி குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது”


கொரோனா உடல்களை அடக்கம் செய்ய உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பெங்கமுவே நாலக தேரர் நிராகரித்ததோடு, இது சட்டவிரோதமானது எனவும் கூறியுள்ளார்.


"புதைக்க அனுமதி கோருவது தவறு. இது சட்டவிரோதமான செயல், , ஏனென்றால் இங்கே ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாங்கள் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கவே வந்தோம், மாறாக சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அல்ல” என அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.


கொரோனா தொற்றால் உயிரிழக்கும் உடல்களை புதைப்பதா அல்லது எரிப்பதா என்ற விடயத்தில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள அரசாங்கம் பதவியிழக்க நேரிடும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேரர்கள் எச்சரித்தனர்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது, இன்னமும் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும், இதனையும் இழக்கச் செய்யும் வகையில் அவர் செற்பட்டால், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப்படுமெனவும் இதன்போது வலியுறுத்ப்பட்டது.


எவ்வாறெனினும், தொற்றுநோயின் தன்மை பற்றி அந்த நேரத்தில் விஞ்ஞானபூர்வமான தெளிவு மற்றும் அறிவு இல்லாததால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வர்த்தமானி அறிவித்தல் வெளியானதாக, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களின் தகனம் குறித்து 2020 ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு குறித்து அமரபுர - ராமான்ய நிக்காயக்களின் சாமக்ரி சங்க சபையை இணைந்தியங்கும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கக் குழுகுறிப்பிட்டுள்ளது.


$ads={2}


குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பானது காலாவதியானது என மதங்களுக்கிடையிலான நல்லிணக்கக் குழு தெரிவித்துள்ளது.


"இருப்பினும், எட்டு மாதங்களுக்கும் மேலாக, கொரோனா வைரஸின் தன்மை குறித்து ஒரு குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சடலங்களை அடக்கம் செய்வதால் வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நோய்த்தொற்றால் இறந்தவர்களை தகனம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்தவொரு நியாயமும் இல்லை."


கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய சில நிபந்தனைகளின் கீழ் அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ள மதங்களுக்கிடையிலான நல்லிணக்கக் குழு, மறுபுறம், மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் ஏனைய மக்களின் மத நடைமுறைகளும் பாதுகாக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


இலங்கையின் அமரபுர - ராமான்ய நிக்காயக்களின் சாமக்ரி சங்க சபையை இணைந்தியங்கும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கக் குழு கடந்த டிசம்பர் 26ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளன.


"கொரோனா 19 உடல்களை அடக்கம் செய்வதில் சேர்க்கக்கூடிய நிபந்தனைகளாக, நீடித்த மற்றும் அழிக்க முடியாத பொருட்களால் உருவாக்கப்பட்ட சீல் செய்யப்பட்ட சவப்பெட்டிகள், நீர் வெளியேற முடியாத முஸ்லிம்களின் கொன்கிரீட் கல்லறைகள் (புதைகுழி) அல்லது நீர் வெளியேற முடியாத வேறு கல்லறைகளில் அடக்கம் செய்தல். அத்தகைய சவப்பெட்டிகள், கல்லறைகள் மற்றும் புதைகுழில் அனைத்திற்கும் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியின் ஒப்புதல் அவசியம். "


இத்தகைய முறைகளின் செயற்றிறனைக் கண்டறிய சோதனை அடிப்படையில் இந்த முறையில் அடக்கம் செய்ய முடியுமென, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கக் குழு பரிந்துரைத்துள்ளது.


இதனைவிட பாதிக்கப்பட்ட உடல்களை புதைக்க வேறு பாதுகாப்பான வழிமுறைள் காணப்படலாம் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


"இந்த சூழ்நிலைகளில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்த நபர்களை தகனம் செய்வதற்கான கட்டாயத் தேவையை மீளாய்வு செய்வற்காக, புவியியலாளர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள் குழுவையும், அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்கள் மற்றும் மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு ஜனாதிபதியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைப்பது தொடர்பிலான சர்ச்சை பௌத்த தேரர்களிடையே முறுகளை ஏற்படுத்தியுள்ள விடயத்தை, அவ்வளவு இலகுவாக கடந்து செல்ல முடியாது என்பது மாத்திரம் மறுக்க முடியாத உண்மை.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.