ஷுக்ரா முனவ்வர் முஸ்லிம் சமூகத்துக்கு தரும் செய்தி என்ன? ஏ.பி.எம். அஷ்ரப்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஷுக்ரா முனவ்வர் முஸ்லிம் சமூகத்துக்கு தரும் செய்தி என்ன? ஏ.பி.எம். அஷ்ரப்

shukra munawwar

25.01.2021


புத்தகங்களையும் வாசிப்பையும் தனது கல்வி வாழ்க்கையின் பிரதான கட்டுச் சாதனங்களாக எடுத்துக்கொண்ட பொருளாதார ரீதியாக முகம்கொடுத்த பல சவால்களை பொறுமை மற்றும் மன தைரியத்தோடு எதிர்கொண்ட இலை மறை காயாக வாழ்ந்து வந்த ஒரு திறமையான மாணவிதான் ஷுக்ரா முனவ்வர் என்று கூறினால் அது மிகையாகாது. 


பெற்றோர் தனக்களித்த சுதந்திரத்தையும், அவர்களது ஊக்குவிப்பு மற்றும் உற்சாகத்தையும் சரிவரப் பயன்படுத்திய இம்மாணவியின் வெற்றியானது வீட்டுச் சூழலில் வளரும் ஒரு பிள்ளை எவ்வாறான அறிவு மற்றும் ஆளுமைகளைப் பெற்றுக்கொள்கின்றது என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.


நாட்டின் பிரதான மொழியும், பெரும்பான்மை சகோதர இனத்தவர்களின் தாய்மொழியுமான சிங்கள மொழியில் அவர் கொண்டிருந்த சிறந்த புலமை அந்த மாணவியின் இனம், மதம் பாராது அவரை பலரும்  பாராட்டுவதற்கான முக்கிய ஒரு காரணியாக அமைந்துள்ளது எனலாம்.


ஷுக்ரா இன்று ஒரு நட்சத்திரமாகி விட்டார்; குறிப்பாக சிங்கள சமூகத்தவர் மத்தியில். காரணம் என்ன?


இஸ்லாத்துக்கு முன்னைய அரபியாவில் மொழியும் கவிஞர்களும் தான் அந்த சமூகம் போற்றும் விடயமாக இருந்தன. ஒரு கவிஞன் ஒவ்வொரு கோத்திரத்துக்கும் இன்றியமையாதவனாக இருந்தான். அத்தகையதொரு சிறப்பை சிங்கள சமூகமும் மொழிக்கும் மொழி அறிஞர்களுக்கும் கொடுக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். 


அமரர் அமர தேவ அவர்களின் மறைவை சிங்கள சமூகம் எவ்வாறு எதிர்கொண்டது என்று எண்ணிப் பாருங்கள்; மூன்று தினங்கள் துக்கம் கொண்டாடினார்கள்; இறுதிக் கிரிகைகளில் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். ஒரு வாரத்துக்கும் மேல் நாட்டின் இலத்திரனியல் ஊடகங்களும் அனைத்துப் பத்திரிகைகளும் இசை மற்றும் பாடல் துறைக்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்புகளையும் கொண்டாடினார்கள். 


$ads={2}


இந்தப் பின்னணியில் ஷுக்ரா நமக்கு தரும் செய்தி இதுதான்; முஸ்லிம் சமூகம் சிங்கள் மொழியில் பாண்டித்தியம் பெற்ற கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் அதிகமதிகம் உருவாக்க வேண்டும். குறிப்பாக அரபு மத்ரசாக்கள் சிங்கள மொழி பாண்டித்தியம் மிக்க உலமாக்களை உருவாக்க வேண்டும். ஒரு நியாஸ் மெளலவிக்குப் பிறகு இன்னும் அந்த இடைவெளி நிரப்பபடவில்லை என்பதை மறுக்க முடியாது.


ஷுக்ராவும் மார்க்க ஞானமுள்ள சிங்கள இலக்கியவாதியாக வளரவேண்டும். அதற்கு முஸ்லிம் சமூகமும் கைக் கொடுக்க வேண்டும்; அவரை விமர்சிப்பதை விட்டு விட்டு. அத்துடன் இத்தகைய மொழி திறமையுள்ள சிங்கள பாடசாலைகளில் படித்த மற்றும் படிக்கின்ற மாணவர்களை இனம் கண்டு வளர்க்க நம்மிடம் ஒரு திட்டமிருக்க வேண்டும். அதற்கான திட்டமிட்டு நாம் இயங்க வேண்டும். நம்மத்தியில் அடையாளம் காணப்படாமல் இவ்வாறான பல ஷுக்ராக்கள் இருக்கிறார்கள் அவர்களை வெளிக்கொணர்வதற்கான திட்டவரைபையும் ஆலோசனைகளையும் நாம் எதிர்பார்க்கிறோம். 


ஷுக்ரா முனவ்வரின் எதிர்காலம் ஒளிமயமாக எமது பிரார்த்தனைகள்!


ஏ.பி.எம். அஷ்ரப்

பணிப்பாளர்

முஸ்லிம் சமய பண்பாட்டவலுவல்கள் திணைக்களம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.