
நாம் இன்று வாழ்ந்துகொண்டிருப்பது தொழில்நுட்ப யுகத்திலாகும். உலக நாடுகளைப் பிரிக்கின்ற பூகோள ரீதியான எல்லைகளை வெறும் கோடுகளாக ஆக்கி, நவீன உலகை ஒரு தனிஅலகாக செயற்படவைக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் இன்று உச்சத்தை அடைந்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.
அவ்வகையில் ஒரு நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் ஏனைய அனைத்து துறைகளின் அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தை நோக்கிய பயணத்திற்கு தொழில்நுட்பத்துறையே ஆணிவேராகத்திகழ்கின்றது. இதனால், இலங்கை போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாடுகள் உட்பட எந்தவொரு நாட்டினாலும் இத்துறையை தவிர்த்து தனது வளர்ச்சிப்பாதையில் முன்னோக்கிச்செல்லமுடியாது என்பதே உண்மையாகும்.
$ads={2}
தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்ற செயற்றிறன் கொண்ட மனிதவளம் ஒரு நாட்டிற்கு வரப்பிரசாதமாகும். அத்தகு மனிதவளத்தை கல்வியின்மூலமே விருத்திசெய்யமுடிகின்றது. கல்வி, வெறுமனே ஏட்டுக்கல்வியாக் பரீட்சைநோக்கம் கொண்டதாக காணப்படுவது இன்றைய நவீன யுகத்திற்கு எவ்வகையிலும் பொருந்துமாட்டாது.
எனவே கல்வியானது, மாணவர்களின் ஆற்றல்களை விருத்திசெய்யக்கூடியதாக, சுயகற்றலை ஊக்குவிக்கக்கூடியதாக, தொழில்நுட்பமுன்னேற்றத்திற்கேற்ப அறிவை வழங்கக்கூடியதாக, தொழிற்சந்தையில் நிலவும் வேலைவாய்ப்புக்களுக்கு ஏற்றவகையில் பயிற்சியளிக்கக் கூடியவாறு அமையவேண்டியது காலத்தின் தேவையாகும். இவ்வனைத்து நோக்கங்களையும் தொழில்நுட்பக்கல்வியின் மூலம் பூர்த்திசெய்ய முடிகின்றது.
மாறிவரும் உலகிற்கேற்ப இலங்கையின் கல்வித்திட்டங்களும் மாற்றம் கண்டுவருகின்றன என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். அவ்வகையில் இலங்கையில் பல வழிகளில் தொழில்நுட்ப கல்வியை பெற்றுக்கொள்ள முடிகின்றது. பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர பாட ஏற்பாட்டில் தொழினுட்பசார் பாடத்தொகுதி ஒன்று காணப்படுவதுடன் , 2013 ஆம் ஆண்டிலிருந்து க.பொ.த உயர்தரத்திலும் தொழில்நுட்பப்பிரிவு என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டமை இலங்கையின் கல்வி வரலாற்றில் மிக முக்கிய மைற்கற்களாகும்.
பாடசாலைகளில் மட்டுமன்றி, இலங்கை உயர்தொழில்நுட்ப நிறுவனம் (ளுடுஐயுவுநு), ஜேர்மனிய தொழில்நுட்ப கல்லூரி, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (Nயுஐவுயு) உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக்கல்லூரிகளிலும், 2016 இலிருந்து; பல்வேறு கற்கைநெறிகள் மற்றும் தொழில்நுட்பப்பீடங்கள் மூலம் அரசபல்கலைக்கழகங்களிலும் தொழில்நுட்பக்கல்வி வழங்கப்படுகின்றது.
உயர் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கவும், வறுமையைக் குறைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்வடையச் செய்யவும் தொழில்நுட்பக்கல்வி அவசியமாகும். முறையான தொழில்நுட்பக்கல்வியை வழங்குவதன் மூலமே நம் நாட்டின் வருங்காலத் தலைவர்களான இளம் சந்ததியினருக்கு மிகச்சிறந்த தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்; ஏனெனில் இன்று இலங்கையில் நிலவிவரும் வேலையின்மைப் பிரச்சினைக்கு ஒரே ஒரு தீர்வு தொழில்நுட்பக்கல்வியைப் பெற்றுக்கொள்வது என்றால் பிழையாகாது. ஏனெனில் இன்றைய நவீன யுகத்தில், நவீன அமைப்புக்களுக்கு சிறிதும் பொருத்தமில்லாத் தொழில்நுட்ப அறிவு குறைந்த ஊழியர்களால், தொழில் வாய்ப்புக்களை பெறுவதிலும் தொழில்சார் நடவடிக்கைகளை செயற்றிறனுடனும் உத்வேகத்துடனும் மிக விரைவாகவும் சரியான முறையிலும் முடிப்பதிலும் பல்வேறு தடைகளை எதிர் நோக்கவேண்டி ஏற்படுகின்றது.
மாறாக தொழில்நுட்பக் கல்வித்திறன்களைக் கொண்டுள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை இலகுவாக பெறமுடிவது மட்டுமன்றி தொழிலொன்றிக்காக பிறரிடம் தங்கி இருக்க வேண்டிய தேவைப்பாடும் காணப்படுவதில்லை. தாமே சுயமாக தொழில் முயற்சிகளை ஆரம்பித்து அதனூடாக இன்னும் பலருக்கும் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆற்றல் மிக்கவர்களாக தொழில்நுட்பக்கல்வியைப் பெற்றவர்கள் காணப்படுவர். நாட்டில் உள்ள மாணவர் தொகையில் அரச பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவோர் 10 இலும் குறைவாகும். அவ்வாறு அப்பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம்பெற்று வெளியேறும் பல்கலைக்கழகப்பட்டதாரிகளே வேலையற்றிருக்கும் இப்போட்டிமிக்க யுகத்தில், தொழில்நுட்பகல்வியைப் பெற்ற மாணவர்கள் குறைந்த காலத்திலேயே தொழிலில் முன்னேறி அதிக வருமானத்தை ஈட்ட முடிகின்றமை தொழில்நுட்பக்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட போதுமான சான்றாகும்.
ஒரு நாடு தொழில்நுட்பத்திறன்கொண்ட மனிதவளத்தை வைத்திருந்தால் அதன் வளர்ச்சிப்போக்கில் சந்தேகத்திற்கு இடமில்லை என்பதற்கு சிங்கப்பூரினை மிகச்சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். வளங்கள் எதுவுமில்லாத நிலையில் , இருக்கும் ஒரேஒரு வளமான மனிதவளத்தை முறையாகப் பயன்படுத்தி ஏனைய நாடுகளின் தலைவர்கள் கூட புருவங்களை உயர்த்திப் பார்க்கும் அளவு வளர்ச்சி கண்ட சிங்கப்பூரின் வரலாற்றிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளம்.
அவ்வகையில் பொருத்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிடைக்கக்கூடிய வளங்களைக் கொண்டு உச்ச உற்பத்தியை பெறுவதற்கும், புதிய கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கவும், நிலைபேண் அபிவிருத்தியை பேணுவதற்கும் இலங்கையும், தொழில்நுட்ப அறிவுள்ள மனிதவளத்தை வேண்டிநிற்கின்றது. ஆகவே இலங்கையில் கைத்தொழில், வியாபார, சேவைத்துறை மற்றும் ஏனைய அனைத்து துறைகளையும் தொழில்நுட்பத்தை உச்சஅளவில் பயன்படுத்தி விருத்திசெய்யவேண்டி உள்ளது.
இலங்கை ஒரு வளர்ச்சியடைந்துவரும் வரும் நாடு என்றவகையில், தொழில்நுட்பக்கல்வியை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே படிப்படியாக முன்னேற்றி வருகின்றது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
தொழில்நுட்பக்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு அவசியமான நிதி ஒதுக்கீடு ப்பற்றாக்குறை, பயிற்றப்பட்டவர்களின் பற்றாக்குறை என்பவற்றிலிருந்து இலங்கை விடுபடவேண்டியுள்ளது.
$ads={2}
உதாரணமாக 2019 ஆம் ஆண்டினை எடுத்து நோக்கினால், அவ்வாண்டு கல்விக்காக ஒதுக்கீடு செய்த 344 பில்லியன் ரூபாவில் தொழில்நுட்பக்கல்விக்காக ஒதுக்கீடு செய்த தொகை வெறும் 3.6 பில்லியன் ரூபாவாகும். எனவே வருடந்தோரும் கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையில் தொழில்நுட்பக்கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரிக்க வேண்டி உள்ளது.
மேலும் நாட்டில் தொழில்நுட்பக்கல்வியை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படினும் தொழில்நுட்பத்துறையில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். இக்குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்களுக்கும், உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கும் தொழில்நுட்பகல்வி தொடர்பான விழிப்புணர்வூட்டல், ஊக்குவிப்புக்கள் மற்றும் உதவிக்கொடுப்பனவுகள் என்பவற்றை அரசு வழங்குவதற்கு முன்வர வேண்டி உள்ளமை காலத்தின் தேவையாகும்.
இன்னும் இத்துறையில் நிலவும் பயிற்றப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் பொருட்டு இத்துறையில் ஆர்வம்,ஆற்றல் உள்ள பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து அவர்களுக்கு ஆசிரிய நியமனங்களை வழங்கலாம்.
எனவே இவ்வனைத்து விடயங்களையும் நோக்குமிடத்து மாற்றம்கண்டு வரும் நவீன உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றமடையும் வரை உலகத்துடன் எம்மால் முன்னோக்கிச்செல்ல முடியாது என்பது புலப்படுத்தப்படுகின்றது.
பெரும்பாலான நாடுகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியவாறு தங்களது நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள இன்றைய யுகத்தில், இலங்கையர் எனும் ரீதியில் எமக்குள்ள பொறுப்புக்களை விளங்கி நடந்துகொள்வதன் மூலம் எம்மாலும் எதிர்காலத்தை வெற்றிகொள்ள முடியும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
"வழித்தடம்" - அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம்
நஹ்ழா நளீம்
கொழும்பு பல்கலைக்கழகம்