தகனம் செய்ய வெளியான வர்த்தமானி சட்டவிரோதமானது! -ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்

தகனம் செய்ய வெளியான வர்த்தமானி சட்டவிரோதமானது! -ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்


கொரோனாவால் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டும் என வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி சட்டவிரோதமானதாகும்.


அதனை இரத்துச் செய்ய வேண்டும். அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமைய அடக்கம் செய்யலாம் என வைத்தியர் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் வழிகாட்டலை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுக்கட்சி உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார்.


$ads={2}


பாராளுமன்றத்தில் இன்று (06) நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச் சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


கொரோனா  வைரஸ் தொடர்பில் ஆரம்ப கட்டத்தில் யாருக்கும் அது தொடர்பில் தெளிவில்லாமல் இருந்தது. அதனால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யாமல் தகனம் செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.


இதனால் முஸ்லிம் மக்களே பாதிக்கப்பட்டனர். என்றாலும் தற்போது இந்த வைரஸ் தொடர்பில் வைத்தியர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.


அதனால் கொரோனா காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஜனாதிபதிக்கு முன்வைத்தோம்.


இது வைத்திய துறையுடன் சம்பந்தப்பட்டதால் அரசியல் ரீதியில் இதற்கு முடிவெடுக்காமல், இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க தலைசிறந்த வைத்தியர் குழுவொன்று அமைக்கப்பட்டது. 


தற்போது அந்த வைத்தியர் குழு கொரோனா வைரஸ் நீரில் பரவுகின்றதா, மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துருக்கின்றது. 


மேலும் கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் வைத்தியர் குழுவின் தீர்மானத்தின் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே அரசாங்கத்தின் தீர்மானமாக இருந்தது.


அதன் பிரகாரம் தற்போது வைத்தியர் குழு கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு தேவையான வழிகாட்டல் அடங்கிய பரிந்துரையை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்திருக்கின்றது. அதன் பிரகாரம் விரைவில் அடக்குவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும்.


அத்துடன் கொரோனாவால் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டும் என தெரிவித்து வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானதாகும். மரணிப்பவர்களை அடக்கும் உரிமை அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கின்றது. அதனை மாற்றுவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளவேண்டும். 


$ads={2}


பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமலே குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post