கொரோனா கைதிகளின் உணவு பொதியில் 10 ஆயிரம் ரூபா பணம் மற்றும் லைட்டர்கள்! அதிகாரி இடைநிறுத்தம்!

கொரோனா கைதிகளின் உணவு பொதியில் 10 ஆயிரம் ரூபா பணம் மற்றும் லைட்டர்கள்! அதிகாரி இடைநிறுத்தம்!


கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் கைதி ஓருவருக்கு வழங்கும் நோக்கில், சட்டவிரோதமாக பொதி ஒன்றை பெற்று வைத்திருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்றுவரும் கைதி ஒருவருக்கு வழங்குமாறு கொடுக்கப்பட்ட உணவுப் பொதி ஒன்றை , அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.


இதன்போது, சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரியின் அறை சோதனை செய்யப்பட்டு அங்கிருந்து பொதி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அந்த பொதியில் உணவு , 10,000 ரூபா பணம் மற்றும் புகைத்தலுக்காக பயன்படுத்தப்படும் லைட்டர்கள் இரண்டும் மீட்கப்பட்டன.


இதுத் தொடர்பில் ஆரம்பக் கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ,இந்த விவகாரம் தொடர்பில் குறித்த சிறைச்சாலை அதிகாரியின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்


-செ.தேன்மொழி


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post