ஈஸ்டர் தாக்குதல் செப்புத் தொழிற்சாலை விவகாரம்: சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரும் விடுதலை!

ஈஸ்டர் தாக்குதல் செப்புத் தொழிற்சாலை விவகாரம்: சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரும் விடுதலை!

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்காக குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட சினமன் கிராண்ட் தற்கொலைதாரி மொஹம்மட் இன்சாப்பின் வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையில் வைத்து சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 10 ஊழியர்களையும் விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (19)  உத்தரவிட்டது.     

$ads={2}

சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முறைப்பாட்டாளர் தரப்பான பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய சந்தேக நபர்கள் விடுதலை செய்து வழக்கை நிறைவுக்கு கொண்டு வருவதாக கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திரா ஜயசூரிய அறிவித்தார்.

தற்கொலைதாரி மொஹம்மட் இன்சாப்பின்
இதன்படி இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் இருந்த 08 பேர், விளக்கமறியலில் உள்ள இருவர் என மொத்தமாக 10 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் உள்ள இருவரையும் விடுவிக்க சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, புத்தளம் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி மொஹம்மட் ஹபீல், டயகமவைச் சேர்ந்த மஹா வங்ச முதியன்சலாகே சமந்த, படல்கும்பரவைச் சேர்ந்த மொஹம்மட் லாபிர், வெலம்படையைச் சேர்ந்த மொஹம்மட் சாலிஹ் மொஹம்மட் அரூஸ், படகும்பரவைச் சேர்ந்த மொஹம்மட் அஹ்சாக் மொஹம்மட் அஸ்லம், பெரியமடுவைச் சேர்ந்த சலீம் சாலிஹீன், வெலம்படையைச் சேர்ந்த கிதர் மொஹம்மட் சுமைர், ஹப்புத்தளையைச் சேர்ந்த ரெஷன் கோவித்தசாமி, முருதலகஹமுல்லாவை சேர்ந்த ஹனீபா மொஹம்மட் முத்தலிப் மற்றும் கருப்பையா ராஜேந்ரன் அப்துல்லாஹ் ஆகிய 10 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்ப்ட்டுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயறு தற்கொலை தாக்குதலைத் தொடர்ந்து, சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான அவிஸ்ஸாவெல்ல வீதி, வெல்லம்பிட்டியில் அமைந்துள்ள கொலோசஸ் பிரைவட் லிமிடட் எனும் செப்புத் தொழிற்சாலை சோதனைக்கு உட்பட்டது. இதன்போது அங்கிருந்த 09 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 2019 மே 06 ஆம் திகதி அவ்வழக்கு மீள விசாரணைக்கு வந்ததுபோது அந்த சந்தேக நபர்கள் 09 பேரையும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகேயினால் விடுவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இது குறித்து நாட்டில் பரவலான விவாதமொன்று ஏற்பட்ட நிலையில், விசாரணைகள் வெல்லம்பிட்டி பொலிஸாரிடமிருந்து பயங்கரவாத தடுப்பு மற்றும் புனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

$ads={2}

அதன்படி இந்த விவகாரத்தில் மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் மொத்தமாக இவ்விவகாரத்தில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 08 பேர் மட்டுமே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். ஏனைய இருவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடர்ந்த நிலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டதை மையப்படுத்தி, அப்போதைய வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டு, பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் பிரத்தியேக உள்ளக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் விசாரணைகளுக்கு அமைய, குறித்த 10 சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு சட்ட மா அதிபர் விசாரணைத் தகவல்களை ஆராய்ந்து ஆலோசனை வழங்கியுள்ளார். சட்ட மா அதிபரின் எழுத்துமூல ஆலோசனை நேற்று பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால், மேலதிக நீதிவான் ரஜீந்திரா ஜயசூரியவுக்கு கையளிக்கப்பட்டது. அதன்படியே அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு குறித்த வழக்கு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

-எம்.எப்.எம்.பஸீர்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post