கால் போத்தல் மதுபானங்களுக்கு வைப்புக்கட்டணம் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் முன்வராத பட்சத்தில் கட்டாயமாக கால் போத்தலை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மதுபான விற்பனை நிலையங்களில் போத்தல்களை விற்பனை செய்யும் போது வைப்பீட்டு கட்டணம் அறவிடுவது தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் மதுபான தயாரிப்பு நிறுவனம் மற்றும் கலால் ஆணையாளர் திணைக்கள அதிகாரிகளுடன் நேற்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கால் போத்தல் மதுபான பாவனையின் மூலம் சூழல் மாசடைந்திருப்பதாக சூழல் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், கால் போத்தல் மதுபானத்துக்கும் வைப்புக் கட்டணத்தை அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கால் போத்தல் மதுபானத்திற்காக பெறப்படுகின்ற வைப்புக் கட்டணமானது, வாடிக்கையாளர்கள் அந்த கட்டணத்தை மீண்டும் பெறத் தூண்டும் வகையிலான கட்டணமாக இருக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
பெற்றுக்கொள்ளப்படும் வைப்பு கட்டணம் எவ்வளவு என்பது சம்பந்தமாக இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பதுடன், சுற்றாடல் அமைச்சு குறித்த திணைக்களத்துடன் கலந்துரையாடி தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளது.
இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் முன்வராத பட்சத்தில் கட்டாயமாக கால் போத்தலை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் வருடாந்த போத்தல் உற்பத்தியானது 120 மில்லியனாவதுடன் அவற்றில் 18 - 20 மில்லியனுக்கும் இடைப்பட்ட அளவு போத்தல்கள் மதுபானத்திற்காக பயன்படுத்தப்படுவதாகவும் இவற்றுள் 60 வீதத்திற்கும் மேற்பட்டவை மீள் சுழற்சி செய்யமுடியாதெனவும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
-க.பிரசன்னா