ஜனவரி முதல் கொரோனா இல்லாத மாகாணமாக மேல் மாகாணத்தினை மாற்றுவோம் - பசில் ராஜபக்ச

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனவரி முதல் கொரோனா இல்லாத மாகாணமாக மேல் மாகாணத்தினை மாற்றுவோம் - பசில் ராஜபக்ச

தேசிய பொருளதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு உற்பத்திகள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி, நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற காரணிகள் முதன்மையானவை எனவும் தேசிய பொருளாதாரத்தின் கேந்திர நிலையமான மேல் மாகாணத்தை அபிவிருத்தி செய்வது நாட்டின் எதிர்கால முன்னேற்றப் பாதைக்கு நேரடி பங்களிப்பை வழங்கும் எனவும் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்

கொழும்பு அலரி மாளிகையில் நேற்று (2020.12.21) நடைபெற்ற கிராமத்துடன் கலந்துரையாடல் திட்டத்தின் ஊடாக, வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு தேசிய வேலைத்திட்டத்தின் மேல் மாகாணத்திற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


$ads={2}

வரவு செலவுத் திட்டத்தின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனவரி மாதம் முதல் ஒரு கொவிட் தொற்றாளரேனும் இனங்காணப்படாத மாவட்டமாக மேல் மாகாணத்தை மாற்றியமைக்க வேண்டும் என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டம் கிராமத்துடன் கலந்துரையாடல் திட்டத்தின் ஊடாக, வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்துக்கு வேலைத்திட்டத்தின் வாயிலாக செயற்படுத்துவதற்கு மேல் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.


அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மூலம் நாம் மக்களின் கருத்துகளை பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் கேட்டறிந்து கொண்டோம். அதன் பிரகாரம் அமைக்கப்பட்ட விசேட குழுவினூடாக நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை உருவாக்கினோம். கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமாக ஜனாதிபதி கிராமம் தோறும் சென்றார். அக்கிராமங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அத்தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்திட்டங்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக அரசாங்கம் கலந்துரையாடலில் ஈடுபடுகின்றது.


கொவிட்-19 தொற்றின் அச்சுறுத்தலால் நாம் கடன் மதிப்பீட்டில் கீழ்நிலைக்குத் தள்ளப்படுவோம் என பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நாம் எங்களால் வாங்கப்பட்ட கடன்களை எவ்வித நிலுவையும் இல்லாமல் செலுத்த முடிந்தது. ஏற்றுமதி மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தின் அளவு வீழ்ச்சியடைந்தாலும் செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் அதன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. குறித்த மாதத்தில் பில்லியன் டொலருக்கும் அதிகளவான ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலமே எமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறானதொரு காலப்பகுதியில் தான் நாம் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தோம்.

கிராம ரீதியான அபிவிருத்திக்கு இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கியுள்ளோம். அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் ஆரம்ப பாடசாலை, தாய்சேய் சிகிச்சை நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நவீன உலகிற்கு பொருந்தும் விதத்தில் கல்வித்துறையில் மாற்றத்தை மேற்கொண்டு கிராமப்புற பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக நாம் நிதியை ஒதுக்கியுள்ளோம். அதன்படி ஒவ்வொரு பிரிவுக்கும் தரமான முன்பள்ளி ஒன்றை அமைக்க முடியும். பாடசாலைகளின் பாடத்திட்டங்கள் தொடர்பாக தேசிய ரீதியில் செயற்படுவதற்கும் அரசாங்கத்தினால் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பாகவும் அவற்றை முழுமைப்படுத்திடவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே பாடசாலைகளை முதன்மைப்படுத்தி சுகாதாரக் குழுவொன்றை அமைக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இலங்கையை உருவாக்கிட ஜனாதிபதியால் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் வருடத்தில் நாட்டிலுள்ள அனைவரதும் வீட்டிலும் இணையத் தொடர்பாடல் வசதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். கிராமிய வீதிகள் தொடர்பாகவும் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் ஆட்சிக் காலத்தில் வீதிகள் தொடர்பில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையும் 100,000 கிலோ மீற்றர் வரை வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழுக்களில் பங்குகொள்வதற்கு வாய்ப்பை வழங்குவோம்.இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்காகவே இம்முறை அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டது. சுமார் 8400 மில்லியன் ரூபா அதற்காக ஒதுக்கப்பட்டது. அதன்படி பொது விளையாட்டு மைதானம், பாடசாலைகளுக்கான விளையாட்டு மைதானம் என்பவற்றை அந்தந்தத் துறைகளுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. சிறு நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் குளங்களைப் புனரமப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வனைத்து திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் போது சுற்றுச்சூழல் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவோம். சூழலுக்கான நட்பு ரீதியான வளர்ச்சியை மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற சுற்றுச்சூழலின் ஊடாக நகர்ப்புற வனங்களை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாழ்வாதார அபிவிருத்திக்காக சுமார் 10,000 மில்லியன் ரூபா வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக பல அமைச்சுகளை அமைத்துள்ளோம்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழுவிற்கான கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் நடைபெறும். 14021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இக்கலந்துரையாடல்களுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுதல் வேண்டும். அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களில் அதிகளவானோருக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். கடந்த காலங்களில் கைவிடப்பட்ட திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும் அவ்வாறானதொரு திட்டத்தை தெரிவுசெய்தல் வேண்டும்.

அனைத்துக் கிராமங்களிலும் பெண் தொழில் முனைவோர் இருவரைத் தெரிவுசெய்து விற்பனை நிலையங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம். பிரதான பாதையை அண்மித்ததாக அதனை அமைப்பதே சாலச்சிறந்ததாகும். இவைகளை கணினித் தொழில்நுட்பத்தின் ஊடாக விலைகளை கணக்கிடுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துவோம். அதற்கான அடிப்படை வசதிகளை வழங்குவோம். சமுர்த்தி கணக்கிலேயே அவர்களின் தொகையைக் குறைக்கும் வழிமுறையொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி, தகவல் மற்றும் தொடர்பாடல் துறையின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக வளங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருட்களை ஒழிப்பதற்காகவும் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் பாரியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை நாட்டினுள் கொண்டு வருவதனை தடுப்பதற்காக முப்படைகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். பாடசாலைகளுக்குள் போதைப்பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான விதிமுறையொன்றை வகுத்துள்ளோம். போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலைகளில் அடைக்காமல் அவர்களை புனர்வாழ்வு செய்வதற்கான வழிமுறையொன்றை அமைத்து அதற்காக கிராமக் குழுக்களினூடாக ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வோம்.

மேல் மாகாணம் என்பது பிரதான மாகாணமாகும். நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சிக்கான பயணமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவது மேல் மாகாணத்தில் தான். ஜனவரி மாதம் தொடக்கம் ஒரு கொவிட் தொற்றாளரேனும் இனங்காணப்படாத மாவட்டமாக மேல் மாகாணத்தை மாற்றியமைக்க வேண்டும். அப்படியிருந்தால் எமக்கு வெற்றிகரமான பாதையில் செல்ல முடியும். மேல் மாகாணத்தின் நீர் வளங்களை பாதுகாப்பது தொடர்பான ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் பாதுகாப்பான பயிர்த்தோட்டங்களை அமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் செயலற்றதானால் முழு நாட்டிற்கும் அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். பேலியகொட மீன்சந்தை மற்றும் மெனிங் பொதுச்சந்தை மூடப்பட்டதும் முழு நாட்டிற்கும் பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தியது. மேல் மாகாணத்தை கேந்திர நிலையமாகக்கொண்டு முதலீடுகள் தொடர்பான வாய்ப்புகள் அமைகின்றன. அதனால் மேல் மாகாணத்தில் இந்த வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்நிகழ்வில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மேல் மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.