முஸ்லீம் காங்கிரஸில் இருந்து அலி சாஹிர் மௌலானா இராஜினாமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லீம் காங்கிரஸில் இருந்து அலி சாஹிர் மௌலானா இராஜினாமா?


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முக்கியஸ்தருமான அலி சாஹிர் மௌலானா அந்தக் கட்சியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.


இது தொடர்பில் அவர் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்பிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,


இன்றைய நாள், (ஜனாஸா எரிப்பு வழக்கு நிராகரிக்கப்பட்ட தினம்) இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு ஓர் அபகீர்த்தி ஏற்படுத்திய நாளாக அமைந்துவிட்டது. எமது நாட்டின் அதி உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு , என்னுடையதும், இரண்டு மில்லியன் முஸ்லிம்களினதும் இதய நரம்புகளை பிடிங்கி எடுத்தது போலுள்ள வேதனையில் ஆழ்த்தியதுடன் எங்களது கண்ணியத்தையும், எங்களது அதிமுக்கிய அடிப்படை உரிமையையும் இந்த நாட்டின் பிரஜைகளான முஸ்லிம்களுக்கு மறுத்திருக்கிறது.


மிகவும் கவலை தோய்ந்த மனதுடன் மேற் குறிப்பிடப்பட்ட விடயம் சம்பந்தமாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது யாதெனில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையில் இருந்து உடனடியாக நான் விலகிக் கொள்கிறேன் என்பதாகும்.


முஸ்லிம் சமூகம் இலங்கையிலே மிகவும் பாரிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில், மிகவும் நிதானமாக ஆழ்ந்து சிந்திந்ததின் உச்சகட்டம்தான் இத்தீர்மானத்தினை இன்றைய நாளிலே இவ்வாறு மேற்கொள்ள வைத்துள்ளது.


நாம் அறிந்த வகையில் பல நூற்றாண்டு காலமாக இலங்கையின் ஒட்டு மொத்த தேசியத்தின் பெருமதி மிக்க பாரம்பரியங்கள் , கலை கலாச்சாரங்களின் விழுமியங்களில் முஸ்லிம்களின் வகிபாகமும், பங்களிப்பும் கலந்ததாகவே இருந்து வந்திருக்கிறது. இருந்தும்கூட, அண்மைக்காலமாக எமது சமூகத்தின் பாதுகாப்பிற்கும், நல்வாழ்விற்கும் , எம்மால் எடுக்கப்படுகின்ற அதிகூடிய அக்கறைகள் அனைத்தும் தொடர்ச்சியாக பல அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு , எமது சமூகத்தை புறந்தள்ளுவதுடன் , தப்பபிப்மிராயங்களை உருவாக்கி , துவேசத்தை ஏற்படுத்தியிருக்கின்ற விரும்பத்தகாத விஷமத்தனமான பேர்வழிகளின் அரசியல் ரீதியான வெற்றிகளை குறுக்கு வழியில் அடைவதற்க்கான தீவிரமான அரசியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார்கள்.


$ads={2}


என்னைப்பொறுத்த மட்டில் ஓர் உறுதியான தீர்மானத்தை கொண்டவனாக தேசிய அரசியலில் தேசிய கட்சிகளினூடாக 1988 இல் இருந்து தடம் பதித்து மக்களின் நலன்கருதி சேவையாற்றுவதற்காகவும், ஒருமைப்பாட்டுடன் நாட்டின் இறையாண்மையை காப்பதற்காகவும் காத்திரமான பங்களிப்பை எமது அனைத்து மக்களினது நண்மை கருதி அர்ப்பணத்துடன் செயலாற்றி வந்தவன்.


தங்களது அழைப்பை ஏற்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து உங்களது தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம் சமுதாயத்தின் குரலாக ஒலித்து பல்லின மக்களது புரிந்துணர்வுடனான சமாதான சகவாழ்வுக்காகவும் , ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சுபீட்சத்துக்காகவும் மக்கள் பணிகளை தொடர்ந்து ஆற்றவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கடந்த 5 வருடங்கள் இணைந்து செயற்பட்டேன்.


மனத்தூய்மையுடன் உங்களுடன் இணைந்து நான் செயற்பட்ட இந்த 5 வருட காலத்தில்

நீங்களும் உங்களால் முடிந்த அளவு முயற்சிகளை மேற்கொண்டு செயலாற்றினீர்கள் என்பதை நான் நன்கறிந்தேன். அதுபோன்று நானும் எனது சக்திக்கு உட்பட்ட வகையில் எனது பங்களிப்பை எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை முடியுமான அளவுக்கு நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டும், உங்கள் மீது அதீத விசுவாசத்தடனும், நம்பிக்கையுடனும் நான் செயற்பட்டேன் என்பதை நீங்களும் நன்றாகவே உணர்ந்திருந்தீர்கள்.


2015ஆம் ஆண்டில் இருந்து எமது சமுதாயம் முகம் கொடுத்த பல்வேறு சவால்களை நாங்கள் எதிர்கொண்டு பல விடயங்களுக்கு அவ்வப்போது தீர்வினை கண்டதுடன் சில விடயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதல் அடையக்கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்ப்பட்டோம்.


எமது மக்களது எதிர்பார்ப்புகளுக்கும், ஒட்டு மொத்த எமது நாட்டு பிரஜைகளினதும் நலன் கருதியும கடமை உணர்வுடனும், சகிப்புத்தன்மையுடனும் அரசியல் வேறுபாடுகளை எல்லாம் மறந்து கூட்டாக தீர்மானங்களை எடுத்து தன்னலமற்ற முறையில் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றோம்.


துரதிர்ஷ்டவசமாக சில விடயங்களுக்கு முற்று முழுதாக தீர்வுகள் எட்டப்படாத போதிலும் அரசியல் ரீதியாக பல விதமான இடையூறுகளும் அழுத்தங்களும் வந்த போதெல்லாம் அனைவரையும் திருப்திப்படுத்தக் கூடியதான தீர்வுகள் அடைய முடியாவிட்டாலும் மனச்சாட்ச்சிப்படி இயலுமான பொதுவான ஏதுவான கூட்டு தீர்மானங்களை வெளிப்படையாக எடுத்து செயற்ப்பட்ட முன்னெடுப்புகள் ஓர் ஆரோக்கியமான சமூக கண்ணோட்டத்தை உறுவாக்கியது.


ஆனால் இன்று எமது சமூகம் முகம்கொடுக்கின்ற பாரதூரமான துன்புறுத்தல்களையும் , சமூக பிரச்சினைகளையும் புறந்தள்ளி, கட்ச்சியின் கொள்கைகளுக்கு மாறாக சுயநல நோக்கையும் அவரவர் தேவைகளை அடைவதை மாத்திரமே குரியாகக்கொண்ட கட்ச்சியின் பிரதிநிதிகள் சென்றமை எந்த வகையில் ஏற்புடையது?


இவர்களது செயற்பாடுகளை ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிந்த காலத்தில் இருந்தே வெளிப்படையாக எமக்கு அவதானிக்க கூடியதாக இருந்தது, தேர்தலிலே வெல்லும் வரை மக்களை எந்தளவுக்கு உணர்ச்சியூட்டி , தேசிய அரசியல்வாதிகளை எல்லாம் தூற்றி பல்வேறு தேர்தல் பரப்புரைகளை முன்வைத்தவர்களாக அழுது புரண்டு வாக்குகளை சேகரித்து விட்டு தேர்தல் வெற்றிக்கு பிற்பாடு அனைத்தையும் புறந்தள்ளி விட்டு தேர்தல் சூடு அடங்குவதற்குள்ளேயே எதை எல்லாம் விமர்சித்து உரையாற்றினார்களோ அவற்றை எல்லாம் மறந்து நாட்டிலே அடக்குமுறையையும் சர்வதிகாரமான நிலையையும் கொண்டு வரக் கூடிய அரசியல் திருத்தத்திற்கு ஆதரவளித்தமையை கண் கூடாக நாம் கண்டு கொண்டோம்.


பெரும்பான்மையினரை மாத்திரம் திருப்திப்படுத்துவதற்காக சிருபான்மையினரை கிஞ்சித்தும் கணக்கெடுக்காது அடக்கி ஆளுகின்ற அரசியல் சீர்திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான 2/3 பெரும்பான்மையை பெறுவதற்கு எமது கட்சியை சேர்ந்த 05நாடாளுமன்ற உறுப்பினர்களுள்  4உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர், கடந்த 05வருடங்களாக நாங்கள் எந்த அடிப்படையில் சமூக நலனை முன்னிறுத்தி நல்லிணக்கத்திற்காக எவ்வளவு விடயங்களை முன் வைத்தோமோ அவற்றிற்கு மாற்றமான நயவஞ்சகத்தனமான நிலையை வழிக்கொண்டு மக்களது எதிர்பார்ப்புக்களை எல்லாம் புறந்தள்ளி இன்று முஸ்லிம் சமூகம் எதிர் கொண்டுள்ள உரிமை சார் பிரச்சனைகளுக்காக கூட குரல் எழுப்ப முடியாத நிலையில் எமது உறுப்பினர்கள் இருப்பதை காணும் இழி நிலை உள்ளது.


இந்த இழி நிலை குறித்து ஒட்டுமொத்தமாக வெட்கப்பட்டவனாகஙும், இந்த அறுவறுப்பான செயற்ப்பாட்டை மனதால் வெறுப்பவனாகவும் மேலும், எமது மக்களுக்கு கலங்கத்தை ஏற்ப்படுத்தக்கூடிய வகையில் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த இந்த பாராளுமன்ற பிரதிநிதிகளது செயற்பாடு குறித்து மேலும் வேதனையடைகிறேன்.


கடந்த பாராளுமன்ற காலத்திலே முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளாக 2018ம் ஆண்டில் நாங்கள் முகம் கொடுத்த அந்த 52 நாட்கள் அரசியலமைப்பு நெருக்கடி நிலமை காலத்திலே ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வுகளின்போதும் கொண்டு வரப்பட்ட மசோதாக்கள் 20வது திருத்தச்சட்டத்துடன் ஒப்பீட்டு ரீதியாக பார்க்கின்ற போது குறைந்த முக்கியத்துவத்தை கொண்டபோதும் அந்த மசோதாக்களின் வாக்கெடுப்புகளின் போதெல்லாம் தலைவர், உங்களது தலைமையிலே கூட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டே வாக்களிப்பில் ஒத்த கருத்துடனும், வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் செயற்ப்பட்டோம் . மேலும் மெலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து எங்களது சமூகத்தின் மீது அநியாயமாக குற்றம் சுமத்தி எங்களை குறிவைத்து வன்முறைகள் கட்டவிழ்த்தப்பட்ட அந்த இக்கட்டான காலகட்டத்திலே எமது சமூகத்தின் பாதுகாப்புக் கருதி , நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்ப்படாத முறையில் கட்ச்சி பேதங்களை எல்லாம் மறந்து, சுயநலங்களுக்கு இடம் கொடுக்காது திடமாக ஒன்றிணைந்த அனைத்து முஸ்லிம் கடந்த பாராளுமன்ற பிரதிநிதிகளின் குழாமின் செயற்ப்பாட்டையும் இங்கு நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.


$ads={2}


20ஆவது திருத்தச்சட்ட விவாத நேரத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எவ்வித சூடு சுரனையும் இல்லாமல் “ஒருவரது அபிப்பிராயத்தை தெரிவிப்பதற்கு சுதந்திரம் இருக்கிறது என்ற அடிப்படையில் தன்னுடைய ஆதரவை அரசாங்கத்துக்கு கொடுப்பதாக வெளிப்படுத்துகிறேன் என்று கூறி உரையாற்றியதை தொலைக்காட்சி நேரலையின் மூலமாக முழுநாடும் பார்க்க கூடியதாக இருந்தது, அதனைத்தொடர்ந்து அந்த 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக அவரோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய 3நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டமை ஆச்சரியமாகவும் , வெட்க கேடான செயலாகவும் பார்க்கப்படுகின்றது, மேற்குறித்த உண்மையானது அவர்களுக்கு இவ்விடயத்திலே தொடர்ந்து செல்ல அனுமதியளித்த காரணத்தில்தான் என்றும் , மிகவும் இக்கட்டான இந்த சட்டமியற்றல் குறித்தான திருத்த சட்டமானது , ஒட்டுமொத்தமாக நேரடியான முறையில் எமது சமூகத்தின் பாதுகாப்பிற்கும் , நலன்களுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிதர்சனமான உண்மை எச்சரிக்கை போன்று தெரிந்திருந்தும் இவர்கள் ஆதரவளித்தார்கள்.


முஸ்லிம்களது எதிர்காலம் , இருப்பு ,அடக்கு முறை குறித்த எவ்வித அக்கறையும் இன்றி ஆதரவளித்த இவர்களது நயவஞ்சகத்தனமான செயற்பாட்டிற்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளோ , பகிரங்க விளக்கங்களோ கோராது இருக்கின்ற கட்சி முஸ்லிம்களது ஏகோபித்த குரல் என எவ்வாறு கூறுவது?

உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பானது “பர்ளு கிபாயா” எனப்படுகின்ற உயிரிழந்த ஜனாசாவுக்காக கௌரவமாக செய்ய வேண்டிய இறுதிக்கடமையான நல்லடக்கத்தைக்கூட சரிவர நிறைவேற்ற முடியாத வகையில் வந்திருப்பது நீதி -நியாயத்தை மதிக்கின்ற எமக்கு கஷ்டத்தையும், வருத்தத்தையும் உண்டாக்கிய போதும் நீதிக்கு மதிப்பளித்து இறைவன் மீது பாரத்தை அளித்து “ஹஸ்புனல்லாஹி வனிஃமல் வக்கீல்” அல்லாஹ்வே எமக்கு போதுமானவன் ,அவனே பாதுகாவலன் எனும் தாரக மந்திரத்தை கொண்டு எம்மை சாந்தப்படுத்தியும் மிகவும் மனமுடைந்தவர்களாகவே உள்ளோம்,


இறைவனே அனைத்திற்கும் நீதியாளன் எனும் அடிப்படையில் நாம் நம்பிக்கை கொண்டாலும், ஒரு அரசியல் ரீதியாக மக்களுடன் இரண்டைக் கலந்த மக்கள் சேவகன் எனும் அடிப்படையில் இந்த நிலைமையினை எவ்வாறு எதிர்கொள்வது என கவலை கொள்கிறேன்,


இந்த நிலையினை எமக்கு ஏற்படுத்தியிருப்பவர்களுக்கு அதிகாரபலத்தை கொடுத்த எமது பிரதிநிதிகளுக்கு நாம் என்ன கைமாறு செய்ய போகின்றோம், இதை முன்னெடுத்தவர்களுக்கு ஒரு போதும் துணை போக முடியாது என்பதுடன் , எங்களது வாக்குகளால் தெரிவானவர்களே எமக்கான துரோகத்தை செய்தார்கள் என்ற மனோநிலையில் இக்கடிதத்தை வரைகின்றேன்.


நான் கடந்த 05வருடங்களாக இந்த கட்சியில் இணைந்த நாள் முதல் நான் பகிரங்கமாக என்றும் கூறி வந்த விடயம் இறுதி மூச்சு இருக்கும் வரை இக்கட்சியில் இருப்பேன் என்பதாகும், இப்போதைய நிலையில் எமது விசுவாசமே , சுவாசமாக இருக்கத்தக்க, எமது தூய நம்பிக்கையையின் அடிப்படை உரிமைக்கே உலைவைத்து எமது மத அனுஷ்டானத்தையே சவாலுக்கு உள்ளாக்கிய காரண கர்த்தாக்கள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள்தான் என்றிருக்க எவ்வாறு எனது கடைசி மூச்சை நான் முஸ்லிம் காங்கிரசில் இருந்து கொண்டு சுவாசிக்க முடியும், எமது ஈமானின் உறுதிப்பாட்டுடன் நான் கதி கலங்கி உள்ள நிலையில் , நீதியை வேண்டிய எமது இறுதி நம்பிக்கையும் இன்று தகர்ந்துள்ள நிலையில் ,


எமது நம்பிக்கைகளை எல்லாம் சிதறடித்து குந்தகம் விளைவிப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் எமது கட்சியை சார்ந்தவர்களே ஆதரவுக் கரம் நீட்டி இருக்கின்றனர்.


இதனை எந்த வகையிலும் எனது மனச்சாட்சிப்படி ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது, ஒரு முஸ்லிமினது ஜனாசாவை கூட காப்பாற்றி இறுதிக் கடமைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளதன் மூலமாக உணர்வுபூர்வமாக எம் எதிர்காலத்தை வழிநடாத்த கூடிய இளைஞர்கள் உளவியல் ரீதியான பாதிப்புக்களுக்கு ஆளாகி உள்ளார்கள் , இவர்களை வழிநடாத்தி தேவையான உள ஆற்றுப்படுத்தல்களை வழங்க வேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளோம்.


ஆகையால் தொடர்ந்தும் இவ்வாறான வகையில் எமது கட்சிசார் பிரதிநிதிகளது கவனயீனமான செயற்பாடுகள் காரணமாக நாங்களும் குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டுள்ளோம். எமது கட்சி உறுப்பினர்களது நாடாளுமன்ற செயற்பாடுகள் மக்கள் மீதும், சமூகம் மீதும் கரிசனை இல்லாத சூழலில் இக்கட்சியோடு தொடர்ந்து பயணிக்க முடியாமைக்கு என்னை மன்னியுங்கள்..


இந்த மனோநிலையுடன் என்னால் தொடர்ந்தும் இக்கட்சியோடு பயணிக்க முடியாது என்ற மனோநிலையினை இங்கு வெளிப்படுத்துகிறேன்.


எந்த வித சலுகைகளையோ, சிறப்புரிமைகளையோ, பதவிகளையோ எங்கும் எதிர்பார்க்கவும் இல்லை. அவற்றை தேடி அலைபவனுமில்லை. உண்மையிலேயே, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி ஸ்திரத்தன்மையை நிலைபெற வைப்பதற்க்காக எனது பாராளுமன்ற பதவியையே நானே முன்வந்து இராஜினாமாச் செய்த ஒரு சிலரில் நானும்ஒருவன் என்று சொல்வதில் நான் பெரிமிதம் கொள்கிறேன்.


எமது முஸ்லிம் சமூகத்திற்காகவும், எமது நாட்டின் அத்தனை பிரஜைகளின் சுபீட்சத்துக்கும் நான் ஆரம்பம் முதல் தொழிற்பட்டு வந்தேனோ , அதே அடிப்படையில்தான் என்னால் தொடர்ந்தும் செயற்பட முடியும், இன்ஷா அல்லாஹ்.


முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி உங்களது கட்சி செயற்பாடுகள் அமைய வேண்டும் என பிரார்த்தித்து வாழ்த்தியவனாக , 05வருட காலத்தில் எனது பயணத்துக்கு உறுதுணையாக இருந்தமைக்காக எனது மனப்பூர்வமான நன்றிகளை தலைவராகிய உங்களுக்கும், கட்சி செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் என அனைவருக்கும் சமர்ப்பித்தவனாக மன வேதனையுடனும் , ஏமாற்றத்துடனும் கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்.


-செய்யித் அலி ஸாஹிர் மௌலானா


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.