ஜப்பானில் 'ட்விட்டர் கில்லர்' எனும் ட்விட்டர் மூலம் பிரபலங்களை கொன்று குவித்த கொலையாளிக்கு மரண தண்டனை!

ஜப்பானில் 'ட்விட்டர் கில்லர்' எனும் ட்விட்டர் மூலம் பிரபலங்களை கொன்று குவித்த கொலையாளிக்கு மரண தண்டனை!


ஜப்பானில் ட்விட்டர் மூலம் பிரபலங்களை தொடர்பு கொண்டு பிறகு 09 பேரை கொலை செய்த 30 வயது நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.


தகஹிரோ ஷிராய்ஷி என்பவர் தான் அந்த கொலைகளை செய்தவர். ஒட்டுமொத்த ஜப்பானை உறையச் செய்த இந்த சம்பவங்கள் கடந்த மூன்று முன்பு ஆண்டுகளுக்கு ஜப்பானில் நடந்தது.


இவருக்கு மரண தண்டனை வழங்கும் போது, வெறும் 16 இருக்கைகளைக் கொண்ட நீதிமன்றத்தில் 400 பேருக்கு மேல் பொதுமக்கள் இருந்தார்கள் என்கிறது ஒரு ஜப்பானிய உள்ளூர் ஊடகம்.


ஷிராய்ஷியை உள்ளூர் மக்கள் "ட்விட்டர் கில்லர்" என்கிறார்கள். இவர் ட்விட்டரை பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்போருக்கு உதவுவதாகக் கூறி, தன் வீட்டுக்கு அவர்களை அழைப்பார். பெண்கள் மரணிப்பதற்கு உதவுவதோடு, தானும் தற்கொலை செய்து கொள்வேன் என அவர்களிடம் கூறுவார்.


இந்த வகையில், 15 வயது முதல் 26 வயதான எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணை 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் கொலை செய்து இருக்கிறார் ஷிராய்ஷி என ஜப்பானின் க்யோடோ செய்தி முகமை கூறுகிறது.


ஜப்பான்: தற்கொலை செய்ய விரும்பியவர்களை கொலை செய்த 'ட்விட்டர் கொலையாளி'

தற்கொலை எண்ணத்துக்கான காரணம் என்ன? விடுபடுவது எப்படி?

கொலை செய்து விட்டு அவர்களின் தலை மற்றும் உடல் உறுப்புகளைத் தனித்தனியாக வெட்டி குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்திருந்திருக்கிறார் தகஹிரோ ஹிராய்ஷி.


2017ஆம் ஆண்டு ஹாலோவீன் திருவிழா (அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதி கொண்டாடும் நிகழ்ச்சி) காலத்தில்தான், டோக்கியோ நகருக்கு அருகில் சாமா எனுமிடத்தில், ஷிராய்ஷியின் வீட்டில் சில மனித உடல் உறுப்புகளைக் கண்டுபிடித்தது காவல்துறை. அதன் பிறகு தான் மற்ற தலைகள் மற்றும் உடல் உறுப்புகளை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள்.


ஜப்பானிய ஊடகங்கள், ஷிராய்ஷியின் வீட்டை, "திகில் வீடு" என்று அப்போது அழைத்தன.


நீதிமன்ற விசாரணையில் ஒன்பது பேரை கொலை செய்தததை ஷிராய்ஷி ஒப்புக் கொண்டார். இதனால் அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார் அரசு தரப்பு வழக்கறிஞர்.


ஷிராய்ஷி தரப்பில் வாதாடிய வழக்கறிஞரோ, இவர் கொலை செய்யப்பட்டவர்களின் சம்மதத்துடன் தான் கொலை செய்து இருக்கிறார், எனவே சம்மதத்துடன் கொலை செய்ததை கவனத்தில் கொண்டு தண்டனை வழங்க வேண்டும் என வாதாடினார்.


ஆனால் ஷிராய்ஷியே, கொலை செய்யப்பட்டவர்களின் சம்மதம் இல்லாமல் கொலை செய்ததாக வாதத்தின்போது தெரிவித்தார்.


இதையடுத்து இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்களை கொலை செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது புலனாய்வில் கிடைத்த ஆதாரம் மூலம் தெரய வருவதால், ஹிராய்ஷிக்கு மரண தண்டனை விதிப்பதாக தெரிவித்தார்.


"ஷிராய்ஷி இறந்தாலும் கூட, நான் அவரை மன்னிக்கமாட்டேன்" என அவரால் கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரின் தந்தை நீதிமன்றத்தில் கூறியதாக ஜப்பானிய ஊடகமான என்.ஹெச்.கே கூறியது.


"என் மகளின் வயதை ஒத்த பெண்களைப் பார்க்கும் போது, அவர்கள் என் மகள் என தவறாகப் புரிந்து கொள்கிறேன். இந்த வலி எப்போதும் என்னை விட்டுப் போகாது. அவளை எனக்கு திருப்பிக் கொடு" என ஒரு தந்தை கதறினார்.


ஷிராய்ஷியின் கொலை ஒட்டுமொத்த ஜப்பானையும் அதிரச் செய்தது. தற்கொலை பற்றி விவாதிக்கும் வலைதளங்கள் குறித்து புதிய விவாதங்கள் தூண்டுவதற்கு அந்த சம்பவம் காரணமாக அமைந்தது. அந்த நேரத்தில் ஜப்பானிய அரசு புதிய நெறிமுறைகளைக் கொண்டு வரும் என்று தெரிவித்தது.


இந்த கொலை சம்பவத்தால், தற்கொலை அல்லது தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வதை தமது பயனர்கள் ஊக்குவிக்கக் கூடாது என ஒரு புதிய விதியை ட்விட்டர் நிர்வாகம் கொண்டு வந்தது நினைவுகூரத்தக்கது.


மூலம் - பி.பி.சி


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post