கம்பளை - கொஸ்கம பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனம் காணப்பட்டு 12 நாட்களின் பின்னரே அங்குள்ள மூன்று விஹாரைகள் முடக்கப்பட்டு பிக்குமார் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களுக்கு தானம் வழங்க மக்கள் தயக்கம் காட்டுவதாக பிக்குமார் குறிப்பிடுகின்றனர்.
கம்பளை - கொஸ்கம பிரதேசத்தில் கடந்த 19 ஆம் திகதி கிரியைகள் இடம்பெற்று தானம் வழங்கப்பட்டுள்ளது மேற்படி நிகழ்வுக்கு அத்துகொட, ஹெரகொல்ல, அலாகம ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள விஹாரைகளின் பிக்குமார் கலந்து கொண்டுள்ளனர்
இந்நிலையில் குறித்த நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் இருவருக்கு கடந்த மாதம் 20ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் தொற்று உறுதி செய்யப்பட்டு 12 நாட்களின் பின்னரே கங்கஹியல கோரல பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார அதிகாரிகள் அங்கு கடந்த 02ஆம் திகதி சென்று அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.
$ads={2}
மேற்குறிப்பிட்ட 12 நாள் இடைவெளிக்குள் தாங்கள் தான நிகழ்வுகள், மரண வீடுகள், ஆத்ம சாந்தி கிரியைகள் என பல நிகழ்வுகளில் கலந்து கொண்டதோடு கம்பளை நகரில் அமைந்துள்ள கடைகள் பலவற்றுக்கும் சென்றுள்ளதாகவும் பிக்குமார் குறிப்பிடுகின்றனர்.
இதன்போது அலாகம ஜயமான்ய ஆராமயவின் தலைமை பிக்கு கருத்து தெரிவிக்கையில்,
கொஸ்கமவில் கொரோனா தொற்றாளர் இனம்காணப்பட்டு 12 நாட்களின் பின்னர் தங்களை தனிமைப்படுத்தியமைக்கு காரணம் கேட்டு இதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருடனும் தொடர்பு கொண்டு கேட்டதாகவும் இதன்போது அவர்கள் இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறியதாக கூறினார்.
மேலும் மேற்குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பீதிக்குள்ளாகி காணப்படுவதால் விஹாரைகளுக்கு தானம் வழங்கவும் தயக்கம் காட்டி வருவதோடு தானங்களை வெளியில் வைத்து விட்டு செல்வதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக கங்கஹியலகோரல பிதேசத்துக்கு பொறுப்பான பொதுச் சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த 19ஆம் திகதிக்கு பின்னர் இனம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கும்படி தொற்று நோய் தடுப்புப்பிரிவு தலைமையகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுக்கமையவே தாங்கள் செயற்பட்டதாக அவர் தெரிவித்தார்.