அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வாக்கு பதிவுகள் நிறைவு பெற்றன! முடிவுகள் வெளியாவதில் சிக்கல்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வாக்கு பதிவுகள் நிறைவு பெற்றன! முடிவுகள் வெளியாவதில் சிக்கல்!


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்காளர்கள் முன்கூட்டி வாக்குகளை பாதிவு செய்த நிலையில் நேற்று (03) தேர்தல் தின வாக்களிப்பில் நாடெங்குமுள்ள வாக்காளர்கள் பங்கேற்றனர்.


பதவியில் இருக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் தனது இரண்டாவது தவணைக்காக போட்டியிடுவதோடு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.


ஏற்கனவே 99 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்குச் சாவடிகள் அல்லது தபால் மூலம் தமது வாக்கை முன்கூட்டியே அளித்துள்ளனர். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மூன்றில் ஒரு வாக்குகள் முன்கூட்டியே பதிவான நிலையில் மொத்த வாக்குப் பதிவு எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


அண்மைய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் சராசரி வாக்குப் பதிவு 60 வீதமாகவே இருந்துள்ளது. 2016இல் அது 58.1 வீதமாகவே பதிவானது.


இம்முறை கலிபோர்னியா (12 மில்லியன்), டெக்ஸாஸ் (9.7 மில்லியன்) மற்றும் புளோரிடா மாநிலங்களில் அதிகபட்சமான தேர்தல் தினத்திற்கு முந்திய வாக்களிப்பு பதிவாகி இருந்தன. தபால்மூல வாக்குகள் ட்ரம்ப்பை விடவும் பைடனுக்கு சாதகமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்டிருந்தன.


தேர்தல் தினமான நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நியூ ஹாம்ஷயர் மாநிலத்தில் டிக்வில்லே நொட்ச் கிராமத்தைச் சேர்ந்த 12 குடியிருப்பாளர்களும் முதல் வாக்கை பதிவு செய்தனர்.


கனடா நாட்டு எல்லையை ஒட்டி காட்டின் நடுவில் இருக்கும் இந்த சிறிய நகரைச் சேர்ந்தவர்கள் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சம்பிரதாயமாக முதல் வாக்கை அளித்து வருகின்றனர். அண்டைய கிராமங்களைச் சேர்ந்தவர்களும் நள்ளிரவில் தேர்தல் தினத்தின் முதல் வாக்குகளை அளித்தனர்.


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பெரும் ஜனநாயக நடைமுறை ஒன்றாக உள்ளது. நாட்டில் 50 மாநிலங்களிலும் ஒன்பது நேர வலயங்களில் வாக்குப்பதிவு இடம்பெற்றது. பனி பொழியும் உறையும் குளிருக்கு மத்தியிலேயே ஆரம்ப வாக்குகள் பதிவாகின. அதற்கு முற்றிலும் முரணாக 20 பாகை வெப்பநிலை கொண்ட ஹவாயில் பிற்பகுதியில் வாக்குப் பதிவு ஆரம்பமானது. கிழக்கு கடற்கரைப் பகுதியின் சில பிரதான நகரங்களில் காலை 6 மணிக்கு வாக்குச் சாவடிகள் திறப்பட்டன.


$ads={2}


சில பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தமது வாக்கை பதிவு செய்வதை காண முடிந்தது. நாட்டின் கிழக்கில் அடுத்த தினம் காலையாக இருக்கும்போது நாட்டின் தூர மேற்கின் அலஸ்காவில் இறுதி வாக்குப்பதிவு இடம்பெற்றது.


எனினும் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் மற்றும் பைடன் இருவரும் தமது வாக்கை மூன்கூட்டியே அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


வாக்கு எண்ணிக்கை முடிய பல நாட்கள் ஆகும். ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள் காலை யார் வெற்றியாளர் என்பதை கணித்து விட முடியும்.


2016ஆம் ஆண்டு அதிகாலை 3 மணிக்கு நியூயோர்க்கில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்பு தனது வெற்றி உரையை ஆற்றினார் ஜனாதிபதி ட்ரம்ப்.


ஆனால் இந்த ஆண்டு தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள சற்று தாமதம் ஏற்படக் கூடும்.


இரு வேட்பாளர்களும் தீவிரமான அதேபோன்று பிளவு கொண்ட தேர்தல் பிரசாரத்தை நடத்திய நிலையிலேயே வெள்ளை மாளிகைக்கு செல்லும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


கொரோனா வைரஸினால் அமெரிக்காவின் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு 231,000க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் நிலையில் அதன் தாக்கம் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக பிரதிபலித்தது. தவிர, கறுப்பினத்தினருக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டங்கள் வலுத்திருக்கும் சூழலிலேயே இந்தத் தேர்தல் நடைபெற்றுள்ளது.


$ads={2}


கொரோனா தொற்றை கையாள்வது குறித்து ட்ரம்ப் நிர்வாகத்தை பைடன் தமது தேர்தல் பிரசாரங்களில் கடுமையாகக் குற்றம்சாட்டி இருந்தார். நாட்டின் சுகாதார பிரச்சினையை சரி செய்வதாகவும் நாட்டின் அரசியல் பிளவுகளுக்கு முடிவு கட்டுவதாகவும் பைடன் வாக்குறுதி அளித்துள்ளார்.


கருத்துக் கணிப்புகளிலும் அவர் டிரம்பை விடவும் ஸ்திரமாக முன்னிலையில் இருந்தார்.


எனினும் முடிவை தீர்மானிக்கும் மாநிலங்களில் ட்ரம்ப்புக்கும் பைடனுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இது ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறத் தேவைப்படும் 270 எலெக்டோரல் கொலேஜ் வாக்குகளை வெல்வதில் தீர்க்கமாக உள்ளது.


2016 ஜனாதிபதி தேர்தலில் ஹிலரி கிளின்டனிடம் ட்ரம்ப் சுமார் 3 மில்லியன் வாக்கு வித்தியாசத்தில் தேசிய வாக்கு எண்ணிக்கையில் தோற்றபோதும் ஜனாதிபதியாக வெற்றிபெற இந்த எலெக்டோரல் கொலேஜ் வாக்குகளே அவருக்கு உதவியமை குறிப்பிடத்தக்கது.


இந்த சூழலில் தேர்தல் முடிவு சட்ட ரீதியான சவாலை எதிர்கொள்ளும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.


தபால் மூல வாக்குப் பதிவில் மோசடி இடம்பெறலாம் என்று ஆதாரம் இன்றி குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வரும் ட்ரம்ப் வெளியாகும் தேர்தல் முடிவு பற்றி சந்தேகங்களையும் தொடர்ந்து எழுப்பி வருகிறார். இதனால் தாம் தோற்றால் அமைதியான முறையில் ஆட்சிமாற்றம் ஒன்றை வழங்குவதையும் அவர் மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் தின இரவிலேயே அனைத்து வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என்று ட்ரம்ப் கூறிவரும் நிலையில் பல மாநிலங்களும் அந்த செயற்பாட்டை முடிக்க பல நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எழுபத்தேழு வயதாகும் ஜோ பைடன் வெற்றி பெற்றால் ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும், எழுபத்தி நான்கு வயதாகும் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும் சரித்திரம் படைக்கலாம்.


வெள்ளை மாளிகை மற்றும் நியூயோர்க் நகர் உட்பட நாட்டின் பல நகரங்களில் முடிவை ஒட்டி ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


$ads={2}


வன்முறைகளை தவிர்ப்பதற்கு பல மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக லொஸ் வேகஸ், நியூயோர்க், டெட்ராய்ட், சிகாகோ, ஹூஸ்டன், லொஸ் ஏஞ்சலிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலிஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.


இடது, வலதுசாரி குழுக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்த வரலாற்றைக் கொண்ட பென்சில்வேனியாவிலும் மிச்சிகன், புளோரிடா, ஜோர்ஜியா, ஓரிகன் ஆகிய மாநிலங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அண்மைய மாதங்களில் மோதல் சம்பவங்களின்போது போராட்டக்காரர்கள் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


ட்ரம்ப், பைடன் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தால், ஆயுதமேந்திய கும்பல்கள் திடீர் எனத் தோன்றி தாக்குதலில் இறங்கினால், இணையத் தாக்குதல் இடம்பெற்றால் அல்லது வெடிகுண்டு வீசப்பட்டால் அவற்றை எதிர்கொள்ள தயாராகும் விதமாக பயிற்சிகளும் இடம்பெற்றன. வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்து, இறுதி வெற்றியாளரை அறிவிப்பதில் ஒருவேளை குழப்பம் ஏற்பட்டால், அதன்பின்னர் இடம்பெற வாய்ப்புள்ள சம்பவங்கள் குறித்து பல பொலிஸ் அதிகாரிகளும் தீவிவாதத் தடுப்பு நிபுணர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.


நியூஜெர்சி, விஸ்கொன்சின், டெக்சஸ் போன்ற பல மாநிலங்களில் தேசிய பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


வன்முறையாளர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பல பகுதிகளிலும் பல கடைகள் மற்றும் நிறுவனங்கள் தடுப்புகளை அமைத்து உடைமைகளை மறைத்து வருகின்றன. 


நன்றி: தினகரன்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post