மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!


மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்கு விதிகள் இன்று (03) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. 


இதில் ஒரு ஒழுங்குவிதியானது நாட்டில் மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியராவதற்கு ஆகக்குறைந்தது க.பொ.த உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் 2(c) விசேட சித்தி மற்றும் 1 (s) சாதாரண சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பதாகும். 


எனினும் இந்த யோசனை நடைமுறை சாத்தியமற்றது என பாராளுமன்றத்தில் தனித்து வாதிட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயகவினால் சபையில் கடும் நெருக்கடிக்கு ஆளும் தரப்பு தள்ளப்பட்டது.


இன்றைய  விவாதத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இந்த இரண்டு ஒழுங்கு விதிகளும் இதற்கு முன்னரே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதன் ஊடாக வைத்தியத்துறையின் தரம் உறுதிப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். 


$ads={2}


எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷமன் கிரியல்ல எழுப்பிய பிரச்சினையொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் உரிய விதிமுறைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார். இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.


ரஷ்ய பல்கலைக்கழகங்கள் மூன்றினால் வழங்கப்படும் பட்டங்கள் மருத்துவ சபையினால் தடைசெய்வது தொடர்பில் கிரியல்ல  அவர்கள் எழுப்பிய பிரச்சினைக்குப் பதிலளித்த அமைச்சர், இது தொடர்பில் விரைவில் ஆராய்ந்து அறிவிப்பதாகவும், தற்காலிகமாக அத்தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். 


இந்நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தலை சட்டமாக்க இன்று சபையில் அனுமதி கோரிய வேளையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக சபையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.


"ஒவ்வொரு வருடமும் உயிரியல் துறைக்குத் தெரிவாகும் மாணவர்களின் ஆகக் குறைந்த தகுதியில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற விடயம் உள்ளடக்கக் வேண்டும, ஒரு சட்டம் உருவாக்கப்படும் வேளையில் அது அடுத்த பரம்பரைக்கும் சார்ந்த ஒன்றாகும். எனவே இதனை வெறும் இரண்டு மணித்தியாலத்தில் தீர்மானிப்பது நியாயமானதல்ல.


எனவே இந்த இரண்டு ஒழுங்குவிதிகளையும் நிறைவேற்றாது அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இதுபற்றிக் கலந்துரையாடி திருத்தம் செய்ய வேண்டும்." எனவும்  அவர் பரிந்துரைத்தார்.


எனினும், இதற்கு ஆளும் கட்சியினர் இணக்கம் தெரிவிக்காததுடன், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டதற்கு அமைவாக இரண்டு ஒழுங்கு விதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 


இதன் பின்னர், அநுர குமார திஸாநாயக்கவின் எதிர்ப்பினையும் குறிப்பிட்டுக் கொண்டு குறித்த இரண்டு ஒழுங்கு விதிகளும் நிறைவேற்றப்பட்டன.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post