என்மீது புணையப்பட்ட திட்டமிட்ட சதி நாம் வாழும் சமூகத்தின் வீழ்ச்சியை வெளிக்காட்ட போதுமானதாகும்!! விடுதலை பெற்ற ரம்ஸி ரசீக்கின் முதற்பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

என்மீது புணையப்பட்ட திட்டமிட்ட சதி நாம் வாழும் சமூகத்தின் வீழ்ச்சியை வெளிக்காட்ட போதுமானதாகும்!! விடுதலை பெற்ற ரம்ஸி ரசீக்கின் முதற்பதிவு!


-ரம்ஸி ரஸீக்

எனக்காக இதயத்தால் சாட்சியமளித்த என் இனிய உறவுகளே,


படைத்தவன் விதிப்படி அவன் ஏற்பாட்டிலிருந்த சோதனையை எதிர்கொண்டேன். அவனது நாட்டப்படியே அவன் அருளால் அச் சோதனையில் இருந்து மீண்டு வந்தேன்.


என் இறைவன் மிகப் பெரும் அருளாளன். அவன் சோதனைகள் அனைத்தும் அவன் அருளேயன்றி வேறில்லை என்பதை எனக்கு நிதர்சனமாக உணரச் செய்த என் இறைவனை தூய்மைப் படுத்துகிறேன்.


ஏப்ரல் 09 ஆம் திகதி எனக்கும் இச் சமூகத்திற்கும் இடையிலான பெளதீக தொடர்பு அறுந்துவிட்ட நிலையில், ஸ்தூலம் தூரமான போதும் நான் உங்கள் ஒவ்வோருடைய உள்ளத்திலும் உணர்விலும் கலந்து வாழ்ந்திருக்கிறேன் என்பதை என்னும் போது என்னையறியாமலே கண்கள் ஈரமாகின்றன. நன்றியுணர்வால் உள்ளம் பணிகின்றது. நானும் எனது குடும்பமும் உண்மையிலேயே பாக்கியம் பெற்றவர்கள். உள்ளத்தாலும் உணர்வுகளாலும் இணைந்த அப்பலுக்கற்ற நேசத்திற்கு சாட்சியாக அமைந்த இனிய உறவுகளை எனக்களித்த இறைவன் முன்னால் உள்ளம் மண்டியிடுகிறது.


நான் எதற்காக சிறைப்படுத்தப்பட்டேன் ?


என்மீது புணையப்பட்ட திட்டமிட்ட சதி நாம் வாழும் சமூகத்தின் வீழ்ச்சியை, அதன் அரசியல், சமூக யதார்த்தத்தை வெளிக்காட்ட போதுமானதாகும். கருத்து வெளிப்பாட்டுரிமை மீது நான் கொண்டிருந்த அதீத நம்பிக்கை காரணமாக இன வெறுப்பு சூழல் கொண்ட இலங்கை சமூகத்திலே சுதந்திரமான புலமைத்துவ உரையாடல்களின் அவசியத்தை முன் மொழிந்ததை தவிர நான் வேறெந்த குற்றமும் புரியவில்லை.


இலங்கை சமூக தளத்திலே நாம் வலிந்து ஏற்றுக் கொண்டுள்ள சமூக நியமங்கள் (norms), வரைந்துள்ள எல்லைக் கோடுகள், கருத்துருவாக்கங்கள் என்பவற்றிற்கு அதனைத் தாண்டிய பல்வேறு பரிமாணங்களும் விகற்பங்களும் விதிவிலக்குகளும் உள்ளன. எனவே அவை மீள்வாசிப்பு செய்யப்பட வேண்டும். கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். ஆரோக்கியமான உரையாடல்களின்றி நாகரீக சமூகமொன்று அமையாது என்பதில் நான் மிக உறுதியாக உள்ளேன்.


நான் சிறைப்படுத்தப்பட்டாலும் மற்றொரு வகையில் நான் விடுதலை அடைந்த நாளும் அது தான். என்னுடைய கடந்த காலத்தை மீழ்வாசிப்பு செய்ய என் ஆன்மாவை செப்பனிட சிறந்த வாய்ப்பாக அந்நாட்கள் அமைந்தன என்றால் அது உண்மையே.


சிறை மதிலுக்கு உள்ளே நான் சந்தித்த வித்தியாசமான நபர்கள், ஆயுட்கால - மரணதண்டனை பெற்ற கைதிகள் அனுபவிக்கும் இன்னல்கள், அவர்கள் வாழ்வின் சோகக் கதைகள், அவர்களின் நிர்க்கதி நிலை என்பன எனக்கு பல்வேறு வாழ்க்கைப் பாடங்களை கற்றுத் தந்தன.


ஒவ்வோர் மனிதனுக்குள்ளேயும் காணப்படும் ஈகோ உணர்வு சோதனைக்கு உள்ளாகும் சந்தர்பங்கள் ஏதோவொரு வகையில் எப்போதாவது வாழ்க்கையிலே எதிர்ப்படுவதுண்டு. சிறைக் கூடத்தினுள்ளே எனது ஈகோவிற்குள் சிறைப்பட்டிருந்த எனது ஆன்மா விடுதலையடைந்தது என்றே கூறுவேன். விலங்கிடப்பட்ட நிலையில் பெளதீக ரீதியாக வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத மிகுந்த துன்பங்களை எதிர்கொண்ட போதிலும் நான் எதிர்ப்பார்த்திராத ஆன்மீக இன்பத்தை உள்ளம் உணர்ந்த தருணங்கள் அனேகம்.


சிறுவயதிலிருந்தே என்னோடு ஒட்டிக் கொண்டிருக்கும் உடல் உபாதைகள் சிறைக்கூட இன்னல்களை பல மடங்காக அதிகரித்தன. ஆனாலும் நாளாக அத் துன்பங்களை எதிர்கொள்ளும் மனவலிமையும் அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக் கொள்ளும் பக்குவமும் புதிய சூழலை ஜீரணித்து ஏற்றுக் கொள்ளும் மனோநிலையும் என்னில் உருவாகின.

சந்தேகமேயில்லை, இவை அனைத்தும் உண்மையாக என்மீது நேசம் கொண்ட என் நட்புக்களின் பிராத்தணைகளின் வலிமையால் ஆனவை என்பதை சத்தியமாக நான் நம்புகிறேன்.


நான் சிறைப்பட்டதிலிருந்து எனக்காக வருந்திய, பிரார்த்தித்த என் இனிய நெஞ்சங்களுக்கு எனது விடுதலையை காணிக்கையாக்குகிறேன். எனக்காக இலவசமாக வாதிட்டு பிணை பெற உதவிய திரு. சுமந்திரன் ஐயாவுக்கு நான் மிகுந்த கடமைப் பட்டுள்ளேன். சமூக ஊடகப் பரப்பிலும் பிரதான ஊடகங்களிலும் இனமத பேதமின்றி எனக்காக குரல் எழுப்பிய நான் அறிந்த, அறியாத பலர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மறியாதையுடன் கூடிய நன்றிகளை உரித்தாக்குகிறேன். 


அத்தோடு பல அரச சார்ப்பற்ற நிறுவனங்கள், உள்நாட்டு - சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அனைத்து பிரதிநிதிகளுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.


நன்றி கூறுவதென்பது மிக இலகுவானது. வார்த்தைகளால் வெளிப்படுத்தும் நன்றியுணர்விற்கு அப்பால் நீங்கள் அனைவரும் சத்தியமாக எனது உள்ளத்தின் ஆழத்தில் மிகுந்த கண்ணியத்துடன் என்றென்றும் வாழ்வீர்கள்.


பேசுவதற்கும் பகிர்ந்து கொள்ளவும் நிறையவே உள்ளன. ஆனாலும் எனது வழக்கு இன்னமும் நீநிமன்றில் இருப்பதால் எனது வார்த்தைகளில் சுய தனிக்கை செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன் நட்புகளே.

$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.