நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு பரீட்சைகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சிடம் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர் ஆசிரியர் சங்கத்தின் அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் கூறுகையில், “நாட்டில் தற்போது எழுந்துள்ள அபாயகரமான சூழ்நிலையால், அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை பாராட்டுகின்ற அதேநேரம், இப்போது ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலை சமூகத் தொற்றாக மாறியிருக்கின்றது. கம்பஹா மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சானது மாணவர்களின் பரீட்சையை ஒத்திவைத்து நாட்டில் சாதாரண சூழல் ஏற்பட்டதன் பின்னர், அந்தப் பரீட்சைகளை நடத்த வேண்டும்.
நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பல அதிருப்திகள் காணப்படுகின்றன. கல்வி, பரீட்சைகள் என்பவற்றைவிட உயிராபத்துக்களை தவிர்ப்பது மிக முக்கியமானது. அதனை நாங்கள் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து உட்பட பரீட்சை மண்டபத்திற்குச் செல்லுதல் ஓரிரு நாட்கள் என்றால் பரவாயில்லை. பல நாட்கள் பரீட்சை மண்டபத்திற்குச் சென்றுவரப் போகின்றார்கள். அந்த மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் செல்லப் போகின்றார்கள்.
அவர்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் நடைபெறப் போகின்றன. பரீட்சைகளைக் கண்காணிக்கின்ற பணிகளில் அதிபர், ஆசிரியர்கள், கல்விப் புலம் சார்ந்தவர்கள் ஈடுபடப் போகின்றார்கள்.
$ads={2}
எனவே, இவ்வாறான பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, இரண்டு பரீட்சைகளையும் நிலமை சீராகும் வரைக்கும் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான சூழ்நிலையை வைத்துக்கொண்டு பரீட்சைகளை நடத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. பொது மக்களும், பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும், தத்தமது கடமைகளை நிறைவேற்றிக்கொண்டு வீடுகளில் அமைதியாக இருப்பது தான் தற்போதைய நிலமைக்குச் சிறந்தது.
பொதுவாக, முகக்கவசம் இன்றி நாங்கள் வெளியில் செல்வது பாதுகாப்பற்றது. ஆடைத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய தொழிலாளர்கள் எங்கு சென்றார்களோ என்பதை கண்டுபிடிக்க முடியாததால், நாங்கள் முகக்கவசங்களை அணிந்து எமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.