முஹம்மது நபியின் கேலிச்சித்திரத்தை அரச கட்டிடத்தில் காட்சிப்படுத்திய பிரான்ஸ்; முஸ்லிம் உலகில் வலுக்கிறது எதிர்ப்பு!!

முஹம்மது நபியின் கேலிச்சித்திரத்தை அரச கட்டிடத்தில் காட்சிப்படுத்திய பிரான்ஸ்; முஸ்லிம் உலகில் வலுக்கிறது எதிர்ப்பு!!


முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் விதமாக “ஷார்லி ஹெப்டோ” பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரத்தை நேற்றைக்கு முன்தினம் 22ம் திகதி பிரான்ஸ் அரச கட்டிடத்தில் காட்சிப்படுத்தி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் சீண்டிப்பார்த்துள்ளது.


இத்தகைய செயற்பாட்டை எந்தவொரு இஸ்லாமியராலும் துளியும் ஏற்றுக் கொள்ள முடியாத வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பிரான்ஸின் இந்த இழி செயலை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கண்டிப்பதுடன், இலங்கை முஸ்லிம்கள் சார்பாக நாமும் வன்மையாக கண்டிக்கிறோம்.


மத்திய கிழக்கு நாடுகள் முதல் உலகில் முஸ்லிம்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் பிரான்ஸின் இச்செயல் பல்வேறு வடிவங்களில் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் சில அரபுலக நாடுகள் பிரான்ஸின் உற்பத்திகளை புறக்கணிப்பதினூடாகவும் தமது கடுமையான எதிர்ப்பினையும் பதிவு செய்துள்ளனர்.


இதன் பின்னணியாக


பிரான்ஸ் தலை நகர் பாரிஸிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள ” செயின்ட் ஹொனோரின்” எனும் இடத்தில் வைத்து புவியியல் மற்றும் வரலாற்றுப் பாட ஆசிரியரான சாமுவேல் பேட்டி என்பவர் கடந்த 17ம் திகதி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு அமையப் பெற்றுள்ளது.


குறித்த ஆசிரியர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் “ஷார்லி எப்டோ” வெளியிட்ட நபி (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திர புகைப்படங்களை மாணவர்களிடம் காண்பித்தது வகுப்பொன்றை நடத்தியதாகவும், ஆசிரியரை கொலை செய்யதவர் ரஷ்யாவின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் “செசன்யா” பகுதியை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் என்றும் பிரான்ஸ் தீவிரவாத தடுப்பு காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


குறித்த ஆசிரியர் “சாமுவேல் பேட்டி” இந்த கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டியது தொடர்பாக பல இஸ்லாமிய பெற்றோர் சாமுவேல் பேட்டி மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் பள்ளி நிர்வாகம் அதற்கு முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகிறது. பள்ளி நிர்வாகம் பெற்றோர்களின் முறைப்பாட்டை முறையாக கையாண்டிருந்தால் கூட ஆசிரியர் கொலை செய்யப்பட்ட துயர நிகழ்வு தடுக்கப்பட்டிருக்கலாம்.


சாமுவேல் பேட்டி என்ற ஆசிரியரின் கொலைக்கு காரணமாக அமைந்த “ஷார்லி ஹெப்டோவின்” கேலிச்சித்திரங்களை பிரான்ஸ் அரச கட்டிடத்தில் மீண்டும் காட்சிப்படுத்துவது மென்மேலும் இன முறிவுக்கும், அசம்பாவிதங்களுக்கும் வித்திடுமே தவிர ஒரு போதும் இன ஒற்றுமைக்கான வடிகாலாக அமையாது என்பதை பிரான்ஸ் புரிந்து கொள்ள வேண்டும்.


$ads={2}


எது எப்படியோ முஸ்லிம் மாணவர்களின் மனது புன்படும் வகையில் வகுப்பு நடத்திய ஆசிரியரின் செயல் கண்டனத்துக்குரியது என்பதுடன் அதற்காக அவரை கொலை செய்ததை அங்கீகரிக்க முடியாது. அது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும். பிரான்ஸிலுள்ள இஸ்லாமிய அறிஞர்களும் “அப்பாவி மக்களைக் கொல்வது நாகரிகம் அல்ல; அது காட்டுமிராண்டித்தனம்” என்று குறித்த செயலை கண்டித்துள்ளனர்.


இஸ்லாத்தின் அடிப்படையை விளங்காத ஒரு முஸ்லிமின் செயலை ஏனைய முஸ்லிம்கள் அங்கீகரிக்காமல் அதை கண்டித்துள்ள நிலையில் ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் மனதையும் புன்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசு நடந்து கொண்டதை ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஜனநாயக விரோத செயலாகும்.


குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களுக்கு சட்டரீதியான தண்டனையை வழங்கி நீதியை நிலை நாட்டி ஜனநாயகத்தை உறுதி செய்யாமல் “பிரான்ஸ் கார்ட்டூன்களை விட்டுவிட மாட்டார்கள்” என்ற அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோனின் கருத்து வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுடன் மேற்குலகின் இஸ்லாம் விரோத செயற்பாட்டிற்கு பிரான்ஸ் துனை போவதாகவே அமைந்துள்ளது.


தொடர்ந்து முஸ்லிம்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தும் வகையில் செயற்படும் “ஷார்லி ஹெப்டோ” குறித்து கண்டனம் பதிவு செய்யாமலும் அதை தடை செய்யாமலும் ஆசிரியரின் கொலைக்கு எதிராக வீதியில் இறங்கி கண்டனம் பதிவு செய்த பிரான்ஸ் அதிபர் இமானுவேலின் செயல் வேடிக்கையாகவும், பக்கச் சார்பாகவும் அமைந்துள்ளது. 


மதத்தின் பெயரால் அப்பாவிகளை கொலை செய்வதும், மன விரக்தியில் ஜனநாயகத்திற்கு விரோதமாக சட்டத்தை கையிலெடுத்து செயற்படுவதும் தடைசெய்யப்பட வேண்டியதுடன், ஜனநாயகம் என்ற பெயரில் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையை கொச்சை படுத்தும் விதமாக செயல்படுவதும், கேலிச்சித்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு முஸ்லிம்களின் உள்ளத்தை புன்படுத்தி உணர்வுகளை சீண்டிப்பார்ப்பதும் இரண்டும் ஒரே கோணத்தில் பார்க்கப்பட்டு இரண்டும் தடைசெய்யப்பட்ட வேண்டும்.


எனவே முஸ்லிம்களின் மனதை புன்படுத்திய பிரான்ஸின் இஸ்லாம் விரோத செயலை இலங்கை முஸ்லிம்கள் சார்பாக வன்மையாக கண்டிப்பதுடன் கேலிச்சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


இப்படிக்கு,

எஸ்.கே ஷிஹான் முஹம்மத்

செயலாளர், SLTJ


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post