அமைதியை எதிர்பார்க்கும் தமிழர்களின் அவாவை நிறைவேற்ற வேண்டும்! மோடி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைதியை எதிர்பார்க்கும் தமிழர்களின் அவாவை நிறைவேற்ற வேண்டும்! மோடி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை!


இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறது. அதன்படி தமிழர்களுக்கும் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியது என இந்திய வெளிவிவகாரப் பேச்சாளர் தெரிவித்தார்.


இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று (26) நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.


இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுவே முதல் தடவையாகும்.


காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்ஷவுக்கு மோடி வாழ்த்துக்களை கூறினார். மேலும், தனது அழைப்பை ஏற்று, இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் மோடி, இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 


சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் அவாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமைதி மற்றும் சமாதானத்துக்கான பேச்சை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்தார்.


“அரசியலமைப்புக்கான 13ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறது. அதன்படி தமிழர்களுக்கும் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியது. பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகள், வாணிபம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு குறித்தும் இருதரப்பினரும் பேசினர்” எனவும் அவர் தெரிவித்தார்.


இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக இந்தியப் பெருங்கடல் பிரிவு இணைச் செயலர் அமித் நரங் கூறும்போது, “இந்த உச்சி மாநாட்டின் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முன்னோக்கிச் செல்வது மற்றும் உறவுகளை மேலும் ஆழப்படுத்த மிகப்பெரிய திட்டத்தை வழிவகுக்க உதவும்” என்றார்.


இருதலைவர்களும் மீனவர்கள் பிரச்சினை குறித்தும் விவாதித்தனர், இதில் இதுவரை இருந்து வரும் “ஆக்கப்பூர்வமான, மனிதநேயவாத அணுகுமுறையே கைகொடுக்கும்” என்று இருவரும் ஒப்புக் கொண்டதாக நரங் தெரிவித்தார்.


இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கையுடனான பௌத்த உறவுகளை வளர்க்க பிரதமர் மோடி 15 மில்லியன் டாலர்கள் உதவி அறிவித்தார்.


பேச்சின் தொடக்கத்தில் இந்தியப் பிரதமர் மோடி, “உங்கள் கட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து இந்தியா - இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்க நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. இருநாட்டு மக்களும் நம்மை புதிய நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகளுடன எதிர்நோக்குகின்றனர்” என்று மோடி கூறியதாக நரங் தெரிவித்தார்.


இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இரு தலைவர்களும் சமாதானப் போக்கு குறித்து ஆலோசித்தனர் என்று கூறிய நரங், “இந்தியப் பிரதமர் மோடி, தமிழர்களுக்கு சமத்துவம்,நீதி அமைதி, மற்றும் கௌரவம் கிடைக்க ஒருங்கிணைந்த இலங்கையில் சமாதானம் ஏற்பட அரசு பணியாற்ற வேண்டும்” என்று கூறியதாகத் தெரிவித்தார்.









Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.