இந்நாட்டில் இருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாமலாக்கியே தீருவோம்! -அலி சப்ரி


நாட்டில் ஐந்து வீதமானவர்கள் போதைக்கு அடிமையாகி இருக்கின்றனர். அதனால் போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டில் இருந்து இல்லாமலாக்கியே தீருவோம். அதற்கு விசேட படையணி தேவையாக இருந்தால் அதனையும் நடைமுறைப்படுத்துவோம் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

களுத்துறை - வியன்கல்ல பிரதேசத்தில் 
நேற்று (02) விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

"2015இல் எமது அரசாங்கம் அதிகாரத்தில் இருந்து செல்லும் போது இலங்கையில் போதைப்பொருள் தொடர்பில் 6,600 வழக்குகள் இருந்தன. 2016இல் 800 வழக்குகள் இருந்தன. 2017ஆகும்போது 11,000 வரை அதிகரித்திருந்தன. 2018இல் 12,000 இருக்கின்றது. கடந்த வருடம் 16,000 அதிகரித்துள்ளது. இந்த வருடம் மாத்திரம் இதுவரை போதைப்பொருள் சம்பந்தமான வழக்குகள் 13,000 வரை பதிவாகி இருக்கின்றன.

அதனால் இந்த நிலைமையில் இருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அரசாங்கம் மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதுபோல், நீண்டகாலத்துக்கு நாடு முன்னேறிச்செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றது. அச்சம் சந்தேகம் இல்லாத பாதுகாப்பான சூழலுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற தேவையே ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அதற்காக எங்களுடன் கைகோர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் இந்த நாட்டில் இருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாமலாக்கியே தீருவோம். நாட்டு மக்கள் அனைவரையும் அதிலிருந்து பாதுகாப்போம். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ஆரம்பம் முதல் இறுதிவரையான தகவல்களை தேடுவோம். அதற்கு விசேட படையணி ஒன்று தேவையாக இருந்தால் அதனையும் நாங்கள் மேற்கொள்வோம்" என அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post