முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கட்டிடத்தில் பெளத்த சாசன மற்றும் கலாசார அமைச்சு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கட்டிடத்தில் பெளத்த சாசன மற்றும் கலாசார அமைச்சு?


கொழும்பில் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கட்டிடத்தில் பெளத்த சாசன மற்றும் கலாசார அமைச்சினை உள்வாங்குவதற்கு அரச  உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதவைும், அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில் அனைத்து மதவிவகாரங்களுக்குமான அலுவலகங்களும் இக்கட்டிடத்தில் உள்வாங்கப்படும்.

தற்போது கொழும்பு 10 இல் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அமைந்துள்ள கட்டிடம் நிர்மாணிக்கப்படுவதற்கு 2004 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு 2007 ஆம் ஆண்டு கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கட்டிட நிர்மாணப் பணிகள் ஸ்தம்பிதமாகின.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்ட எம்.எச்.ஏ.ஹலீம் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதையடுத்து 296 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு, 2017 இல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அக்கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இக்கட்டிடத்துக்கு மொத்தமாக சுமார் 600 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

வாகன தரிப்பிடமாக அடித்தளத்தையும் மேலும் 9 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தில் முதல் மூன்று மாடிகளில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தற்போது இயங்கி வருகிறது. ஏனைய 6 மாடிகளும் வெற்றிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 7, 8, 9 ஆம் மாடிகள் கேட்போர் கூடமாக திட்டமிடப்பட்டுள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த ராஜித சேனாரத்ன 3 மாடிகளை மருந்து களஞ்சியப்படுத்துவதற்காக வழங்குமாறு திறைசேரியிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். என்றாலும் அது வெற்றியளிக்கவில்லை.

வக்பு சபை மற்றும் வக்பு ட்ரிபியுனல் என்பவற்றிற்கு நிரந்தர அலுவலகம் இல்லாமல் இயங்கி வருவதால் இக்கட்டிடத்தில் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென சமூகத்தில் புத்திஜீவிகளும், அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை கொழும்பு அளுத்கடையில் இயங்கிவரும் காதிகள் சபையின் அலுவலகம் காதி நீதிமன்றங்களின் வழக்கு கோவைகளின் களஞ்சியமாகவும் உபயோகப்படுத்தப்படுவதால் காதிகள் சபையின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே காதிகள் சபை அலுவலகத்தையும் குறிப்பிட்ட கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நான் அமைச்சராக பதவிக்கு வந்த போது கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டு கவனிப்பாரற்று இருந்தன. அப்போதைய பிரதமரின் உத்தரவின்பேரிலே 296 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. தற்போதைய அரசு இக்கட்டிடத்தில் வக்பு சபை, வக்பு ட்ரிபியுனல், காதிகள் சபை அலுவலகம் என்பவற்றையும் உள்வாங்க வேண்டும் என முஸ்லிம் சமய விவகார முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

நன்றி : விடிவெள்ளி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.