கொரோனாவுக்குப் பிந்திய உலக பொருளாதார நிலை!! -எம்.ஆர் ஸீனியா ஜபீfன்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவுக்குப் பிந்திய உலக பொருளாதார நிலை!! -எம்.ஆர் ஸீனியா ஜபீfன்

2019 - டிசம்பர் கடைசிப் பகுதி அது. ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் பரவலான செய்தியொன்று எம் செவிப்பறைகளை வந்தடைந்தது. ஒரே நாளில் இப்பிரபஞ்சம் முழுவதையும் அஞ்சி நடுங்கவும், ஆச்சரியப்படவும் வைத்தது ஒரு வைரஸ். சீனாவின் ‘வுஹான்' பகுதியில் இந்த கொரோனா எனும் வைரஸ் கண்டறியப்பட்டதாகவும் வேகமாக பரவி வருவதாகவும் காற்றோடு வந்த சேதி பத்தோடு பதினொன்றாக இருந்து விட்டுப் போகின்றது என்று இருந்த வேளையிலேயே தொடராக அது தொடர்பில் நாளாந்தம் ஒலிபரப்பப்பட்ட செய்திகள் வைரசின் வீரியத்தையும், ஆபத்தையும் உலகுக்கே உணர்த்தியது. தொடர்ந்து வந்த நாட்களில் சீனாவில் கொத்துக் கொத்தாய் மானிடங்கள் செத்து மடிந்ததை தொடர்ந்து முழு உலகமும் விழித்துக் கொண்ட போதிலும், கொரோனா ஜெட் வேகத்தில் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தது. தற்போது உலகம் பூராகவும் மரண ஓலங்களும் , மனித உயிரிழப்புக்களும் வல்லரசுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன.

யுத்த விமானங்களையும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும், விண்வெளி ஆய்வு கூடங்களையும் மற்றும் அனைத்து யுத்த தளபாடங்களையும் தன்னகத்தே கொண்டு தான் தோன்றித்தனமாய் உலகிற்கே சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த வல்லரசு நாடுகள் எல்லாம் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. எந்தவொரு ஆய்விற்கும் உட்படாமலேயே வைரசானது வேக, வேகமாக உலகின் மூலைமுடுக்குகள், பெருநகரங்கள் அனைத்தையும் முடக்கி வைத்துள்ளதோடு, அனைத்து செயற்பாடுகளையும் ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.

உலகம் முழுவதும் மயான அமைதி , வான்பரப்புகள், நகர பெருந்தெருக்கள், வானுயர்ந்த தொழிற்பேட்டைகள், அரச எந்திரங்கள், விமான நிலையங்கள், வர்த்தக வாணிப துறைகள், உல்லாச பிரயாணத் துறை அனைத்துமே மயான பூமியாக வெறிச்சோடிக் கிடக்கின்றன.

சுற்றுச்சூழல் வளி மாசடைவிலிருந்து தூய்மையாக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, பறவையினங்கள் சுதந்திரமாய் சுற்றித்திரிய, வனவாசம் செய்த விலங்குகள் சுதந்திரமாக வீதிகளில் உலாவருவதையும் காணக்கூடியதாய் உள்ளது. மானிட வர்க்கம் பயத்தால் அதிர்ந்து உறைந்து போயுள்ளனர். அடுத்த கணம் என்ன நடக்குமோ என்ற அங்கலாய்ப்பும், பீதியும் மக்களை நடைப்பிணமாய் மாற்றி வைத்துள்ளது.

பொருளாதார நெருக்குவாரங்கள் ஒருபுறம், நாளைய விடியல் எவ்வாறு எப்படி அமையுமோ என்ற அங்கலாய்ப்பு வேறு. நம்பிக்கை என்ற ஒளிக்கீற்றையே தொலைத்து விட்டவர்களாக வெறும் சடங்களாக எந்தவொரு விடியலுமின்றி திறந்தவெளி சிறைக்கூடங்களில் அவரவர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெளி உலகத்தொடர்பை , உறவினர்களின் அரவணைப்பினை, ஏன் வீட்டில் குழந்தைகளுடன், மனைவியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக முடக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமை இன்று முடியுமா? நாளை முடியுமா? என நாட்களை எண்ணிகொண்டிருப்பது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடகவே தென்படுகின்றது.

தற்போதுள்ள நிலமைகளை கருத்திற்கொள்ளும் போது யுத்தமின்றி நடைபெறும் உலகமகா யுத்தமாகவே கருதப்பட வேண்டியுள்ளது. யுத்த தளபாடங்களும், ஏவுகணைகளும் ஓய்விலிருக்க உயிரியல் ஆயுதம் 3ஆம் உலக மகா யுத்தத்திற்கு தயார் செய்யப்பட்டதா? என வினவத் தோன்றுகிறது. எமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடயத்தினை அலசுவதை நிறுத்திவிட்டு, எதிர்கால சவாலுக்கு நாம் எம்மை எவ்வாறு தயார்படுத்துவது என்பது தொடர்பில் பொருளாதார நிபுணர்களும், ஏனைய துறைசார் விற்பன்னர்களும் தலையைக் குடைந்து கொண்டிருக்கின்றனர்.

இலங்கை மட்டுமல்ல முழு உலக நாடுகளுக்கும் மிகப்பெரும் சவாலாகவே தெரிகின்றது. பசியின் காரணமாக உலகம் முழுவதும் அடுத்த பெருந்தொற்று பரவல் போன்ற நிலை உருவாகலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் உணவுத்தேவை காரணமாக அல்லல்படும் மக்களின் எண்ணிக்கை இந்த வருடம் 02 மடங்காகலாம் என்கிறது அவ்வமைப்பு. உலக மக்கள் யாரும் பசியால் பாதிக்கப்படக்கூடாது என அவர்களுக்கு உணவு விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில் செயற்படும் இவ்வமைப்பானது 2019இல் 230 கோடி அமெரிக்க டொலர்களை நிதியாக பெற்றிருந்தது. ஆனால், இவ்வாண்டு இதை முறையாக செய்ய 10-12 பில்லியன் அமெரிக்க டொலர் வரை தேவை எனவும் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள கொரோனா பரவலால் உணவின்மை காரணமாக பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள 05 நாடுகளாக எமன், காங்கோ ஜனநாயகக் குடியரசு, வெனிசுவேலா, தென் சூடான், ஆப்கானிஸ்தான் என்பவற்றை பட்டியலிட்டுள்ளது.

அதள பாதாளத்துக்கு சென்றுள்ள உலக பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதென்பது இலேசான காரியமல்ல. இதற்கு முழு மனித வலுக்களும், விடாமுயற்சியும் கிடைக்கப்பெறும் போதே ஓரளவுக்கேனும் பொருளாதார வீழ்ச்சியை நிமிர்த்திட முடியும். இதற்காக ஒவ்வொரு தரப்பினரினதும் பங்களிப்பும், ஒத்துழைப்பும் பெரும்பலமாகவும் பாலமாகவும் அமைய முடியும். 1948இல் ஜப்பானிய ஹிரோஷிமா , நாகசாஹி நகர்கள் சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டு முழு ஜப்பானிய நாடும் பொருளாதாரத்தின் முழு வீழ்ச்சிக்கு ஆளான போது, பீஃனிக்ஸ் பறவை சாம்பல் மேட்டிலிருந்து எழுந்து வருவது போன்ற மக்களின் எழுச்சியும், திடமான நம்பிக்கையுமே மீளவும் ஜப்பானை வல்லரசு நாடுகளுக்கு ஈடாக தலை நிமிரச் செய்தது.

ஜப்பான் காட்டித்தந்த வழிமுறைகளையே இப்போது அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டியுள்ளது. இலங்கை தற்போது “எழுவோம் தாயகம்” எனும் தாரக மந்திரத்தை மக்கள் மத்தியில் எதிர்காலத்திற்கான நம்பிக்கையினை விதைத்துள்ளது. எனவே, எம்முன்னால் உள்ள சவால்களை வென்றெடுப்பதற்கு நாம் ஒன்றிணைவோம். மீண்டெழுவோம். எல்லா வகையிலும் வீழ்த்தப்பட்ட எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம். 03 தசாப்த கால பயங்கரவாதத்திலிருந்து மீண்டெழுந்த இது பெரும் சோதனையாக இராது. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. இப்பாரிய பணிக்கு மாணவ சமூகம், பல்கலைக்கழக சமூகம், துறைசார் நிபுணர்கள், முப்படையினர், அரச, தனியார் துறையினர் அனைவரது பங்களிப்பும் ஒத்துழைப்புமே இன்றைய தேவையாகும். இன, மத, மொழி பேதம் பாராமல் இப்பாரிய சவாலை சுமுகமாக வென்றெடுக்க இன்றே ஒன்றிணைவோம்.

“வழித்தடம்” - All University Muslim Student Association
M. R. Zeeniya Jafeen - University of Jaffna
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.