முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்த சட்டமூல வரைவை ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவில் இரண்டு சிறுபான்மையின பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அலி சப்ரி, உதய கம்மன்பில, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ஸ, இராஜாங்க அமைச்சர்களான சதாசிவம் வியாழேந்திரன், சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிரேமநாத் சி தொலவத்த ஆகியோர் இந்தக் குழுவின் பிரதிநிதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
20ஆவது அரசியலமைப்பு திருத்தசட்ட மூல வரைவு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குறித்த குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது.
அத்துடன், தமது ஆய்வுகள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்த குழுவின் தலைவர் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உத்தேச 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைவு அறிவிக்கப்பட்டதும் பல்வேறு கருத்துக்களை ஆராய்ந்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்காக இந்த குழு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில்செய்தி வெளியிட்ட அந்த குழுவின் தலைவர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், 19 ஆம் திருத்தத்தில் உள்ள பல பாதிப்பான விடயங்களை நீக்க வேண்டிய தேவை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே 09 பேர் அடங்கிய குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடி முன்மொழியப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூல வரைவு தொடர்பில் ஆராயவுள்ளது.
$ads={1}
"அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பான தேசிய பிரச்சினைகளில் எதிர்கட்சிக்கும் உரிமை உள்ளது. குழுப்பங்களை ஏற்படுத்தாது அதில் இருக்கும் சாதக பாதகங்களை எடுத்துரைக்க முடியும். 19ஆவது திருத்தம் இருக்கும் வரையில் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது."
ஆகவே இதற்கு எதிர்கட்சியினரும் ஆதரவளிப்பாளர்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.