
36 வயதான அங்கொட லொக்கா, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில் இவர் கோவையில் தனது பெயரை மாற்றி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இவரது மர்ம மரணம் குறித்து இன்னும் இந்திய CBCID பொலிஸார் விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.
கோவை, சேரன்மாநகர் பகுதியில் தங்கியிருந்த அங்கொட லொக்கா தன்னை யாரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு, உருவத்தை மாற்ற திட்டமிட்டார். கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று தான் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும் மூக்கை சற்று பெரிதாக்க வேண்டியுள்ளதாகவும் கூறி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.
மேலும், கோவையில் இருந்தபடி வாட்ஸாப் அழைப்புகள் மூலம் அவரது நண்பர்களை இயக்கி உள்ளார். குறித்த அந்த கையடக்கத் தொலைபேசி இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. குறித்த மொபைல் யாரிடம் உள்ளது மற்றும் இதனுடன் தொடர்புபட்ட நபர்கள் யார் என்பது குறித்தும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
அங்கொட லொக்காவுடன், 27 வயதான இலங்கையைச் சேர்ந்த அம்மானி தான்ஜி, என்ற பெண்ணும் தங்கியிருந்தார். போலி ஆவணங்கள் தயாரித்தமை தொடர்பாக அவரை பொலிஸார் கைது செய்தனர். அவர் இலங்கையை சேர்ந்த வெளிநாட்டவர் என்பதால், சென்னை புழல் சிறையில் நேற்று அவரை சிறைபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.