
மஹியங்கனை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று (17) நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாதென்றும் அதனால் வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் அறிவித்தார்.
கண்டி மாவட்டம் - கொலங்கொட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மஸாஹிமா (வயது 48) எனும் பெண், தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் என்றும், அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டார் எனவும், அதன் மூலம் அவர் இனமுறுகலை ஏற்படுத்தினார் என்றும் குற்றம்சாட்டி, கடந்த வருடம் மே மாதம் 17ஆம் திகதி ஹசலக போலீஸாரால் கைது செய்யப்பட்டு மறுநாள் மஹியங்கண நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் பதுளை சிறைச்சாலையில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
மேற்படி பெண் மீது தொடரப்பட்ட வழக்கில் கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணி தம்பதிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோர் ஆஜராகி வந்தனர். கட்டணம் எதனையும் பெறாமல் மேற்படி சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆஜராகிமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட பெண் அணிந்திருந்த ஆடையில் உள்ளது தர்மச்சக்கரம் தானா என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அதனை புத்த சமய அலுவல்கள் ஆணையாளருக்கும், தர நிர்ணய சபையினருக்கும் தாங்கள் அனுப்பியதாகவும், ஆனால் அதனை ஒப்பிட்டு நோக்குவதற்கு தம்மிடம் தர்மச் சக்கரத்தின் சரியான வடிவம் இல்லை என்று அவர்கள் கூறி விட்டனர் எனவும், கடந்த வருடம் ஜுன் மாதம் நீதிமன்றில் போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து தன்னை போலீஸார் கைது செய்து தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக மேற்படி மஸாஹிமா எனும் பெண் கடந்த வருடம் ஜுன் மாதம் நடுப்பகுதியளவில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்தார்.
இந் நிலையில், குறித்த பெண்ணை கைது செய்து விளக்கமறியலில் வைத்திருந்தமையின் மூலம் அவரின் அடிப்படை உரிமை மீளப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவருக்கு நீதிமன்றின் மூலம் நஷ்டைஈட்டைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் சட்டத்தரணி சறூக் கூறினார்.
"குறித்த பெண்ணுக்கு நஷ்டஈட்டை வழங்குமாறு நேற்றைய தினம் மஹியங்கண நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தோம். ஆனால், வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என்று மட்டுமே சட்ட மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை என்றும் மன்றில் நீதவான் கூறினார்.
எனவேதான், உச்ச நீதிமன்றின் மூலம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்கத் தீர்மானித்துள்ளோம்." எனவும் சட்டத்தரணி சறூக் தெரிவித்தார்.
தகவல்: பிபிசி
தகவல்: பிபிசி