
குறித்த மூவரும் இந்தியாவின் கோயம்புத்தூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் அங்கொட லொக்கா கோயம்புத்தூரில் உயிரிழந்திருந்த நிலையில் அவரின் உடலம் மதுரையில் தகனம் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர் மரணமடைந்துள்ளதை அறிந்து கொண்ட காவல்துறையினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது அங்கொட லொக்காவுக்கு கோயம்புத்தூரில் தங்கியிருப்பதற்காக தெரிவிக்கப்பட்டு போலியான ஆவணங்களை தயாரித்துக்கொடுத்த குற்றச்சாட்டில் மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலங்கை பெண்ணான கொழும்பைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவரும், மதுரையை சேர்ந்த 32 வயதுடைய ஆண் மற்றும் மதுரையைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரையுமே காவல்துறையினர் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அங்கொட லொக்கா இந்தியாவில் பிரதீப் சிங் என்ற பெயரில் தங்கியிருந்துள்ளார். அவருக்கு இந்திய குடியமகனுக்குரிய ஆதார் அட்டையும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை 3ஆம் திகதியன்று அங்கொட லொக்காவுக்கு நெஞ்சுவலி என்ற தெரிவித்து கோயம்புத்தூரின் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
பின்னர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள மதுரைச் சேர்ந்த பெண் காவல்துறையினரின் உதவியுடன் பிரேத பரிசோதனை மற்றும் சட்ட விடயங்களை முடித்து அங்கொடை லொக்காவின் உடலை மதுரைக்கு கொண்டு சென்று அங்கு தகனம் செய்ய உதவியுள்ளார்.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பிலான காரணத்தை அறிந்துகொள்ள அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்ப்பார்த்திருப்பதாக கோயம்புத்தூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அங்கொட லொக்கா அவருடன் இருந்த பெண்ணால் விசம் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.