தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு; தீமூட்டி எரிக்கப்பட்டதாக சாட்சியம்!

தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு; தீமூட்டி எரிக்கப்பட்டதாக சாட்சியம்!

தீயில் எரிந்த நிலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (04) மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 08ஆம் திகதி வவுனியா, மகாறம்பைக்குளம், ரம்பவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும், அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில் வாய்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது இளம் குடும்ப பெண் ஒருவர் எரிந்த நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

29 வயதுடைய அஜிதா என்ற பெண்ணே தீயில் எரிந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 25 நாட்களின் பின்னர் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் அதிகாலை மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மாமடு பொலிசாரால் சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பெண்ணின் மரணம் தொடர்பாக வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பிரகாரம் உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு அயலில் வசிக்கும் பெண் ஒருவர் இவரை தீமூட்டி எரித்ததாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் நபர் ஒருவரும் தன்னிடம் சாட்சியம் வழங்கியுள்ளதாக தெரிவித்த மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர், பெண்ணின் மரணத்திற்கு எரிகாயங்களே காரணமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை உயிரிழந்த பெண்ணின் இரு சகோதரர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post