ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை! ICC அறிவிப்பு!

ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை! ICC அறிவிப்பு!

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரம் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) அறிவித்துள்ளது.

இந்திய அணியுடனான 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அந்த குற்றச்சாட்டுக்கு அமைய விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கடந்த 30ஆம் திகதி முதல் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அணித் தலைவரான குமார் சங்கக்கார, ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க, முன்னாள் இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா உள்ளிட்டோரிடம் விசாரணைக் குழுவினால் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தன.

இதையடுத்து 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லையென இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக எந்தவொரு கிரிக்கெட் வீரர்களும் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கத் தேவையில்லை என இதுகுறித்து ஆராயும் விசேட விசாரணைப் பிரிவின் தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலிலேயே, 2011 உலகிண்ண கிரிக்கெட் தொடரின் இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான உத்தியோகபூர்வ ஆதாரம் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லையென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Previous Post Next Post