கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்களை மீள அவர்களுக்கே விற்பனை செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர்! CID தீவிர விசாரணை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்களை மீள அவர்களுக்கே விற்பனை செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர்! CID தீவிர விசாரணை!!

போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில்  ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்படும் விவகாரத்தில், மேலும் பல அதிர்ச்சித் தகவல்களை CID விசாரணைகளில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. 

அதன்படி, போதைப் பொருள் கடத்தல்காரர்கள், வழங்கியதாக கூறப்படும் 5 நவீன ரக துப்பாக்கிகளில் நான்கு, பாதாள உலகத்தர்வர்களுக்கு PNB எனப்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின், குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்துள்ள உத்தியோகத்தர்கள் கையளித்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக CID யின் தகவல்கள் தெரிவித்தன.

படோவிட்ட பகுதியில் வைத்து ரஜித்த அல்லது லொக்கு என அறியப்படும் பாதாள உலக உறுப்பினரிடம் இந்த ஆயுதங்கள் கையளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் வழங்கியுள்ள 5 நவீன கைத்துப்பாக்கிகளில், ஒன்று, கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்பட்ட பொலிஸ் குழுவின் பிரதானியாக செயற்பட்டதாக கூறப்படும்  தற்போது கைது செய்ய தேடப்பட்டு வரும் பொலிஸ் பரிசோதகர் உடன் வைத்திருந்த நிலையில், அது வெலிவேரிய பகுதியில் வைத்து மீட்கப்பட்டது.

இதனையடுத்து CID முன்னெடுத்த விசாரணைகளிலேயே ஏனைய 4 துப்பாக்கிகளும் இவ்வாறு பாதாள உலக குழுவினரின் கைகளுக்கு சென்றுள்ளமை கண்டரியப்பட்டுள்ளதாக நான்காம் மாடி தகவல்கள் தெரிவித்தன.

கடந்த மே 25 ஆம் திகதி பலபிட்டி கடலில் வைத்து 243 கிலோ ஹெரோயின் கைப்பறறப்பட்டுள்ளது. இதன்போது கடற்படையின் உதவியும் பெறப்பட்டுள்ளது.  அந்த போதைப் பொருள் இருந்த படகில் 5 நவீன துப்பாக்கிகளும் இருந்தன. இதில் 5 ஆயுதங்களையும், 43 கிலோ ஹெரோயினையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் கடத்தல் காரர்கலுடன் தொடர்பில் உள்ள குழு தனியாக எடுத்து வைத்துள்ளனர். அந்த போதைப் பொருள் தற்போது மரண தண்டனை கைதியாக, பூசா சிறையில் உள்ள வெலே சுதா எனும் போதைப் பொருள் கடத்தல் மன்னனுக்கு சொந்தமானது. 

'கடத்தல்காரர்களால் தமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆயுதங்களே குறித்த 5 துப்பாக்கிகளும் என சந்தேகிக்கப்படுகின்றது. அவற்றில் ஒன்று பிரதான சந்தேக நபராக தேடப்படும் பொலிஸ் பரிசோதகருக்கு சொந்தமான இடத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையிலேயே, ஏனைய 4 ஆயுதங்களும் பாதாள உலகத்தவர்களின் கைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.' என தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுவரை CID யின் விஷேட விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன்  லமாஹேவாவின் ஆலோசனையின் கீழ், விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  லலித்த திஸாநாயக்க, பிரதான பொலிஸ் பரிசோதகர் மாதவ உள்ளிட்ட குழுவின் விசாரணைகளில் 19 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் சிவில் நபர்கள் என்பதுடன் ஏனைய 16 பேரும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களாவர். அவர்களின் பணிகள் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இதில் பொலிஸ் பரிசோதகர் விமலசேன லயனல், உப பொலிஸ் பரிசோதகர்களான  கயான் தரங்க பிரேமரத்ன சில்வா, அத்துல ஜயந்த பண்டார, பொலிஸ் சார்ஜன்களான  சமிந்த லக்ஷ்மன் ஜயதிலக, சமன் குமார ஜயசிங்க, சமில பிரசாத் வதுகார, பொலிஸ் கான்ஸ்டபிள்களான பிரியங்கர ஜயசேன,  ருவன் புஷ்பகுமார, அசாங்க இந்ரஜித் ரத்துகமகே, சமீர பிரதீப் குமார, லக்ஷான் சமீர வன்னியாரச்சி, லலித் ஜயசிங்க ஆகிய 12 பேர் விஷ போதைப் பொருள் மற்றும் அபின், அபாயகரமான ஒளதடங்கள் சட்டத்தின் 80 ஆவது அத்தியாயத்தின் கீழ், எதிர்வரும் 08ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏனைய மூன்று சிவிலியன்களும், உப பொலிஸ் பரிசோதகர்  உதார பிரேமசிறி,  சார்ஜன்களான  தனுக்க, வீரசிங்க மற்றும் கான்ச்டபிள்  ரத்நாயக்க அகையோர் பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரதான சந்தேக நபராக கருதப்படும்  பொலிஸ் பரிசோதகர் இதுவரைக் கைதுச் செய்யப்படாத நிலையில் அவரைத் தேடி நான்கு CID குழுக்களும் உளவுத் துறை குழுவும் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

 இதுவரையிலான விசாரணைகள் பிரகாரம், 2015 ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி, ஏபரல் 30 ஆம் திகதி, மே மாதம் 15 ஆம் திகதி ஆகிய திகதிகளில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிக்கொண்டு, பிரதான சந்தேக நபர்கள் நல்வருடனும் சேர்ந்து (பயங்கரவாத தடைச் அட்டத்தின் கீழ் உள்ள நான்கு பொலிஸார்) ஏனைய 12 பொலிஸ் உத்தியோகத்தர்களும் குறித்த பிரிவில் உள்ள வழக்குப் பொருட்களை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.

ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி கடற்படையினர் கைப்பற்றிய  ஐஸ் போதைப் பொருள் 500 கிலோ, 8 கிலோ ஹெரோயின், ஏப்ரல் 2 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட 581 கிலோ 34 கிராம் போதை மாத்திரைகள், 664 கிலோ ஐஸ் போதைப் பொருள் அகியனவும் சந்தேக நபர்களால் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. இவை ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ள 100 கிலோ வரையிலான ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுக்கு மேலதிகமான சம்பவங்களாகும்.

கடந்த இரு வாரங்களுக்கு  முதல் மினுவங்கொட பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஹான் மஹேஸ் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையொன்றின் போது ஐந்து கிராம் ஹெரோயினுடன் டையில் சமிந்த எனப்படும் சமிந்த தயா பிரியான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது ரிபிட்டர் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் திவுலப்பிட்டிய பகுதி தனியார் வங்கியொன்றினூடாக இலட்சக்கணக்கான பணம் பரிமாற்றப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது. 

அதிலிருந்தே பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த இந்த பாரிய மோசடி, குற்றம் அம்பலப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.