மீள் திறக்கும் பாடசாலைக்கு சமூகளிப்பதில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட சலுகை!

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு ஏற்கனவே வெளியிட்ட வழிகாட்டலுக்கு மேலதிகமாக 2020.06.22 அன்று இன்னுமொரு வழிகாட்டலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

அவ்வழிகாட்டலில் மேலதிகமான சில விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

01. பாடசாலைகளை சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணுவதற்கான முறையில் தயார்படுத்தவேண்டும். இச் செயன்முறை தினமும் கண்காணிக்கப்படல் வேண்டும். இதனை குறித்த பாடசாலையின் வலயத்தினது அதிகாரி ஒருவருக்கு பொறுப்புச்சாட்டிஅது தொடர்பான அறிக்கையைப் பேணி வரல் வேண்டும். 

மாணவ மாணவிகள் பாடசாலைக்கு வருதல் மற்றும் வெளியேறல் தொடர்பாக தமது பிரதேச, மாகாணத்திற்கு பொருத்தமான வகையில் முகாமை செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
02. ஆசிரியர்களுக்கு நேர அட்டவணை வழங்கும் போது பொருத்தமான வழிமுறையைக் கையாள முடியும் 

குறித்த ஒரு ஆசிரியருக்கு அன்றைய நாளின் முதலாவது பாடம் ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் அந்த ஆசிரியர் பாடசாலைக்கு சமூகமளித்தல் போதுமானது. குறித்த தினத்தில் அந்த ஆசிரியர் கடமைக்கு வரவில்லை எனில் அதற்கான மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். 

இந்நடைமுறை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார். 

1 பாடவேளை 1 மணிநேரமாக திட்டமிடப்படும்.

இச் சுற்று நிருபத்தின் 02 வது பிரிவில் விடயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த பாட ஆசிரியர் தனது பாடவேளை ஆரம்பமாவதற்கு முன் 30 நிமிடங்களுக்கு முன் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

உதாரணமாக -ஒரு ஆசிரியருக்கு 11.00 மணிக்கே முதற்பாடம் ஆரம்பமாகுமாயின் -
10.30 மணிக்கு சென்றால் போதுமானது.
அவர் காலை 7.30 மணிக்கே செல்லவேண்டும் என்ற அவசியமில்லை.

அத்துடன் - பி.ப 3.30 மணிவரை கற்பிக்கும் தேவை ஏற்படுமாயின் ஒரே ஆசிரியர் வாரத்தின் 5 நாட்களும் ஈடுபடாத வகையிலேயே நேரசூசி தயாரிக்கப்படவேண்டும்.

வாரத்தில் 1நாள் ஒரு ஆசிரியர் 3.30 மணிவரை நிற்கக்கூடியவாறே நேரசூசி தயாரிக்கலாம்.

இதனை அடிப்படையாகக் கொண்டு 3.30மணிவரை நிற்க வேண்டிய ஆசிரியருக்கு - அன்றைய தினம் முதல் பாடவேளையை பிந்திய நேரமொன்றுக்கு வழங்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பாகத் திட்டமிடலாம்.

இந்தத் திட்டமிடலுக்காகவே - முதல்வாரம் ஆசிரியர்களுக்கும்  அதிபர்களுக்கும் தரப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் கலந்துரையாடி ஆரோக்கியமாக நேரசூசி தயாரித்து கற்பித்தலைத் திட்டமிடவேண்டும்.

பாடசாலை மட்டங்களில் இத்தகைய விடயங்களைத் திட்டமிடலாம் என சுற்றுநிருபம் கூறுகிறது.

இந்த திட்டமிடலில் எல்லா பாடசாலைகளுக்கும் பொதுவான பொதுக்கட்டமைப்பு உருவாக்கத்தேவையில்லை. ஆசிரிய ஆளணியைப் பொறுத்து தனித்தனியாக திட்டமிடலாம்.

இந்த நடைமுறைகளுக்காகவே- தனியான ஆவணமொன்றில் கையொப்பமிட இந்தச் சுற்றுநிருபம் கூறுகிறது.

லீவு எடுப்பதாக இருந்தால் - குறித்த ஆசிரியரின் பாடவேளைக்கு பதிலீட்டு ஆசிரியரை வழங்கி லீவு எடுக்கவும் இந்த சுற்றுநிருபம் அனுமதிக்கிறது.

ஆ.தீபன் திலீசன்,
உபதலைவர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.
Previous Post Next Post