யுத்தத்தின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பாக இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்!

இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் இல்லையென்றால் அவர்கள் யுத்தத்தில் இறந்து விட்டனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் இராணுவம் ஆட்சியை கைப்பற்ற நினைக்கவில்லை. ஆனால் இராணுவத்தின் ஆதிக்கத்தை பலப்படுத்த ஜனாதிபதி நினைக்கின்றார். இது இராணுவ ஆட்சிக்கான முயற்சி அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவருமே இல்லை. யுத்த காலகட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப்புலிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி அவர்களை சமூகத்தில் இணைத்துள்ளோம்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலரை புலிகளே கொன்றனர். கொன்று அவர்களின் உடல்களை மறைத்தனர். அவ்வாறு மறைத்த உடல்களை எம்மால் எவ்வாறு கண்டறிய முடியும்.

காணாமல் போனவர்கள் என கூறும் நபர்கள் அந்த பட்டியலில் இருக்கலாம். அதேபோல் யுத்தத்தில் எமக்கு எதிராக போராடியவர்கள் கொல்லப்பட்டனர், ஏனையோர் சரணடைந்தனர்.

சரணடைந்த நபர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் காணாமால் ஆக்கப்பட்டதாக கூறப்படும் அல்லது தேடப்படும் நபர்கள் இல்லை என்றால் அந்த நபர்கள் இறந்திருக்க வேண்டும்.

யுத்தத்தில் இறந்தவர்களில் எமக்கு கிடைத்த சடலங்களை நாம் ஒப்படைத்துள்ளோம். செஞ்சிலுவை சங்கம் ஊடாக அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post