இந்திய - சீன எல்லை மோதல்; இந்திய இராணுவத்தினர் 20 பேர் பலி!

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன இராணுவத்தினரிடையே நேற்று (15) இரவு நடந்த மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேரும் இராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்றும் இராணுவ வீரர்களின் கைகலப்பே இந்த மரணங்களுக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலின்போது சீன தரப்பிலும் பாதிப்பு நிகழ்ந்துள்ளது என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன இராணுவத்தினரை இந்திய இராணுவத்தினர் தாக்கியதாக சீனா குற்றம் சாட்டுகிறது என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இந்திய மற்றும் சீன இராணுவங்களின் மூத்த அதிகாரிகள் இடையே பதற்ற நிலையினை தணிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.


Previous Post Next Post