இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளில் புதிய சம்பள ஒப்பந்தம் மற்றும் விபரம்!

SLC Chamari
இலங்கை கிரிக்கெட் வீரராங்கனைகள் மற்றும் வளர்ந்துவரும் வீராங்கனைகள் உட்பட  35 பேரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் புதிய ஒப்பந்தத்தில் இணைத்துக்கொண்டுள்ளது.

தேசிய வீராங்கனைகள் 20 பேரையும் வளர்ந்துவரும் வீராங்கனைகள் 15 பேரையும் மே மாதம் 01ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் ஆறு மாதங்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இணைத்துக்கொண்டுள்ளது.

ஆற்றல் வெளிப்பாடு, தயார்நிலை மற்றும் எதிர்காலத் தேவைகளை அடிப்படையாகக்கொண்டு தேசிய மகளிர் கிரிக்கெட் தெரிவுக் குழுவினரால் வீராங்கனைகள் இந்த ஒப்பந்தத்துக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

நான்கு வகையான பிரிவுகளில் தேசிய வீராங்கனைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் 'A' வகையில் அணித் தலைவி சமரி அத்தபத்து மாத்திரமே இடம்பெறுகின்றார்.

அனுஷ்கா சஞ்சீவனி, ஓஷாதி ரணசிங்க, இனோக்கா ரணவீர, நிலக்ஷி டி சில்வா, சுகந்திகா குமாரி, உதேஷிகா ப்ரபோதனி, ஹசினி பெரேரா, ஹர்ஷிதா மாதவி ஆகியோர் ‘B‘ வகையில் இடம்பெறுகின்றனர்.

டிலானி மனோதரா, ப்ரசாதினி வீரக்கொடி, கவிஷா டில்ஹாரி ஆகியோர் ‘C’ வகையிலும் அமா காஞ்சனா, இமல்கா மெண்டிஸ், இனோஷி பெர்னாண்டோ, அச்சினி குலசூரிய, ஹன்சிமா கருணாரட்ன, மதுஷிகா மேத்தானந்த, உமேஷா திமாஷினி, சத்யா சந்தீபனி ஆகியோர் ‘D’ வகையிலும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைவிட மல்ஷா ஷெஹானி, லிஹினி அப்சரா, தாரிகா செவ்வந்தி, ஜிமாஞ்சலி விஜேநாயக்க, ஹர்ஷனி விஜேரட்ன, ஷஷிகலா சில்வா, சச்சினி நிசன்சலா, இரேஷா சந்தமாலி, தாருகா ஷெஹானி நிலக்ஷனா சந்தமினி, ரோஸ் பெரேரா, ஜனாதி அனாலி, ஷிக்காரி நிவர்த்தனா, திலிஷியா சத்சரணி, சந்துனி நிசன்சலா ஆகியோர் வளர்ந்துவரும் வீராங்கனைகளுக்கான ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் வீராங்கனைகளுக்கான ஒப்பந்தத்தில் 'A' வகையில் இடம்பெறுபவர்களுக்கு 60,000 ரூபாவும் ‘B’ வகையில் இடம்பெறுவோருக்கு 50,000 ரூபாவும், 'C' வகையில் இடம்பெறுவோருக்கு 40,000 ரூபாவும், ‘D’ வகையில் இடம்பெறுவோருக்கு 30,000 ரூபாவும் மாதாந்த சம்பளம் வழங்கப்படும்.

இதனைவிட தேசிய குழாத்தில் இடம்பெறும் வீராங்கனைகளுக்கு சகாய நிதியாக 10,000 ரூபா மாதாந்தம்  வழங்கப்படும்.

வளர்ந்துவரும் வீராங்கனைகளுக்கு மாதாந்தம் 10,000 ரூபா சம்பளம் வழங்கப்படும். ஆனால், அவர்கள் சமுகமளிப்பதை அடிப்படையாகக் கொண்டே சம்பளம் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post