க.பொ.த உயர் தரப்பரீட்சைத் திகதி; மீள் நோக்கு செய்ய தீர்மானம்!

க.பொ.த உயர் தரப் பரீட்சை நடை பெறும் திகதியை மீள் நோக்கு செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

செப்டம்பர் 07ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் பரீட்சைக்குத் தயாராவதற்கான கால அவகாசத்தை  மூன்று வாரங்கள் வரையாவது வழங்குமாறு மாணவர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

கடந்த சனியன்று (13) மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கற்றல் இடம்பெறாமல் இழந்த காலப்பகுதியோடு ஒப்பிடும் போது பரீட்சை பிற்போடப்பட்டு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் போதுமானதாக இல்லை என பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாணவர்களின் கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அது தொடர்பான தீர்மானம் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

மாணவர்களின் கோரிக்கையின் பக்கமே முக்கியமானது. அரசியல்வாதிகளின் பக்கமோ, நிர்வாகிகளின் பக்கமோ முக்கிமானதல்ல என அமைச்சர் விளக்கினார்

இதேவேளை, அண்மையில் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் நியாயத்தை முன்வைத்து பரீட்சையை பிற்போடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அத்தோடு, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் மஹிந்த ஜயசிங்கவும் இக்கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post