மீண்டும் தலையெடுக்கும் கொரோனா: இரண்டாவது அலையால் அதிர்ச்சியில் பல நாடுகள்!

கொரோனா தொற்று குறைந்தது போல் குறைந்து பல நாடுகளில் மீண்டும் தலை தூக்க தொடங்கியிருப்பது மருத்துவ வல்லுநர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

உலகெங்கும் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்க, சில நாடுகளில் மட்டும் மூச்சை முடக்கும் இந்த வைரஸ், மீண்டும் தலையெடுத்துள்ளது. சீனாவில் கொரோனா வேகமாக பரவிக் கொண்டிருந்தபோது ஈரானிலும் பல ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

அங்கு கடந்த 2 மாதங்களாக தொற்று பாதிப்பு ஓய்ந்திருந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஈரானில் தினசரி 3,000 பேருக்கும் அதிகமாக வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் உயிரிழப்பு 100ஐ கடந்ததும் ஈரானில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது செகண்ட் வேவ் எனப்படும் இரண்டாவது அலை ஆக மாறிவிடுமோ எனஅங்கு கவலை நிலவுகிறது.


கோவிட் 19 வைரஸ் முதன்முதலில் தோன்றிய சீனாவிலும் பெய்ஜிங் நகரில் தற்போது புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டதால் அந்நாட்டுஅரசு அரண்டு போயுள்ளது.

இதுபோல் இஸ்ரேலிலும் புதிய தொற்றுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இஸ்ரேலில் ஏப்ரலில் அதிகரித்துக் காணப்பட்டகொரோனா தொற்று மே மாதத்தில் ஓய்ந்திருந்தது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தினசரி 500 பேருக்கும் அதிகமாக தொற்று ஏற்பட்டு வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என அந்நாட்டு நாடாளுமன்றத்தில்ஆலோசிக்கப்பட்டுள்ளது.


சவுதி அரேபியாவில் மே இறுதிவாக்கில் தினசரி தொற்று 1,500-க்கும் குறைவாக சரியத் தொடங்கியபோது அந்நாடு நிம்மதிப் பெருமூசச்சு விட்டது. ஆனால் தற்போது இரண்டாம் அலை வீசத் தொடங்கி தினசரி பாதிப்பு 3,500 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல் ஐரோப்பாவில் போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தொடங்கியிருக்கிறது.
Previous Post Next Post